தமிழ்ப்புத்தாண்டு

 • கி. சீலதாஸ், மார்ச் 12, 2018.                 

உலகின்  மிகப் பெரும்பான்மையான    சீனர்கள்  ஒரே  தேதியில்  அவர்களின்  புத்தாண்டு  பிறப்பைக்  கொண்டாடுகிறார்கள்.  உலகக்  கிறிஸ்தவர்களும்  ஒரே  நாளில்,   அதாவது  ஜனவரி  முதல்  தேதியை,  புத்தாண்டு  நாளாகக்  கொண்டாடுகின்றனர்.  இஸ்லாமியர்களும்  குறிப்பிட்ட  ஒரே  தேதியில்தான்  தங்களின்  புத்தாண்டு  நாளைப்  பேணுகின்றனர்.

பொதுவாக,  ஜனவரி  முதல்  தேதியை  புத்தாண்டின்  முதல்  நாளாகாக் கொண்டு  பலநாடுகளில்  விடுமுறையாகப்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  மலேசியாவில்  பினாங்கு,  மலாக்கா,  நெகிரி  செம்பிலான்,  சிலாங்கூர்,  பேராக்,  சாபா  சரவாக்   மாநிலங்களில்   ஜனவரி  முதல்  தேதி  புத்தாண்டு பொதுவிடுமுறையாக  கொண்டாடப்படுகிறது.

இந்தியாவை  எடுத்துக்கொணடால்  பெரும்பான்மை  மாநிலங்கள்  சித்திரை  முதல்  தேதியை  புத்தாண்டாகக்  கொண்டுள்ளன.  தமிழ்  நாட்டை  எடுத்துக்கொண்டால்  தமிழ்ப்புத்தாண்டு  எனும்போது  அரசியல்  கட்சிகளின்   விருப்பப்படி  புத்தாண்டு  நாளைக்  கொண்டாட  வேண்டிய  சங்கடத்தில்  தமிழர்கள்  இருக்கின்றனர்.

முதன்  முதலில்    திராவிட  முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சி.என்.அண்ணாதுரை முதலமைச்சராக  1967இல்  பதவி  ஏற்றார்.  தமிழகம்  தனி  அடையாளத்தைக்  காணும்  பொருட்டு  மதராஸ்  மாநிலம்,  தமிழ்  நாடு  என்று  சட்டப்படி  பெயர்  மாற்றம்  கண்டது. பல  சீர்த்திருத்தங்கள்  செய்தபோதிலும்    தமிழ்ப்புத்தாண்டு  குறித்து  எந்த  மாற்றமும்  செய்யப்படாததைக்  கவனிக்க  வேண்டும்.

இருபதாம்  நூற்றாண்டில்  இறுதிவரை  திராவிட  இயக்கங்களான  திமுக,  அண்ணா  திராவிட  முன்னேற்ற  கழகம்தான் (அதிமுக)  மாறி,மாறி  தமிழ்  நாட்டு  அரசு  நிர்வாகத்தை  அலங்கரித்தன.  அப்போதெல்லாம்  தமிழ்ப் புத்தாண்டு   தினத்தில்  மாற்றம்  காணவேண்டும்  என்று  எந்த  நடவடிக்கையும்  எடுக்கபப்படவில்லை.   இந்த  நூற்றாண்டில்  ஆரம்பத்தில்  திமுக  ஆட்சியின்போது  தை  மாதத்தின்  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  பிறப்பு  என்று   அறிவிக்கப்பட்டது.

திமுக  ஆட்சியில்  அமலாக்கப்பட்ட  தைமுதல்  தேதிதான்  தமிழப்புத்தாண்டின்  முதல்  நாள்  என்றபோதிலும்  பெரும்பான்மை  உலகத்  தமிழர்கள்  சித்திரை  முதல்  தேதியையே  தமிழ்ப்புத்தாண்டின்  முதல்  நாளாகக்  கொண்டாடினர்.  தை  முதல்  தேதியை  பொங்கல்  விழாவாகக்  கொண்டாடினர்.  அதிமுக  தமிழக  ஆட்சி  பீடத்தில்  அமர்ந்ததும்  சித்திரை  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  முதல்  நாள்  என்று  பழைய  நிலைக்குத்  திரும்பியது.  இதனால்  தைமாத  முதல்  தேதியே  தமிழ்ப்புத்தாண்டின்  பிறப்பு  என்ற  திமுகழகத்தின்  அறிவிப்பு  இரத்தானது.  இந்த  மாற்றத்தால்  தமிழகத்தில்  புரட்சி  வெடிக்கவில்லை.  மாறாக  கொண்டுவரப்பட்ட   புத்தாண்டு   அவர்களுக்கு  மகிழ்வைத்  தந்தது.  இதுதான்  உண்மை  நிலவரம்.  இந்தப்  புத்தாண்டு  முதல்  தேதி  தகராறு  திமுக  அதிமுக  அரசியல்  கவுரவப்  பிரச்சினையே  அன்றி  மக்களைத்  கவர்ந்ததாகச்  சொல்வதற்கில்லை.

தமிழ் நாட்டில்  காணப்படும்  இந்தப்  புத்தாண்டு  தினப்  பிறப்பைக்  குறித்த  சிக்கல்,  அரசியல்  போட்டாப்போட்டி  பிற  இந்திய   மாநிலங்களில்  கிடையாது.  அதோடு,  பெரும்பான்மை  தமிழர்கள்,  எதிரும்புதிருமாக  இயங்கும்  அரசியல்  கட்சிகள்கூட  ஜனவரி  ஒன்றாம்  தேதியை  வருடப்பிறப்பாக  கொண்டாடுவது  வியப்பல்ல.  அதோடு,  மஹராஷ்திரா,  ஆந்திரா,  தெலுங்கானா,  கர்நாடகா  ஆகிய  மாநிலங்கள்  உகாதியை  வருடப்  பிறப்பாக  கொண்டாடுவதில்  ஒற்றுமை  காண்கிறார்கள்.  கேரளத்தில்  சித்திரை  முதல்  தேதியை,  விஷூ,( பதினான்காம்  தேதி  ஏப்ரல்  மாதத்தில்)  கொண்டாடுகிறது.  எனவே,  அவர்கள்  யாவரும்  ஒரே  தேதியில்  தங்கள்  வருடப்  பிறப்பைக்  கொண்டாடுகிறாகள்.  தமிழர்களோ,  தமிழ்  நாட்டுத்  தமிழர்கள்,  அரசியல்வாதிகளின்  சொந்த  விருப்பத்திற்கு  மதிப்பளிக்க  வேண்டிய  கட்டாயத்தில்  இருக்கிறார்கள்.  இலங்கைத்  தமிழர்கள்கூட  சித்திரை  முதல்  தேதியை  புத்தாண்டாகக்  கொண்டாடுவதில்தான்  மகிழ்ச்சி  என்கிறார்கள்.

தமிழ்  நாட்டிலேயே  தமிழ்ப்புத்தாண்டு  தேதி  குறித்த  குழப்பம்  நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை  இந்த  நாட்டில்  இறக்குமதி  செய்வது  எந்த  வகையில்  நியாயம்?  தமிழர்களின்  அடையாளம்,  தன்மானம்  எந்த  மாதத்தில்  தமிழ்ப்புத்தாண்டு  பிறந்தது  என்ற  வாதத்தில்  அல்ல.  இந்த  நாட்டில்  தமிழர்களின்  அவலநிலை  நாளுக்கு  நாள்  பல்வேறு  மாதிரியான  வடிவம்  பெற்று  நம்மை  துன்புறுத்துவதைக்  கவனிக்காமல்,  தமிழ்  நாட்டு  குழப்பத்திற்கு    இடமளித்து  நம்  தன்மானத்தை  இழந்துவிடக்கூடாது.

எந்த  மாதம்  தமிழ்ப்புத்தாண்டு  பிறக்கிறது  என்பதல்ல  இன்றைய  மலேசிய  தமிழர்களின்  பிரச்சினை.  இந்த  வாதத்தில்  கரிசனம்  காட்டுவோர்  தமிழ்ச்  சமுதாயத்தின்  நலனை  மனதில்   கொள்வது  சிறப்பாக  இருக்கும்.

இந்நாட்டுத் தமிழர்களுக்கு அல்லது பொதுவாக இந்தியர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உண்டு. அது என்னவெனில், தங்களின் அடையாளம் சிறப்புமிக்கதாக இருப்பதோடு, பிறர் மதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கவேண்டும். அதுதான் நமது  இலக்காக  இருக்கவேண்டும். தமிழ்நாட்டு அரசியலும்,  அங்குமேவும்  குழப்பமும்,   அங்கு  பரவலாக  தலைவிரித்தாடும்  அநாகரிக அரசியல் போக்கும், அசிங்கமான அரசியல் வழக்கமும்  பின்பற்றுவதற்குத்  தோதானவை  அல்ல.

 

 

SHARE THIS STORY :    

RELATED POSTS

ID); $tagIDs = array(); if($tags){ $tagcount = count($tags);for($i = 0; $i < $tagcount; $i++){ $tagIDs[$i] = $tags[$i]->term_id; }$args = array( 'tag__in' => $tagIDs,'post__not_in' => array($post->ID), 'showposts'=>5, 'caller_get_posts'=>1); $my_query = new WP_Query($args); if( $my_query->have_posts() ){ while ($my_query->have_posts()) : $my_query->the_post(); ?>

No related posts found!

   

உங்கள் கருத்துகளை பதிவுசெய்யுங்கள் (Share Your Comments)

விதிமுறைகள்: கருத்து ஆபாசமானதாக, அருவருக்கத்தக்கதாக, பிறரை அல்லது பிறரது சமயத்தை, சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. அவ்வாறான கருத்துகள் அனுமதிக்கப்படாது. கருத்து சுருக்கமாகவும் பொறுப்புடனும் தெரிவிக்கப்பட வேண்டும். நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்கு நீங்களே முழு பொறுப்பாளி.

 • தேனீ wrote on 12 மார்ச், 2018, 13:43

  #தமிழ் நாட்டிலேயே தமிழ்ப்புத்தாண்டு தேதி குறித்த குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை இந்த நாட்டில் இறக்குமதி செய்வது எந்த வகையில் நியாயம்?#

  கட்டுரையாளர் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தலில் ஆச்சரியமில்லை. ஆனால் அவருடைய் முடிவான ஆலோசனையை சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

  தமிழ் நாட்டுத் தமிழர்க்களைக் காணும்போது, அவர்களை இந்தியாவுடனும் அந்நாட்டில் இந்து மதம் என்ற பெயரில் வைதிக மத நெறிகளையும், கொள்கைகளையும் அமுல்படுத்தி தமிழர்களை ஆதிக்கம் செய்து வந்து ஏறக்குறைய 1,100 ஆண்டுகள் ஆகி விட்டன.

  மேலும் இன்றைய தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் திராவிடக் குடும்பம் என்ற பெயரில் தென்னக மாநில மக்கள் அனைவரும் கலந்துள்ளனர்.

  இதில் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தெலுங்கு மொழி பேசுவோர் மட்டுமே 8.65% இருந்துள்ளனர். காலாங்காலமாக ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்த தெலுங்கு மக்கள் இன்று தமிழ் பேசி பிரித்தறிய முடியாமல் போய்விட்டது. இவர்களையும் சேர்த்தால் தெலுங்கு வமிசாவழி மக்கள் தமிழ் நாட்டில் 20%-க்கு குறையாமல் இருப்பார். சென்னையில் தெலுங்கு வழி வந்த மக்களே 1970ஆம் ஆண்டுகள் வரை 60% வரை வாழ்ந்தனர்.

  இன்னும் மலையாள மொழி மற்றும் இதர இந்திய மாநில மொழி பேசுவோரைச் சேர்த்தால் ஏறக்குறைய 30%க்கும் குறையாத தமிழ் நாட்டு மக்களில் மற்ற மாநில தாய்மொழியைப் பேசுவோர் அல்லது பூர்வீகமாகக் கொண்டோர் உள்ளனர் என்று கூறலாம்.

  இதன் காரணமாகவே தமிழ் நாட்டில் தமிழர் என்ற பெயரில் எந்த ஒரு
  அரசாங்க கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டாலும் அதற்கு எதிர்ப்பும் கீழறுப்புச் செயல்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

  வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் வந்தேறிகளில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து சிறப்பாக வாழ்கின்றனர். வறிய நிலையில் வாழ்வோரில் தமிழரே பெரும்பான்மையோர். .

  மாநில ஆட்சியில் காலாகாலமாக காங்கிரஸ் ஆட்சி முடிந்து திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தது. இதில் திராவிட ஆட்சி என்பது தமிழரும் பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து குடியேறி பார்ப்பனர் ,இந்தி எதிர்ப்பு வெறியை தமிழர் மீது ஏத்தி தமிழரின் அறிவீனத்தைப் பயன்படுத்தி குளிர் காய்ந்து வருவோரே. இன்று அவரும் தமிழராகி விட்டனர்.

  இப்படி பார்ப்பனர் இந்தி மொழி எதிர்ப்பு கொள்கையை முன் வைத்து அரசியல் நடத்தி தமிழரிடையே இறை மறுப்புக் கொள்கையை முன் வைத்தவரும் இந்த திராவிட கருத்தியல் அயோக்கியர்தாம்.

  தமிழரில் பெரும்பான்மையோர் இறை கொள்கையை ஏற்றுக் கொண்டவரே. அவ்வாறு இறை கொள்கையை ஏற்றுக் கொண்டோர் தங்களின் மதம் ‘இந்து மதம்’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவரே.

  இவர்களுக்கு இந்து மதம் என்றால் அது புராணக்கதைகளின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு மதம் என்பது மட்டுமே தெரியும். அதற்கு மேல் அறிவார்ந்த சமய நெறிகள் உள்ளதை பெரும்பான்மையோர் அறியார்.

  இத்தகைய பின்னணியில்தான் சோதிட நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு 60 ஆண்டு சுழற்சி முறையை பல்லவர் காலத்திலிருந்தே சக அல்லது சாலிவாகண ஆண்டு கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இது சாளுக்கிய மன்னர் ஆட்சியில் அமர்ந்த கால கணக்கைக் கூறும். அதற்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு என்று கட்டுரையாளர் ஆராயாமல் போனது நமது போதாத காலமே.

  சோதிடத்தை நம்பி வாழும் தமிழர் பெரும்பாலோர். இதில் மதம் மாறி போன தமிழரில் பலரும் சோதிடம் பார்க்கப் போவது விந்தை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான். தமிழ் நாட்டு அறிஞர் வைதிகப் பிடியிலிருந்து விலகி தமிழருக்குத் தனித்த அடையாளம் வேண்டுமென்று திருவள்ளுவர் ஆண்டு கணக்கை ஏற்படுத்தியது. அது பொங்கல் நாள் முதல் கணக்கிட மேற்கொண்டது.

  தமிழ் நாட்டில் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கு முறை இருந்தது கிடையாது. ஒவ்வொரு அரசரும் பதவியேற்ற காலம் முதல் ஆண்டு கணக்கு தொடங்கி அவர் ஆட்சி முடிவடைய ஆண்டு காலம் முடியும்.

  ஆதலால் தமிழர் அவர்தம் அடையாளத்தை நிலை நிறுத்த தமிழர் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டு என்றாகியது.

  தமிழ் நாட்டில் இது தோல்வி கண்டதற்குக் காரணம் அதை சட்டமாக முன்மொழிந்த கலைஞர் குடும்பமே பின்பற்றாது போனதுதான். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை அவர்தம் குடும்பமே பறை சாற்றி வருகின்றது.

  ஆனால் மலேசியாவின் நிலமை வேறு. நாம் மலேசிய குடிமகன் என்னும் அடிப்படையில் மலேசியராக வாழ்கிறோம். இந்தியன் என்று கூறுவதற்கு நமக்கு அருகதையில்லை காரணம் நாம் இந்திய குடியுரிமைக் கொண்டோர் அல்ல.

  அதேபோல் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான தமிழரின் அறியாமையின் காரணமாக அவர் இந்து என்று கூறி வைதிக நெறிகளையும் பண்பாடுகளையும் அவர் மீது ஏத்தி வைத்துள்ளனர். அந்த குட்டையில் மூழ்கிப் போன தமிழருக்கு அதிலிருந்து மீண்டு வர வழி தெரியவில்லை.

  மலேசிய தமிழருக்கு இத்தகைய தடையில்லை.நாம் சுயமாக சிந்தித்து நமது சமயம் எது என்று அறிந்து அதன் வழியில் நிற்கவும் அதன் அடிப்படையில் வாழவும் உரிமை பெற்றுள்ளோம். அதனால் நாம் நமக்கு வேண்டிய புத்தாண்டு முறையை கடைப்பிடிக்க உரிமையும் தகுதியும் பெற்றுள்ளோம் என்பதை கட்டுரையாளர் அறிவாராக.

  இவ்விடயத்தில் தமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி காட்ட தகுதியற்றோராகி விட்டனர் என்பதால் குருடும் குருடும் குருட்டாட்டமாடி குழியில் விழ வேண்டிய அவசியம் மலேசிய தமிழருக்கு இல்லை என்பதை கட்டுரையாளர் அறிவாராக.

 • Dhilip 2 wrote on 12 மார்ச், 2018, 18:53

  ஐயா அறிவு ஜீவிகளா, உலகம் இந்த பிரபஞ்சத்தில் சுற்ற தமிழ் தெலுகு மலையாளம் என்ற எந்த மொழியும் தேவையில்லை ! Hindu என்ற வார்த்தை கூட தேவை இல்லை ! இன்னமும் சொல்ல போனால் மதங்களால் பலமுறை இந்த கணிப்பு தவறாக விநியோகிக்க பட்டுள்ளது ! உதாரணத்திற்கு : உலகம் தட்டையானது என்றும் சூரியனே பூமியை சுற்றுகிறது என்றும் கிறிஸ்துவ மத போதகர்களால் வலுகடடாயமாக மக்கள் மீது திணித்தார்கள் . ஆனால் கலீலியோ 16 வது நூற்றாண்டில் இது தவறு என்று சுட்டி காட்டி வியாழ கிரகம் சுற்றும் வரைபடத்தை அறிஞ்சர் பெருமக்களுக்கு தந்தார். உடனே அவரை வீட்டு காவலில் 7 வருடம் சிறை வைத்து , பிறகு இரு கண்களையும் நொண்டி , அவர் புத்தகங்களை அவருடன் எரித்தவன் , ஒரு கிறிஸ்துவ மதவாதி ! எனவே மதவாதிகளால் இந்த அறிவியல் பரிணாம வளர்ச்சிக்கு ஒரு ஆணியும் அடிக்க முடியாது என்பது என் கருத்து ! அவ்வகையே, இந்து மதத்தில் கூட வருடம் இரவையும் பகலையும் சரி சமமாக பிரிக்கும் நாள் சித்திரை ஒன்றாக இருக்கும் என்று எண்ணி , அங்கிருந்தே இந்த வருட பிறப்பை கணக்கிடிருந்தார்கள் ! இது உழவுகாலத்தையும் தாண்டி பின்னோக்கி கட் காலத்திலும் நடந்திருக்க வேண்டும் ! ஆனால் இதுவும் தவறு என்று இன்றைய மாடர்ன் அறிவியல் உணர்த்துகிறது ! இந்த நாள் 20 March and 23 September வருகிறது என்கிறது அறிவியல் ! எனவே தேவையில்லாமல் வாயாலே வடை சுடுவதை அறிஞர் பெருமக்கள் நிறுத்த வேண்டும் என்பது என் ஆசை !

 • Unmai wrote on 12 மார்ச், 2018, 22:07

  கட்டுரையாளர் தன் கருத்தை முன் வைக்கும் பொழுது அதை எல்லோரும் பின் பற்ற வேண்டும் என்ற குறிக்கோள் அவருக்கு உண்டு என்பது போல உள்ளது. மதம் என்பது அவரவர் வழி பாடு கொண்டது. இதில் ஏன் நீங்கள் சீனர்கள், இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்கள் என்று எல்லோரையும் இழுக்க வேண்டும். தமிழன் தோன்றிய வரலாறு மறு ஒரு முறை படித்து வர வேண்டும் என கேடுகொள்கிறேன். திரு. தேனீ அவர்கள் நல்ல விளக்கம் கொடுத்து உள்ளார். அவரின் அந்த கருத்தை அப்படியே நான் வரவேற்கிறேன். அவர் எழுத்தில் சிறிதும் மாறுபாடு இல்லை. உங்களை போன்றவர்கள் சதா ஏதோ சொல்லவருகிறேன் என்று நினைத்து எழுதுவது வியப்பாக உள்ளது. தமிழன் மரபுகள் தெரிந்தால் நீங்கள், மஹராஷ்திரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா இவர்களை முன் வைத்து கருதுக்கள் கூறுவது ஒன்றும் புரியவில்லை. இதில் இலங்கை தமிழர்களையும் நீங்கள் இங்கே குறிபிட்டும் உள்ளீர்கள். மறு ஒரு முறை திரு. தேனீ அவர்களின் கருத்தை படிக்கவும். நன்றி

 • 'வெடுக்' வீராசாமி wrote on 13 மார்ச், 2018, 10:10

  தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.
  பொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்துக்கு கொண்டு சென்றால் உலகத்தமிழன் எந்த வகையில் முன்னேற்றம் அடைந்து விடப்போகிறான்? அல்லது சித்திரையிலேயே அனுசரிக்கப்பட்டால் இன்னும் எந்த வகையில் தாழ்ந்து விடப்போகிறான்?
  தமிழ் மொழியினுள் அந்நிய மொழி புகுந்து தமிழின் சிறப்பை சிதைத்து விடக்கூடாது என்று கொடி பிடிக்கும் கூட்டம் நம்மில் ஒரு புறம். இவர்கள் அந்நியன் கண்டு பிடிக்கும் பொருள்களுக்கும் தமிழில் பெயர் (அது கரடு முரடானதாக இருந்தாலும்) வைக்கத் துடிக்கிறது. அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…? ம்…..
  இதே வாரம் நம் நாட்டு ஊடகம் ஒன்றில் செம்மொழி பெருமை பேசும் ஒருவர் (Facial Mask) என்பதை முக முடி, முக முடி என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினார். முக முடி என்றால் மீசையா? தாடியா? இதற்கும் இந்த (Facial Mask) க்கும் என்ன சம்மதம்? முக மூடி என்பதை முக மூடி என்று நெடிலாக உச்சரிக்க இயலாமல் முகமுடி என்று குறிலாக உச்சரித்து விட்டு நான் செம்மொழி பேசுகிறேன் என்பதில் என்ன பெருமை?
  இதே போலவே, பல தொழில்நுட்ப சொற்களை ஆங்கிலத்திருந்து தமிழுக்கு கொண்டுவ்ருகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கரடு முரடாக மொழி பெயர்க்கிறார்கள்.
  ஒரு தடவை இரண்டு தடவை என்று சொல்வதில் வரும் தடவை என்ற சொல்லுக்கு மாற்றாக ‘வாட்டி’, அல்லது ‘தாட்டி’ என்றும் மாதிரி என்பதை ‘மாறி’ என்றும் இவர்கள் (ஊடகத்தார்) மாற்றி உச்சரிப்பதும் ஏன்?
  நம் தமிழ் இனத்தில் தமிழர்கள் பலர் தமிழை விட்டே ஒதுங்கி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்தி நிறுத்தி இழுத்துப் பிடித்து தம்ழைக் கற்க வைக்க தமிழ் மொழியை மேலும் எளிமைப் படுத்தினால் ஆகுமா? கரடு முரடு படுத்தினால் ஆகுமா?
  மேலே நான் சொன்னதெல்லாம் உதாரணங்களே… (உண்மையில் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது)
  முந்தா நாள் பெய்த மழையில் நேற்று பூத்த காளான் போல இருக்கும் ஓர் இனத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் இனம். எங்கள் கலாச்சாரத்தில் இருந்துதான் தமிழ் கலாச்சாரம் உருவானது. நாங்கள் அணிந்து தூக்கிப் போட்டது தான் உங்கள் புடவையும் வேட்டியும் என்கிறான் அவன். அதையும் நாம் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்?
  இந்த லட்சணத்தில் சித்திரையில் இருந்து ‘தை’க்கு தமிழ்ப் புத்தாண்டை இறக்குமதி செய்வதால் உலகத் தமிழன் அடையப் போகும் நன்மைகள் தான் என்ன?
  சரி. சரி. வழக்கம் போல இங்கே சிலர் என் மீது எகிறிப்பாய்வார்கள், பிறாண்டுவார்கள் என்றும் தெரியும்.
  தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் சித்திரை மாதத்திலும், நாங்கள் தமிழர்கள் அல்ல ‘டம்மி’ழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்வோர் தை மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுங்கள். தீர்ப்பு சரியா?
  அடேய்…அங்கே என்ன சத்தம். என்னது…நாட்டாமை தீர்ப்பை மாத்தணுமா?

 • s.maniam wrote on 13 மார்ச், 2018, 15:44

  எங்களுக்கு தெரிய வேண்டியது ஒன்றுதான் தமிழனுக்கு எது வருட பிறப்பு ! தை யா ! சித்திரையா ! மலேஷியா தமிழனுக்கு தெரிந்த வரை ! தை முதல் நாள் பொங்கல் திருநாள் ! சித்திரை இந்து வருட பிறப்பு ! தமிழனுக்கு எல்லா வட்ரிலும் முரண் பாடுதானா ?!திராவிடனும் ! பார்ப்பனனும் ! நமக்கு தேவையில்லை ! மலேஷியா தமிழனுக்கு எது தேவை அதை சொல்லுங்கள் ! அல்லது தமிழன் ! கல் தோன்றா ,மண் தோன்றா ,காலத்தில் தோன்றிய இனம் என்பதால் வருட பிறப்பே இல்லையா ! தமிழனுக்கு நாள் காட்டி கிடையாதா !!

 • Unmai wrote on 13 மார்ச், 2018, 19:59

  வந்து விட்டார் ஒரு தமிழ் பித்தன், தமிழுக்காக போர் கொடி ஏந்தி இவர் சொல்வது எல்லாம் சரி என தமிழர்கள் நாம் சரி என சொல்லவேண்டும் மாம் என்ன கொடுமை சார் இது. இதில் புனை பெயர் வேறு. வெட்டுக்கிளியை போல் அவ்வப்போது உலா வரும் ஒரு கிறுக்கர். மொழி மீதும் தமிழ் மீதும் இவர் சொல்லும் கருத்துகள் அதில் கை வைக்காமல் இருந்தால் சிறப்பாக இருக்கும். தமிழர்கள் தை பொங்கலை தான் தமிழனுக்கு வருட பிறப்பு என இங்கும் ஒரு சில தமிழ் பத்திரிகைகள் சொல்கின்றன.
  இந்து என்ற ஒரு மதத்தை வைத்து அதில் தமிழையும் சேர்க்க வேண்டும் என கூவும் சிலரை என்ன சொல்வது. தமிழ் நாடு அரசியல் கோமாளிகளை கொண்டு வந்து இங்கே நீங்கள் சொல்வதை நியாயம் படுத்த வேண்டாம். தமிழுக்கு முதல் நாளே பொங்கல் எனவும் அதுவே தமிழ் புத்தாண்டு என வகுத்து நாம் கொண்டடடி வருகிறோம்.
  பார்ப்பனனும், திராவிடனும் இரு கோமாளிகள் இவன்கள் சொல்வதை இனி வரும் நமது தமிழ் சமுதாயம் உணரவேண்டும். புத்தன் பிறந்தது இந்தியா அங்கே பெரிய இடம் கொடுத்து இந்திய வரவேற்கவில்லை அன்றும் இன்றும் அனால் உலகம் அவரை கொண்ட்டடுகிறது. காரணம் பிராமணன் எங்கே தமக்கு வருமானம் வராமல் போய்விடும் என எண்ணி அந்த மதத்தை தலை தூக்க விடவில்லை. விடாமல் ஆக்கி விட்டான். அதே போன்று தமிழர்களையும் சிறுக சிறுக அவன்கள் தன் வசம் வைக்க அதில் ஜாதிகள் உருவாக்கி திருப்பி வைத்தான்.
  கோவில்களில் பிராமணன் அவன்களின் மொழியில் வேதம் ஓதுகிரான். அதை தமிழில் செய்யலாமே. அதை முதலில் கேளுங்கள். அதே வேலையில் அவர்களை அவர்களின் வேதம் ஓதும் மொழிகளிலேயே அவர்களின் விட்டிலும் உரையாட சொல்லுங்கள். அதுதான் உண்மையாகவும் அவன்கள் விசுவசிகளவும் இருக்க முடியும். தை பொங்கல் திருநாட்களில் தமிழர்கள் மிகவும் சந்தோசம்மாக தத் தம் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டடும் பொழுது அதில் கிடைக்கும் சந்தோஷம் இருக்கே மிக பெரியது.
  சித்திரை மதத்தில் வரும் புத்தாண்டு என்ன விஷயத்தை கண்டிர்கள். கோவிலுக்கு போய் பிராமணன் செய்யும் பூசையில் நமக்கு தெரியாத மொழியில் அவன்கள் ஓதும் அந்த வாசகத்தை கேட்டு வரும் நாம் நமக்கு என்ன கிடைக்கிறது என்று சொல்லுங்கள். இது ஒரு பைத்தியகரமான செயல் இல்லையா.

 • 'வெடுக்' வீராசாமி wrote on 13 மார்ச், 2018, 22:31

  யாகாவாராயினும் நாவடக்கம் மிக மிக அவசியம்.
  அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். இது அய்யன் வள்ளுவன் சொன்னது. ஒருவிரல் அடுத்தனை சுட்டும் வேளை மறுவிரல் அனைத்தும் தன்னைச் சுட்டுவது கண்டிலையோ? கபோதியோ?

 • Dhilip 2 wrote on 13 மார்ச், 2018, 22:55

  வாயிலையே வடை சுடும் சிங்கங்களா …
  என் தங்கங்களா ….
  பாயிலையே பொரண்டும் சோகங்களா
  தமிழ் சொந்தந்தங்களா .. (பல்லவி)
  (தாளம்:சிஸ்ரம், பாவம்: வைகைப்புயல் வடிவேலு)
  அணு பல்லவியும் சரணத்தையும் வேறு ஒருநாளில் தருகிறேன் ….

 • தேனீ wrote on 13 மார்ச், 2018, 23:40

  #தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.#

  விடிய விடிய இராமயணம் கேட்டு இராமன் சீதைக்கு சித்தப்பாவா? என்று கேட்பது போல் உள்ளது.

  தமிழ் நாட்டுத் தமிழர் தமிழராக வாழ உத்வேகம் கொண்டு எழுந்த காலம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். அந்த உத்வேகம் இருந்த தமிழறிஞர் இன்று குறைந்து விட்டனர். அதனால்தான் வீராசாமிக்கும் வெடுக்குசாமிக்கும் வேப்பிலை அடித்துப் பேய் ஓட்ட வேண்டுமென்று தோன்றுகின்றது.

  முதலாவது, தமிழ் நாட்டு புராதண சிவாலயங்கள் எதிலாவது ஏழாம் நூற்றாண்டில் பாடப்பட்ட தேவாரத்தில் குறிக்கப்படும் இறைவனின் இறைவியின் தமிழ் பெயர் உண்டா? இன்று அனைத்தும் சமசுகிரத பெயர்களுடைய இறைவனாக மாற்றப்பட்டு விட்டன. அதை பழையபடிக்கு தமிழ் பெயர் கொண்டு அழைக்க அந்த தமிழ் நாட்டுத் தமிழர்களில் பெரும்பகுதியினருக்குத் துப்பில்லை அல்லவா? அப்புறம் எதற்கு அந்த தமிழ் நாட்டுத் தமிழர்களோடு மலேசியத் தமிழரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க வேண்டும்?

  தமிழ் கடவுள் முருகன் என்று கூறும் தமிழ் நாட்டு முருக தலங்களில் தமிழில் வழிபாடு உண்டா? இதை கூட மாற்ற முடியாத தமிழ் நாட்டுத் தமிழரா நமக்கு நல்ல வழி காட்டியாக முடியும்?

  அப்புறம் எப்படி தமிழ் நாட்டுத் தமிழருக்கு தமிழ்ப் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டாக இருக்க வேண்டுமென்ற சிந்தனை பிறக்கும்?

  திருவள்ளுவருக்குக் கூட தமிழர் முதலிடம் கொடுக்க மறுத்தால் நாளை திருக்குறளையும் பக்கத்து மாநிலத்தவர் கடத்திச் சென்று விடுவார். இப்பொழுதே தமிழ் சமணர் என்று கூறிக் கொண்டு திருக்குறள் சமணர் நூலென்று கூறி இணையத்தலம் முழுவதும் பொய்யைப் பரப்பி வருகின்றனர். அதைக்கூட அந்த தமிழ் நாட்டு தமிழறிஞரால் தடுக்க இயலவில்லை.

  இவர்களா தழிழைக் காக்க வல்லவர்? இப்படி விளங்காது போன தமிழ் நாட்டுத் தமிழரைப் பார்த்துதான் “முந்தா நாள் பெய்த மழையில் நேற்று பூத்த காளான் போல இருக்கும் ஓர் இனத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் இனம்” என்று கூறுகின்றார் பக்கத்து மாநிலத்தவர். ஏன்? எதனால்?. பக்கத்து மாநிலத்தவர் அவர்வர் தாய்மொழியைத் தற்காத்து வாழ கற்றுக் கொண்டனர். தமிழ் நாட்டுத் தமிழரோ ‘தங்லீசி’யராக மாறி விட்டனர். இது மலேசிய தமிழருக்கும் தகும்.

  அதனால்தான் இனி மலேசிய தமிழருக்கு தமிழ் நாட்டு தமிழர் வழிகாட்டியாக விளங்க முடியாது என்று கூறுவது. ஆதலால் அவர் வைதிகத்தில் வீழ்ந்து இந்தியிலும் சமசுகிரதத்திலும் மலர்ந்து தங்லிசில் உலரட்டும், நமக்கென்ன?

  நமக்கென்று இனி ஒரு தனி வழியைத் தேடிக் கொண்டு இந்நாட்டில் தமிழர் என்பாரின் அடையாளத்தைத் தற்காத்துக் கொள்வோம். இல்லையேல் தமிழர் அல்லாதாரும் ‘நானே தமிழன்’; ‘நானே உனக்கு வழிகாட்டி’ என்று கூறிக் கொண்டு நம்மீது குதிரை சவாரி செய்வார். இந்த இழி நிலை மலேசிய தமிழருக்குத் தேவையா?

  சிந்திக்கத் திறன் இருக்கும் பொழுது அதை மலேசிய தமிழர்களுக்குப் பயன்படும் வகையில் எடுத்துச் சொல்லி நற்செயல் ஆற்றுக.

  இன்று இல்லையேல் இனி என்றும் தமிழரைச் சிந்திக்க விட மாட்டார்.

 • தேனீ wrote on 13 மார்ச், 2018, 23:46

  சித்திரை இந்து வருட பிறப்பு!

  “இந்து என்றால் யார் அல்லது என்ன? இதற்கு விளக்கம் சொல்லி விட்டு மறுமொழி பேசவும். இல்லையேல் எங்களைப் போன்றவரை ‘இந்து’ என்று குறிப்பிட தங்கள் தகுதி என்னவென்பதையாவது இங்கு குறிப்பிடவும். அப்புறம் எமது மறுமொழியை இடுவேன்.

 • Unmai wrote on 14 மார்ச், 2018, 6:34

  தமிழன் என்றால் அது முதலில் அவன் கொண்டாடும் திருநாள் தை பொங்கல். தீபாவளி திருநாள் அதை யாரை குறிக்கிறது. தமிழனையா. முதலில் யோசிக்க வேண்டும். வேண்டாத ஒரு பண்டிகை யை வலுக்கட்டாயமாக தினித்து அதை கொண்டாட வைப்பது என்ன நியாயம். திபாவளி திருநாள் வடநாட்டு காரன்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை அதை அப்படியே இங்கே எல்லா இனத்தவரும் கொண்டாஞ வைத்து விட்டனர். நமக்காக ஒரு திருநாள் என்றால் அது தை பொங்களே. அதையே தமிழனுக்கு முதல் வருட பிறப்பு என பல அறிஞர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவை தமிழ் நாட்டு அரசியல் சாக்கடை கள் தங்கள் சுயநலத்திற்காக அதை மாற்றி அமைத்து உள்ளனர். இங்கே முறையாக நகர்ந்து வந்த அந்த திருநாளை எதோ எழுதுவோம் என நினைத்து கொண்டு சில அறிவு ஜீவிகள் கலத்தில் இறங்கி மண்ணை தோன்றுகின்றன. பொங்களுக்கு இருக்கும் சந்தோஷம் தீபாவளி திருநாளில் உண்டா. ஒரு அரக்கனை எப்படி கொன்று அவனை நினைத்து அசைவம் சமைத்து போதையில் தள்ளாடி கொண்டாடும் திருநாள் நமது தமிழ் சமுதாயத்திற்கு தேவையா. சிந்திப்போம்.

 • Unmai wrote on 14 மார்ச், 2018, 7:09

  தை பொங்கல் திருநாள் தொட்டு நான் மேலோட்டமாக சொல்லும் கருத்துக்கள். தமிழன் ஏன் தை பொங்களை தமிழ் புத்தாண்டு ஏற்று கொண்டு ஏன் கொன்டாடுகிறான் என அதை முழுமையாக முன் எடுத்து வைக்க பல ஆதாரங்களோடு சொல்ல முடியும். அதை. திரு.
  தேனீ அவர்களும் ஆதரங்களுடன் எழுதுகிறார். வாழ்த்துக்கள் திரு. தேனீ.

 • Dhilip 2 wrote on 14 மார்ச், 2018, 14:16

  “பல அறிஞர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவை தமிழ் நாட்டு அரசியல் சாக்கடை கள் தங்கள் சுயநலத்திற்காக அதை மாற்றி அமைத்து உள்ளனர். ” என்று Unmal எழுதி உள்ளேர்கள் . இதே கருத்தை தேனீ எழுத பார்த்துள்ளேன். நான் , Dhilip 2 , NASA சொல்வதைத்தான் வான சாஸ்திரமாக பார்க்கிறேன் ! இனிமேல் , Unmal மற்றும் தேனீ அவர்களுக்கு , பச்சையப்பா கல்லூரிதான் NASA . இதில் வேடிக்கை என்ன வென்றால் , பச்சையப்பா கால்லூரியில் ASTROPHYSICS என்ற வான சாஸ்திரிக துறை இல்லை ! இல்லாவிடடாள் என்ன ? மானமுல்ல தமிழனும், வீரமுள்ள தமிழனும் அதை கண்டு கொள்ள மாடடான் …

 • en thaai thamizh wrote on 14 மார்ச், 2018, 20:50

  எனக்கு ஏதும் கூறவே கூசுகிறது. தமிழ் நாட்டில் தமிழனா ஆட்சி புரிகிறான்?

 • Unmai wrote on 14 மார்ச், 2018, 21:21

  சரக்குகள் ஏற்ற கிடைக்காத கப்பல் அடுத்த கரைக்கு சென்று காத்து இருந்ததாம். அங்குமிங்கும் அலைந்து எதாவது கிடைக்குமா என நினைத்து சாணத்தை ஏற்றி வந்ததாம். அதுபோல எந்த பொருளும் கருத்தும் கிடைக்காத ஒன்றை வைத்து அதில் தான் தான் என தன் பெயரை சொல்லிக்கொண்டு பெருமை அடித்த கதைகள் நிறையவே படித்தும் உள்ளோம். தலைப்பு தை பொங்கல் அதை தொட்டு நல்ல பல கருத்துகளை முன் வைக்கலாம். (NASA சொல்வதைத்தான் வான சாஸ்திரமாக பார்க்கிறேன்.) அப்படி என்ன பார்த்திர்கள் NASA சொன்னதை. கொஞ்சம் நன்கு சிந்தித்து பார்க்கவும்.
  பல முறை தெளிவாகவும் சொல்லி விட்டோம் தை பொங்கல் ஏன் கொண்டாட படுகிறது என விக்கிபிடியா அதாரம். இதோ – (அதுவே தமிழ் புத்தாண்டு எனவும். தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது.) இதில் அறிஞர் ஒருவர் சொல்கிறார் பச்சையப்பா கால்லூரியில் ASTROPHYSICS என்ற வான சாஸ்திரிக துறை இல்லை என்று.
  அதே கல்லூரியில் மறைமலை அடிகளாரின் கூறி உள்ளார். என்பதும் உண்மை. வெள்ளைக்காரன் கூட தமிழன் கண்டுபிடிப்பு வைத்துதான் பல ஆராய்ச்சிகள் செய்வதாக சொல்ல படுகிறது. வேண்டாத விபரிதமான விளையாட்டல் தமிழை கொச்சைப்படுத்தும் அளவுக்கு செல்லவேண்டாம். நீங்கள் வேண்டும்மானால் சித்திரை முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடி கொள்ளுங்கள். யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள்.

 • Dhilip 2 wrote on 15 மார்ச், 2018, 7:42

  “வெள்ளைக்காரன் கூட தமிழன் கண்டுபிடிப்பு வைத்துதான் பல ஆராய்ச்சிகள் செய்வதாக சொல்ல படுகிறது.” இந்த சொல்ல படுகின்றது , இருக்கலாம் , அப்படிதான் சொன்னார்கள் , …. என்ற வார்த்தைகள் தான் வாயிலே வடை சுடும் சங்கத்தின் அடுப்பும் என்னையும் ! பின்னே வடை சுட அடுப்பு என்னை இன்னமும் இத்யாதி இத்யாதி வேணும்ல ….. பச்சையப்பா கல்லூரியின் துறைகளும் அதனை சார்ந்த பட்ட படிப்புகளும், இதோ Wikipedia தருகிறது : https://en.wikipedia.org/wiki/Pachaiyappa%27s_College . நான் என்ன நெனைக்கிறேன்னா பேசாம பச்சையப்பா கல்லூரியை தமிழ் நாட்டு சட்ட மன்றம் என்று அறிவித்து விடடாள் , தை முதல் நாள் தமிழர்களின் வருட பிறப்பு என்ற கூட்ரை இன்னும் ஒரு 10 ஆண்டுகளுக்கு கடலை போட்டு கொண்டு இருக்கலாம் அல்லவா ! இல்லனா சங்கத்துக்கு சமூகத்துக்கு என்ன மரியாதை ?

 • சுப்பிரமணியன் முனியாண்டி wrote on 15 மார்ச், 2018, 9:55

  Dhilip என்ற பெயரிலும் ‘வெடுக் வீராசாமி’ என்ற பெயரிலும் கருத்து சொல்வோர், பச்சைத் தமிழ் துரோகியர். தமிழை அறிந்த இவரைப் போன்றோர் தமிழினத்தையும் தமிழ் மொழியையும் பீடித்துள்ள நச்சுக் கிருமிகள். தமிழ் இனம், மொழி, பண்பாடு, அரசியல், சமயம் குறித்தெல்லாம் அக்கறையுடன் செம்பருத்தியில் கருத்து வெளிப்படும்போதெல்லாம் இவர்களின் குதர்க்கமும் விதண்டாவாதமும் தமிழ்ப் பகைப் போக்கும் வெளிப்படும். இவர்களின் பதிவை செம்பருத்தியின் ஆசிரியர்க் குழுவினரும் எப்படி வெளியிடுகின்றனர் என்று தெரியவில்லை.குறைந்தபட்சம் திருத்தியும் மாற்றியுமாவது வெளியிடலாம்.அல்லது தவிர்க்கலாம்.

  இப்படிக்கு
  மு.சுப்பிரமணியன்

 • Unmai wrote on 15 மார்ச், 2018, 20:39

  பிரச்சனை தமிழ்ப்புத்தாண்டு – தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடுவது சித்திரை முதல் தேதியை வைத்து புத்தாண்டு கொண்டாடுவதா அல்லது தை மதத்தில் வரும் பொங்கலை கொண்டாடுவதா என்பது இங்கு விவாதம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் கட்டுரையாளர் திரு. கி. சீலதாஸ் இவர் அவ்வப்போது ஒரு நாரதர் போல எதாவது ஒன்றை கிளறி விட்டு வேடிக்கை பார்க்கிறார். நாரதர் வேலை அதுதானே. கடைசியில் நன்மையில் முடியும். அனால் திரு. கி. சீலதாஸ் அவர்கள் முன் வைத்த அவரின் கருத்துக்கு நாம் நம் கருத்தையும் முன் வைக்கிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால் புனை பெயரில் எழுதும் ஒருவர் நல்லவர் அவர் போன்று ஒன்றுமே தெரியாதவர் போல எழுதுவது செம்ம வேடிக்கையாக உள்ளது. புதுசு புதுசாக எதாவது அள்ளி விடுவதும் பொய்யான தகவலை தேடிபிடித்து கொடுப்பதும் உதாரணமாக (https://en.wikipedia.org/wiki/Pachaiyappa%27s_College) இவருக்கு ஒரு கை வந்த கலை. சரி விடுவோம். அதன் குணம் அப்படி என்றால் என்ன செய்வது. விடுவோம்.
  அனால், அதாரம் நமக்கு தமிழில் நிறைய இருக்கு தை பொங்கல் தான் தமிழர்கள் தமிழ்ப்புத்தாண்டு என https://ta.wikipedia.org/s/6ju தமிழ் விக்கிபிடியா அதாரதுடன் கொடுத்து உள்ளது. படிதும் பார்க்கவும் தலைப்பு செய்தியிலேயே வருகிறது தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் என்று. அனால் இந்த பொய்யான மனிதர் ஆங்கிலத்தில் உள்ள விக்கிபிடியா எடுத்து பச்சையப்பா கல்லூரியை முன் வைத்து நம்மிடம் கண்ணாமுச்சி காட்டுகிறார். ஒரு கருத்தை இங்கு முன் வைக்கும் பொழுது அதை தமிழ் வாசகத்தில் உள்ளதை எடுது முன் வைக்கலாம். நம்மிடம் தமிழில் இல்லாததா. இனியும் வேண்டாம் உங்களின் ஏட்டிக்கு போட்டியான விவாதம். மனிதர்கள் பலவிதம் அதில் ஒருவிதம் நான் சொல்வது தான் சரி என்று விவாதம் செய்வது. அவர்களுக்கும் தெரியும் நம்மிடம் தவறு உண்டு என்று. அனால் தோற்றுவிட கூடது என எண்ணி ஜெயிக்க பார்ப்பார்கள். அவர்களில் இவரும் ஒருவர். சாய் விடுவோம்.

 • PalanisamyT wrote on 16 மார்ச், 2018, 7:23

  அன்று தான் தலைமைத் தாங்கியக் கூட்டத்தில் ஒரு மனதாக தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தவர் தமிழ்க் கடலெனப் போற்றப் படுகின்ற மறை மலை அடிகளார்; மறைமலைகள் அடிகள் சொன்னால் அது தமிழ்த் தாய் சொன்னதுப் போன்றாகும். அந்த தமிழறிஞரின் அறிவிப்பையேற்று அந்தத் தை முதல் நாளைத்தான் கருணாநிதி தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தவர்; ஆதலால் மலேசியத் தமிழர்களாகிய நமக்கும் மற்ற உலகத் தமிழர்களுக்கும் வழிக் காட்டும் வகையில் தைத் திருநாளையே இனிமேல் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும். இது நமக்கும் நல்லது; நாளையத் நம் தலைமுறையினருக்கும் நல்லது. இதில் இனி எந்தக் குழப்பமும் வேண்டாம்!.

 • தேனீ wrote on 16 மார்ச், 2018, 10:52

  #இந்த நாட்டில் தமிழர்களின் அவலநிலை நாளுக்கு நாள் பல்வேறு மாதிரியான வடிவம் பெற்று நம்மை துன்புறுத்துவதைக் கவனிக்காமல், தமிழ் நாட்டு குழப்பத்திற்கு இடமளித்து நம் தன்மானத்தை இழந்துவிடக்கூடாது.#

  இந்த நாட்டில் தமிழர்களின் அவலநிலைக்கு யார் காரணம்? எது காரணம்? இதனை ஆராய்ந்து கட்டுரையாளர் மேலும் ஒரு கட்டுரை எழுதினால் அதில் செம்பருத்தி வாசகர் கருத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

  கட்டுரையாளரின் இக்கருத்தை ஒட்டி மேலும் ஒரு கருத்தைப் பதிவு செய்ய விழைகிறேன்.

  இந்த நாட்டில் தமிழர் என்றால் அது இந்தியர் அனைவரையும் குறிக்காது என்பதை எப்பொழுது கண்டுபிடித்தீர்கள்?

  நாங்கள் தெலுங்கர், மலையாளிகள், சீக்கியர், குசராத்தியர், இலங்கையர் என்று ஒவ்வொருவரும் அவரவருக்குத் தனிச்சங்கங்கள் அமைத்துக் கொண்டு அவரவருக்குள் ஒரு சிறிய வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழி அரசாங்க மானியங்களைத் தனித்தனியே பெற்று தத்தம் சுற்றங்களுக்கு வேண்டிய உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். அவர்தம் வழிசாவழி வந்த மாணவர்களுக்கு அவரவர் சங்கங்கள் வழி கல்வி ஊக்கிவிப்புத் தொகை, நன்கொடை என்று கொடுத்து உதவுகின்றனர்.

  இன்னும் பொருளாதாரத் துறையில் முன்னேற தழிழருக்கு அப்பாற்பட்டவர்களைக் கொண்டு வந்து தீபாவளி சந்தையை மாநிலங்கள் தோறும் நடத்தி தமிழரிடம் பணம் சம்பாதிக்கின்றனர். ஏன் இது அவர்களுக்குச் சாத்தியமாகிறது ஆனால் தமிழரால் முடியவில்லை?

  இவ்வாறு செய்வோர் ‘இந்தியர் பண்பாட்டுச் சந்தை’, போலிஹூட் சந்தை’ என்ற போர்வையில் வட நாட்டவர்களை வணிகர்களாகக் கொண்டு வந்து தமிழரின் பணத்தைச் சுரண்டுகிறார்.

  இங்குள்ள தமிழர் ஜவுளி கடை வியாபாரிகளின் வியாபாரம் பாதிப்பதும் அவர்கள் அதை பலமுறை பத்திரிக்கை வாயிலாக வெளியிட்டும் எந்த ஒரு புண்ணியமுமில்லை. இவ்வாறு வட மாநிலத்தவர் குறைந்த விலையில் விற்கும் துணிமணிகளும் ஏறக்குறைய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிய ‘design’ துணிமணிகள் என்பதை தமிழர் அறியார். அவ்வாறு விற்பனையில் தங்கி போன துணிகளைச் சற்று குறைந்த விலையில் விற்க தமிழர் துணியின் தராதரம் தெரியாமல் வாங்கி ஏமாறுகின்றனர்.

  இதுநாள் வரை ‘தென்னிந்தியர்தான்’ ‘MAICCI’ – யின் உறுப்பினராக இருக்க முடியுமென்று இருந்த பழைய சட்டத்தைத் திருத்தி ‘கெ. ஈசுவரன்’ தென்னிந்தியர் மற்றும் இலங்கைத் தமிழரும் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று சட்டத்தை திருத்திக் கொண்டார். அதற்கு உறுதுணையாக இருந்தது பிற தமிழர்தாம். எப்பொழுது இலங்கைத் தமிழருக்கு தென்னிந்தியர் தொடர்பு வேண்டுமோ அப்பொழுது மட்டும் உறவாடிக் கொள்வதும் பின்னர் நாங்கள் வேறு நீங்கள் வேறு பிரித்துப் பேசுவதும் மலேசியத் தமிழரின் பொருளாதார வாய்ப்புக்களைச் சூரையாடுகின்றது.

  இப்படி அனைத்திலும் பிரிவினை பேசும் இந்தியாவின் பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர், அவரவருக்கென்று தனித்தனியே அவர்தம் புத்தாண்டை கொண்டாடுகின்றார்களே அவர்களிடம் நீங்கள் எல்லாம் ஏன் தனித்தனியாக புத்தாண்டு கொண்டாடுகின்றீர்கள். நாம் எல்லாம் இந்துதானே. அதனால் ஒரே நாளில் புத்தாண்டு கொண்டாட ஒத்துக் கொள்ளுங்கள் என்று இக்கட்டுரையாளரால் எழுத முடியுமா?

  இதை தெலுங்கர், மலையாளி, சீக்கியர்களிடம் சொல்லி நீங்கள் யுகாதி, ஓணம் மற்றும் சீக்கியர் புத்தாண்டை கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக சித்திரை முதல் நாளையே இந்து புத்தாண்டாகக் கொண்டாடுங்கள் அது போதும் என்று கூற முடியுமா?

  இதை தங்களால் செம்பருத்தியில் எழுத முடியாது என்றால் அப்புறம் ஏன் தமிழர் எந்த நாளை புத்தாண்டாக கொண்டாட வேண்டுமென்று அறிவுரை கூற புகுந்தீர்கள்?

  தமிழர் மீது உள்ள பாசத்தினாலா அல்லது மயக்கமுற்றிருக்கும் தமிழன் எதை சொன்னாலும் கேட்டுக் கொண்டு மாடு மாதிரி தலை அசைப்பான் என்ற நம்பிக்கையிலா?

 • Dhilip 2 wrote on 16 மார்ச், 2018, 13:00

  “Dhilip என்ற பெயரிலும் ‘வெடுக் வீராசாமி’ என்ற பெயரிலும் கருத்து சொல்வோர், பச்சைத் தமிழ் துரோகியர். தமிழை அறிந்த இவரைப் போன்றோர் தமிழினத்தையும் தமிழ் மொழியையும் பீடித்துள்ள நச்சுக் கிருமிகள்.” என்று சுப்பிரமணியன் முனியாண்டி எழுதி உளீர்கள் ! அது உங்கள் கருத்து , உங்கள் கருத்து சுதந்திரத்தை நான் மறுக்க வில்லை. ஆனால் அதற்கு விளக்கம் தந்தால், உண்மை இருந்தால் நான் திருத்தி கொள்வேன் . இல்லை என்றால் இன்னமும் நாலு சாது சாத்துவேன். கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல முறை ஜர என்ற ஒரு அரக்கனை போருக்கு அழைத்து விட்டு , அர்த்தரதன் போல் தேரில் இருந்து இறங்கி புற முதுகு காட்டி ஓடுவார் . தேரில் இருக்கும் மஹரதர்கள் அர்த்தரதர்களை தாக்க மாட்டார்கல். ஒரு முறை கோவம் கொண்ட பலராமன் , கிருஷ்ணனை எதிர்த்தே விட்டார். என் இப்படி செய்கிறாய் கிருஷ்ணா என்று . பிறகுதான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்குகிறார் : “விதி நம் வசம் இல்லை அண்ணா….. , அதை வெல்லத்தான் போராடுகிறோம், எனவே இன்று ஓடித்தான் ஆகவேண்டும் என்று ..” எனவே என் கருத்தை ஏற்கும் அளவிற்கு நான் யாரையும் கடடாய படுத்த வில்லை ! ஆனால் படிப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதே என் எண்ணம் ! புலியிடம் தப்பித்து முதலையிடம் மாடடா கூடாது !

கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்ய முடியும். உதாரணம் : "amma" என்று டைப் செய்து SPACEBAR-ஐ அழுத்தினால் "அம்மா" என்று தோன்றும் (Press Ctrl+g to toggle between English and Tamil)

%d bloggers like this: