புத்ரா ஜெயாவால் புறக்கணிக்கப்பட்ட சுஹாகாம் ஐநாவின் உதவியை நாடுகிறது

மலேசிய   மனித   உரிமை   ஆணையம் (சுஹாகாம்)   ஐநா  மனித  உரிமை  மன்றத்தின்   காலாந்தர    கண்ணோட்ட(யுபிஆர்)த்துக்கு   அனுப்பும்   அறிக்கையில்   மற்றவற்றோடு  மலேசிய    அரசாங்கம்    மீதான   முறையீடுகளும்  இடம்பெற்றிருக்கும்.

முறையீடுகளில்    தலையாயது,   சுஹாகாம்   1999-இல்  அமைக்கப்பட்டதிலிருந்து  அதன்   ஆண்டறிக்கை    நாடாளுமன்றத்தில்  விவாதிக்கப்பட்டதில்லை   என்பதுதான்.

அத்துடன்     ஆண்டு   ஒதுக்கீடான    ரிம10மில்லியன்  தன்   செலவுக்குப்   போதுமானதல்ல  என்ற    தகவலையும்   சுஹாகாம்      மனித  உரிமை  மன்றத்துக்கு   தெரியப்படுத்தும்.

“85  முழுநேரப்  பணியாளர்கள்,  முழுநேரப்   பணியாளர்கள்- அல்லாத   எட்டு   ஆணையர்கள்,  மூன்று    அதிகாரிகளுக்கு   ரிம10மில்லியன்.

“இவ்வளவு  சின்ன  பட்ஜெட்டில்   மலேசியாவில்  மனித  உரிமைகளைக்   கவனித்துக்கொள்ளச்   சொல்வது   அதிர்ச்சி  அளிக்கிறது.

“சட்டம்   போதுமான   நிதி  ஒதுக்கப்பட   வேண்டும்   என்கிறது,  எனவே  போதுமான  நிதி  கொடுக்கப்பட    வேண்டும்”,  என்று  சுஹாகாம்   ஆணையர்  ஜெரால்ட்  ஜோசப்    கூறினார்.

சுஹாகாமின்   ஆண்டு   நிதி  ஒதுக்கீடு   2016-இல்  பாதியாகக்   குறைக்கப்பட்டு   பிறகு     சரிசெய்யப்பட்டது.

யுபிஆருக்கு  சமர்ப்பிக்கப்பட  விருக்கும்    அறிக்கை   குறித்து    சமூக   அமைப்புகளுக்கு   விளக்கமளித்தபோது   ஜோசப்   மேற்கண்டவாறு    கூறினார்.