ஜிஇ14 : ஜொகூரில் போட்டியிடவுள்ளதாக, இயோ கண்ணீருடன் அறிவிப்பு

டிஏபியைச் சேர்ந்த டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், இயோ பீ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜொகூரில் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்தபோது, அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

சிகாம்மாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னால் தனது தொகுதி மக்களைப் பிரிந்து செல்ல முடியவில்லை என இயோ தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.

“ஜொகூரில் போட்டியிட வேண்டும் எனும் கட்சியின் ஆலோசனையை ஏற்று, நான் ஜொகூர் திரும்ப முடிவெடுத்துள்ளேன், இதனை டாமான்சாரா உத்தாமா குடியிருப்பாளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என இன்றிரவு ‘ரீஇமெஜ்ஜிங் மலேசியா’ எனும் நூல் வெளியீட்டின் போது கூடியிருந்த சுமார் 1,000 பேர் மத்தியில் அவர் இதனை அறிவித்தார்.

பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர், தோனி புவாவும் அவர் தொகுதி மக்களுக்கு விடைகொடுத்து செல்லவிருக்கிறார் என்றும் இயோ கூறினார்.

 

“5 ஆண்டுகளுக்கு முன்னர், ஓர் அரசியல்வாதி, வாக்காளர்கள் என்றிருந்த உறவு, இப்போது உங்களை வாக்காளர்களாக பார்க்க முடியவில்லை, நெருங்கிய நண்பர்களாகி விட்டோம்,” என்று அவர் சொன்னார்.

இந்த அறிவிப்பைச் செய்வது அவ்வளவு எளிதல்ல என தனக்குத் தெரியும் என்றும், அதனால் வீடியோ எடுத்து அறிவிக்க எண்ணியதாகவும், தற்போது பேசுவதற்கான உரையை முன்னதாக தயார் செய்து வந்ததாகவும் அவர் சொன்னார்.

கிள்ளான் பள்ளத்தாக்கிலேயே இருக்க விரும்பினாலும், ஜொகூரில் ஜிஇ14 எதிர்க்கட்சியினருக்குக் கடுமையான போர்க்களமாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளதாக இயோ கூறினார்.

“அரசியலில் நான் எதற்காக நுழைய முடிவெடுத்தேன் என்பதனை, என் புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தை மீண்டும் படித்தபோது, நான் இந்த முடிவை எடுத்தேன்.

“இது வசதி வாழ்க்கைக்கானது அல்ல என்பதை நான் உணர்ந்துள்ளேன், நாட்டில் மாற்றம் ஏற்பட என்னால் முடிந்ததை சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

“ஆக, நான் எனது வசதியான இடத்திலிருந்து வெளியேறி, ஜொகூர் செல்லதான் வேண்டும். மலேசியாவை ஒரு நல்ல இடமாக மாற்றியமைக்க, நமக்கு மட்டுமல்ல, நமது அடுத்த சந்ததியினருக்காகவும்.

பக்ரி நாடாளுமன்றத் தொகுதியில் இயோ போட்டியிடவுள்ளாரா எனக் கேட்டபோது, அத்தொகுதியின் தற்போதைய எம்.பி. ஏர் தெக் ஹுவா, கட்சியின் ஆலோசனையைக் கேட்டு தான் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயார், அது சட்டமன்றமாக இருந்தாலும் சரி எனக் கூறினார்.