முகைதின் விலக்கப்பட்டபோது ஷாரிர் எங்கு போனார்? ஜைட் வினவல்

முன்னாள்   துணைப்   பிரதமர்    மூசா   ஹித்தாம்   பதவியிலிருந்து  விலக்கப்பட்டதும்   அவரின்   உதவியாளராக  இருந்த   ஷாரிர்  அப்துல்  சமட்      டாக்டர்   மகாதிர்   முகம்மட்டுக்கு    எதிராகக்  கொதித்தெழுந்ததை    ஜைட்  இப்ராகிம்   நினைவுகூர்ந்தார்.

கொள்கைப்  பிடிப்பாளர்  என்று  கருதப்படும்    ஷாரிர்,  1988-இல்   ஓர்   இடைத்தேர்தலில்   சுயேச்சையாகப்  போட்டியிட்டு  வெற்றி  பெற்றதை  முன்னாள்   சட்ட   அமைச்சரான    ஜைட்  நினைவு  கூர்ந்தார்.

“அவர்   வென்றார்.  காரணம்  ஜோகூர்   மக்கள்    இன்னொரு  ஜோகூர்  தலைவரை,   அடுத்த   பிரதமராவார்    என்று    அவர்களால்    பெரிதும்   எதிர்பார்க்கப்பட்ட     மூசா  ஹித்தாமைத்  தற்காத்துப்  பேசிய   அவரது   துணிச்சலைப்  போற்றினார்கள்”,  என  ஜோகூர்   பாருவில்   ஆற்றிய  உரையில்  ஜைட்  குறிப்பிட்டார்.

ஆனால்,  அதே   ஷாரிர்,   ஜோகூரைச்   சேர்ந்த  இன்னொரு  துணைப்  பிரதமரான  முகைதின்  யாசின்   பதவியிலிருந்து  தூக்கப்பட்டபோது   அதற்கு   எதிராக   எதுவும்  சொல்லாதிருந்ததுதான்  ஜைட்டுக்கு   ஏனென்று   புரியவில்லை.

“இன்னொரு  ஜோகூர்   தலைவர்   அதுவும்  விரைவில்   பிரதமராகும்    வாய்ப்பைப்  பெற்றிருந்த   முகைதின்   யாசின்   அரசாங்கக்  கருவூலம்   சூறையாடப்படுவதற்கு    எதிர்ப்புத்    தெரிவித்ததற்காகப்     பணிநீக்கம்   செய்யப்பட்டபோது   ஷாரிர்   எங்குப்   போனார்?

“வரலாற்றில்    முன்எப்போதுலில்லாத  வகையில்   ஒன்றை  மூடிமறைப்பதற்காக    அரசாங்க   அமைப்புகள்   மொத்தமும்    ஒன்று  திரட்டப்பட்டபோது    ஷாரிர்   எங்குச்  சென்றார்?”,  என்றவர்   வினவினார்.

69-வயது   ஜோகூர்   பாரு   எம்பி  இப்போது     மாறிப்போன  மனிதர். இனியும்   மக்கள்   அவரை  ஆதரிக்கக்  கூடாது  என்று   ஜைட்  கேட்டுக்கொண்டார்.