செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் முதல் முறையாக தமிழக இளம்பெண் கைது..

ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி மற்றும் கடப்பா உள்ளிட்ட வனப்பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வெட்டி கடத்தப்படுகிறது. செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்ச்சியாக தமிழர்களே கைது செய்யப்படுகின்றனர். ஆந்திர ஜெயிலில் மட்டும் சுமார் 10 ஆயிரம் தமிழக தொழிலாளர்கள், செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்றதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். இதுவரை, 25 தமிழர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. சமீபத்தில் கடப்பா ஒண்டி மிட்டாவில் உள்ள செம்மரக் காட்டிற்குள் உள்ள ஏரியில் சேலத்தை சேர்ந்த 5 தமிழர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இந்த நிலையில், திருப்பதி அருகே ரேணிகுண்டா ஆஞ்சநேயபுரம் செக் போஸ்டில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் 25 செம்மரக் கட்டைகள் இருந்தது. இதுதொடர்பாக, காரில் இருந்த தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் மற்றும் மேலும் 4 தமிழர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் திருப்பங்குழி கிராமம் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த ராஜன் என்பவரின் மனைவி ரபேகா (வயது 26) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சத்யராஜ் (27), சிறு காவேரிப்பாக்கம் கிராமம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 30) மற்றும் அதே பகுதி காவங்கரையை தெருவை சேர்ந்த பூபாலன் (36), விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வெல்லுமலை சாத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி (55) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்கள் மீது செம்மரக் கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண் கைது செய்யப்படுவது இதே முதல் முறை. இந்த பெண்ணின் பின்னணி என்ன? என்பது குறித்து ஆந்திர வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

 -athirvu.com

TAGS: