டாக்டர் எம்: எனக்கு வாக்களிப்பது, அன்வாருக்கு வாக்களிப்பதைப் போன்றது

துன் டாக்டர் மகாதீரும் அன்வார் இப்ராஹிமும், நாட்டு அரசியலில் அதிகம் தொடர்புடைய இரண்டு நபர்களாவர், அதேசமயம் இந்தத் தொடர்பில் அடிக்கடி மாற்றங்களும் ஏற்படுவதுண்டு

1980-களில், குருவாகவும் சீடராகவும் இருந்த இவர்களது உறவு, 1998-ல் இறுக்கமான எதிரிகளானது. ஆனால், தற்போது பாரிசானை எதிர்க்க, எதிரணியில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர்.

ஏபிசி ஆஸ்திரேலியா’– வுக்கான ஒரு நேர்காணலில், எதிர்க்கட்சி பிரதம வேட்பாளராக நீண்ட காலமாக இருந்த அன்வாருக்குப் பதிலாக, தற்போது மகாதிருக்கு வாக்களிப்பது, அன்வாருக்கு வாக்களிப்பது போலாகுமா என மகாதிரிடம் கேட்கப்பட்டது.

“ஒரு குறிப்பிட்ட தரப்பில் இருந்து பார்த்தால் ‘ஆமாம்’, காரணம் நான் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருக்கமாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறேன், அன்வார் மன்னிக்கப்படும் வரையில்தான்.

“அரசியலில் அவர் மீண்டும் பங்கு பெற, பேரரசரின் மன்னிப்பு அவருக்குத் தேவை,” என்ற அவர், அந்தச் செயல்முறைக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் எடுக்கும் என்றும் கூறினார்.

“என் வயதிற்கு, நீண்ட காலம் இருப்பேன் (பிரதமர்) என்று நான் நினைக்கவில்லை,” என்று எதிர்வரும் ஜூலையில் 93 வயதாகப் போகும் அவர் கூறினார்.

இதற்கு முன்னர் அன்வார் பிரதமர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று கூறிய மகாதிர்; தற்போது அவருடனும் பிற எதிர்க்கட்சி கூட்டணியினருடனும் இணைந்து பணிபுரிவது பற்றியும் அந்த நேர்காணலில் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், அப்போது தனது அச்செயல்கள் நியாயமானது என்று உணர்ந்ததாகக் கூறினார்.

“இப்போது நடப்பதோடு ஒப்பிடுகையில், அப்போது நான் கடினமாக நடந்துகொண்டேன் என நினைக்கிறேன், ஆனால் அப்போது நிலைமை மிகவும் வித்தியாசமாக இருந்தது, மேலும் கடந்தகால நிகழ்வுகளை திரும்பிப் பார்க்காமல் இருப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

14-வது பொதுத் தேர்தலில், பிரதமர் நஜிப் ரசாக்கை அகற்றும் ஒரே நோக்கத்தை அவரும் அன்வாரும் கொண்டிருப்பதாக மகாதீர் தெரிவித்தார்.