மகாதிர்: புத்ரா ஜெயாவை மீட்பதற்கு ஹரப்பானுக்கு ஒரு ‘மலாய் கட்சி’ தேவைப்படுகிறது

 

எதிர்க்கட்சி கூட்டணியின் பல்லின மக்கள் அணுகுமுறை கிராமப்புற மலாய் தொகுதிகளில் எடுபடவில்லை. அதன் விளைவாக பொதுத் தேர்தலில் கூடுதல் இருக்கைகளை பெற முடியவில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவரான மகாதிர் முகமட் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில் எதிரணி 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தும் புத்ரா ஜெயாவை கைப்பற்ற முடியவில்லை என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதனால், கடந்த பொதுத் தேர்தலில் எதிரணியிடம் இல்லாததை இப்போது பெர்சத்து அளிக்க முடியும் என்று மகாதிர் கூறினார்.

“எப்படியோ, இந்த வகையான மக்கள் – கிராமத்து மக்கள் – அவர்கள் பல்லின கட்சியைக் கண்டு அஞ்சுகின்றனர்.

“ஆக, நாங்கள் மலாய் கட்சியாக இருப்பதால், கிராமப்புறத்திலிருக்கும் அம்னோ ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் எங்களை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் சற்று அதிமகாகவே இருக்கிறது.

“ஆகவே, போதுமான இருக்கைகளைப் பெற அவர்களுக்கு, ஹரப்பானுக்கு, எங்களின் பங்கேற்பு தேவைப்படுகிறது”, என்று சின் சியு டெய்லியுடனான ஒரு நேர்காணலில் மகாதிர் கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலில், ஹரப்பானுக்கு முன்பிருந்த பக்கத்தான் ராக்யாட் 89 இருக்கைகள் அல்லது நாடாளுமன்றத்திலுள்ள இருக்கைகளில் 40 விழுக்காட்டை மட்டுமே பெற முடிந்தது, ஆனால் அது பெற்ற மொத்த வாக்குகள் 52 விழுக்காடாக இருந்தது.

புத்ரா ஜெயாவை கைப்பற்றுவதற்கு எதிரணிக்கு இன்னும் 20 லிருந்து 30 நாடாளுமன்ற இருக்கைகள் மட்டுமே தேவைப்படுகிறது. என்று கூறிய மகாதிர், “நாங்கள் அதைக் கொடுக்க முடியும். நாங்கள் அம்னோவுக்கு எதிராக மட்டுமே போட்டியிடுவோம்”, என்றார்.

மொத்தத்தில், ஹரப்பான் வெற்றி பெறும் சாத்தியத்தில் மகாதிர் நம்பிக்கையுடன் இருக்கிறார். மேற்கு மலேசியாவில் எதிரணி 100 இருக்கைகளைப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது.

நமக்கு சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களின் ஆதரவு இருந்தால், அவர்களில் அதிகமானவர்கள் நம்மை ஆதரிக்கிறார்கள், நாம் அரசாங்கத்தை அமைக்க முடியும் என்று நான் நம்புகிறேன் என்று மகாதிர் மேலும் கூறினார்.