‘தண்ணீர் பிரச்சனை 4 நாள்கள்தான், ஆனால் 1எம்டிபி கடன் பிரச்சனை 4 தலைமுறைகளுக்கு’

சிலாங்கூர் மாநில நீர் பிரச்சினைகளை விமர்சித்த பிரதமருக்கு, அவரின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கான் வெள்ளப் பிரச்சனையைத் தொட்டுப் பேசி பதிலளித்தார் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி.

“காஜாங் நகரில்” ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சிலாங்கூர் அரசாங்கம் தீர்த்துவிட்டது, ஆனால் பெக்கானில் நிலவும் பிரச்சனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று அஸ்மின் கூறினார்.

“காஜாங் நகரின் நீண்ட கால வெள்ளப் பிரச்சினையைச் சிலாங்கூர் அரசாங்கம் வெற்றிகரமாக கையாண்டுள்ளது, ஆனால் பஹாங் வெள்ளப் பிரச்சனை இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

“நேற்று நாடாளுமன்றம் சூடாக இருந்தது. மலாய் பழமொழி ஒன்றை அனைவருக்கும் நினைவூட்டியது, கடலுக்கு அப்பால் இருக்கும் கிருமி கண்ணுக்குத் தெரியும், ஆனால் கண்களுக்கு முன்பாக இருக்கும் யானை தெரியவில்லை.

“இதுதான் இன்று சிலரின் பிரச்சனையாகும்,” என காஜாங்கில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறினார்.

அஸ்மினின் இந்தக் கூற்று, நேற்று நாடாளுமன்றத்தில் நஜிப் உடன் ஏற்பட்ட ‘சர்ச்சை’ காரணமாக எழுந்தது என நம்பப்படுகிறது.

நேற்று, நாடாளுமன்றத்தில் ஒரு வாய்வழி கேள்வி விவாதத்தின்போது, ஏன் இந்த ஆண்டு அரசாங்கம் கடனுக்கான வட்டி செலுத்த 31 பில்லியன் ரிங்கிட்டை செலவளித்துள்ளது, இதற்கு 1எம்டிபி காரணமா என்று இருந்தது அஸ்மின் கேட்டார்.

இக்கேள்விக்கு, அம்னோ தலைவர் நஜிப், “சிலாங்கூரில் உள்ள தண்ணீர் நெருக்கடியின் சிக்கல் மிகவும் மோசமாக உள்ளது,” என்று கிண்டலாகப் பதிலளித்தார்.

நஜிப் கிண்டலடித்த போதிலும், சிலாங்கூரில் உள்ள நீர் பிரச்சினை மக்களைப் பாதித்துள்ளது உண்மைதான் என ஒப்புக்கொண்ட அஸ்மின், “சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனை, 1எம்டிபி கடனைவிட தீவிரமாக இல்லை,” என்றார்.

“அவர் கொஞ்சங்கூட வெட்கப்படாமல் எழுந்து, சிலாங்கூரில் நீர் பிரச்சினை 1எம்டிபி-ஐ விட மோசமாக உள்ளது என்றார். அது 4 நாள்கள்தான்   ஆனால் 1எம்டிபி பிரச்சனை 4 தலைமுறைகளுக்கு, 42 பில்லியன் ரிங்கிட்,” என்றார் அஸ்மின்.