‘இருப்பு இவ்வளவுதான்’- சொத்துமதிப்பு குறைவாக இருப்பது குறித்து சிப்பாங் எம்பி விளக்கம்

தம்  வங்கிக்  கணக்கில்  இருப்பது   வெறும்  ரிம900-தான்    என்று   அமனாவின்  சிப்பாங்  எம்பி  ஹனிபா   மைடின்   அறிவித்திருப்பதைக்  கண்டு   பலரும்   ‘இவ்வளவுதானா’   ஆச்சரியப்பட்டனர்.

“உண்மையைத்தான்  சொன்னேன்.  சொத்து   அறிவிப்பைச்   செய்தபோது   என்  மேபேங்க்  கணக்கில்   இருந்தது  ரிம900-தான்.  அதனால்  சொத்து  மதிப்பு  ரிம900   என்று   அறிவித்தேன்.

“ரிம2.6 பிலியன்   அல்லது  ரிம900  மில்லியன்  இருந்தால்  அதை    அறிவித்திருப்பேன்.

“பணச்  சேமிப்பு,  பங்குகள்,  காப்புறுதி,  கடன்  அட்டை,   வைப்புத்  தொகை   என்று  எதுவும்  இல்லை.  அதனால்   என்னிடம்  இருந்ததை   அறிவித்தேன்”, ”,  என்றவர்  முகநூலில்   பதிவிட்டிருந்தார்.

சொத்துமதிப்பை      அறிவித்ததும்   ஒரு  “புனிதமான  தரப்பு”   அதனைச்  சாடியிருப்பதாக   ஹனிபா  கூறினார்.  பாஸ்  கட்சியைத்தான்   அவர்     அப்படி   வருணித்தார்.

“சிலர்  நான்  ஒரு  ஊதாரி    என்றும்  இன்னும்  என்னென்னமோ  சொல்லி    ஏசியுள்ளனர்.

“வேறு  சிலர்  என்னிடம்   ரிம1  மில்லியன்    பெறுமதியுள்ள  இரண்டு  வீடுகள்   இருப்பதாக  சொல்கிறார்கள்.  அவை    கடனில்  உள்ளன-  இன்னும்  எனக்குச்  சொந்தமாகவில்லை”,  என்றார்.

ஒரு  எம்பி   எவ்வளவு  சொத்து   வைத்துள்ளார்  என்பது  முக்கியமல்ல,  இருக்கும்  சொத்துகளை   அறிவிக்கிறாரா   என்பதே  முக்கியம்  என்று  ஹனிபா  கூறினார்.

பிகேஆர்  சிந்தனைக்குழுவான   இன்வோக்கின்    முன்னெடுப்பில்  நேற்று  தங்கள்  சொத்துமதிப்பை    அறிவித்த   36 எம்பிகளில்   ஹனிபாவும்  ஒருவர்.

அவரது    அறிவிப்பின்படி   ஹனிபாவுக்கு  மாதம்  ரிம25,000  சம்பளம், வழக்குரைஞர்    என்ற  முறையில்  ரிம10,000   வருமானம்  கிடைக்கிறது.

இதில்   வீட்டுக்கடனுக்கும்,  ஹொண்டா  சிஆர்-வி  காருக்கும்,   கட்சி  மற்றும்   தொகுதிப்  பராமரிப்புக்கும்,  வீட்டுக்கும்  சட்ட  அலுவலகத்துக்கும்   ரிம26,600  செலவாகிறது.