கூட்டமைப்பு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்; நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தல்!

“இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும், இலங்கை அரசாங்கம் எந்தவிதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை. அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும்” என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர்பில் கலந்து கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன்போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிடுகையில், “2019 ஆம் ஆண்டுடன் ஜெனீவா பிரேரணையை அமுல்படுத்த வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவுக்கு வந்துவிடும். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களில் எதனையும் செய்யாத அரசாங்கம் எதிர்வரும் ஒரு வருட காலத்தில் பொறுப்புக்கூறலை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அரசாங்கம் எதனையும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. அந்தவகையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுத்து அறிவிக்கவேண்டும். நாங்கள் இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச நாடுகளுடன் பேச்சு நடத்தும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதே என்று எம்மிடம் சர்வதேச நாடுகள் கேள்வியெழுப்புகின்றன. தற்போது இலங்கை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவேண்டும் என்று புலம்பெயர் அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வைப் பெறலாம்.” என்றனர்.

-4tamilmedia.com

TAGS: