டிஎபி உறுப்பினர்களுக்கு எதிரான பண்டிகாரின் மிரட்டல் “சட்டத்திற்கு முரணானது’

 

மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மூன்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுத்துள்ள மிரட்டல் சட்டத்திற்கு முரணானது என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

அந்த மூன்று டிஎபி உறுப்பினர்களுக்கு பண்டிகார் அனுப்பியுள்ள கடிதம் குறித்து கருத்துரைத்த பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுரேந்திரன் அவைத் தலைவர் செய்தது பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 10 ஐ மீறிய செயலாகும் என்றார்.

ஆகவே, அது செல்லாததோடு சட்டவிரோதமானதாகும். அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை பேச்சுரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும் பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 10 இன் கீழ் வருகிறது என்று சுரேந்திரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறார்.

ஊழல் அவதூறுகளை மூடிமறைப்பதற்கு மக்களவைத் தலைவர் உடந்தையாக இருக்கக்கூடாது என்று கூறியதற்காக வி. சிவகுமார், இங்ஙே கூ ஹாம் மற்றும் இங்ஙா ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவைத் தலைவர் பண்டிகார் மிரட்டல் விடுத்திருந்தார்..

அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெளியிட்ட அறிக்கை பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 10 க்கு உட்பட்டது. அது அவர்களின் உரிமைக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று கூறிய சுரேந்திரன், மக்களவை அதன் விவகாரங்களைக் கையாள்வதற்கு விரிவான அதிகாரங்களைக் கொண்டிருந்த போதிலும் அதற்கு அரசமைப்புச் சட்டவிதிகளை மீறி செயல்படும் அதிகாரம் கிடையாது என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே, அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கடிதம் அனுப்பியதன் மூலம் பண்டிகார் அரசமைப்புச் சட்டத்தை மீறி விட்டார். ஆகவே, அவர் அக்கடிதத்தை உடனடியாக திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் மன்னிப்பு கோர வேண்டும் கோரிக்கைக்கு பணிய வேண்டியதில்லை என்றாரவர்.

தாங்கள் மன்னிப்பு கோரப்போவதில்லை என்று அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தனர். மாறாக, மக்களவைத் தலைவர் பண்டிகார் அவர்களுடைய இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அவ்விரு கேள்விகள்: 1எம்டிபி விவகாரத்தில் தவறு ஏதும் இல்லையென்றால், 1எம்டிபியின் கணக்காய்வு அறிக்கையை ஏன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை, மற்றும் 1எம்டிபி வீவகாரம் குறித்து அந்நிய அரசாங்கங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் ஏன் மௌனமாக இருந்து வருகிறது என்பதுதான் அவ்விரு கேள்விகளும் என்று இங்ஙா கூறினார்.