உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள்,ரஷ்யராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனத்தால் தாக்கப்பட்டுள்ளனர் என தெரீசா மே தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதற்கான “அதிக வாய்ப்புகள்” இருப்பதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கமளிக்குமாறு ரஷ்ய தூதரகத்தை வெளியுறவுத் துறை அலுவலகம் கேட்டுள்ளது.

செவ்வாயன்று “நம்பகமான பதில்” எதுவும் வரவில்லையேல் ரஷ்யா சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு பிரட்டன் வரும் என மே தெரிவித்துள்ளார்.

நரம்பு மண்டலத்தை உடனடியாக பாதிக்கக்கூடிய அதீத விஷத்தன்மை கொண்ட நோவிசாக் என்னும் ரசாயனம் பயன்படுத்துப்பட்டுள்ளதாக மே தெரிவித்தார்.

“இது நமது நாட்டிற்கு எதிரான நேரடியான தாக்குதலாக இருக்கலாம் அல்லது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ரசாயணம் மீது தங்களுக்குள்ள கட்டுப்பாட்டை இழந்து பிறரின் கையில் அது செல்ல ரஷ்யா அனுமதித்துள்ளது” என மே தெரிவித்தார்.

ரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான சர்வதேச அமைப்பிடம் முழுமையான விளக்கத்தை ரஷ்ய தூதர் வழங்க வேண்டும் என வெளியுறவுத் துறை செயலர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்

“இது தொடர்பான விரிவான நடவடிக்கைகளை எடுக்க பிரிட்டன் தயாராக இருக்க வேண்டும் என்றும், ரஷியாவிடமிருந்து போதிய விளக்கம் வரவில்லையெனில் புதனன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படும்” என்றும் மே தெரிவித்தார்.

மேயின் பேச்சு, “பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சர்க்கஸ் நிகழ்ச்சி” என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மரியா சகாரவா விவரித்துள்ளார்.

முன்னதாக இது குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் கேட்டபோது, முதலில் இந்த விஷயத்தின் மூலக் காரணங்களை ஆராய வேண்டும் பின் இதுகுறித்து பேசலாம் என பிபிசியிடம் தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். -BBC_Tamil