பினாங்கு பிகேஆர், அமனா நான்கு இருக்கைகளை பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுக்கின்றன

 

பினாங்கு ஹரப்பான் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான இருக்கைகள் ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகளின் 10 ஆண்டு மாநில ஆட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இன்றிரவு நடக்கும் அந்நிகழ்ச்சியில் மாநில ஹரப்பான் தலைவர் லிம் குவான் எங் ஹரப்பான் இருக்கை ஒதுக்கீடுகள் குறித்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி பாடாங் கோத்தா லாமாவில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் குவான் எங்குடன் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட், துணைத் தலைவர் வான் அஸிசா இஸ்மாயில் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.

இருக்கைகள் பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை ஒரு முட்டுக்கட்டை நிலையை எட்டிவிட்டதாக கடந்த மாதம் கூறப்பட்டது. அப்பிரச்சனை கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்திடம் கொண்டுசெல்லப்படும் என்றும் கூறப்பட்டது.

டிஎபிக்கு கூடுதல் இருக்கைகள் ஏதும் இல்லை. அது 2013 ஆம் ஆண்டில் போட்டியிட்டு வென்ற 19 இருக்கைகளில் போட்டியிடும்.