மகாராஷ்டிராவில் போர்க்கொடி.. நீரவ் மோடி குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை கைப்பற்றிய விவசாயிகள்

டெல்லி: நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

இந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். சிபிஐ சில முதற்கட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து இருக்கிறது. இவர் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பிரபலங்கள் எல்லோரும் இவர் நிறுவனத்தில்தான் வாடிக்கையாளராக இருக்கிறார்கள்.

குறைந்த விலை

நீரவ் மோடி கடந்த 2013ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹமது நகர் விவசாயிகளிடம் இருந்து 250 ஏக்கர் நிலம் வாங்கினார். ஒரு ஏக்கரின் அப்போதைய மதிப்பு 2 லட்சம் ஆகும். ஆனால் நீரவ் மோடி 10-12 ஆயிரம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.

மீட்டனர்

இந்த நிலையில் தற்போது அந்த நிலத்தை மீண்டும் விவசாயிகள் மீட்டு இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் என பல விவசாயிகள் வந்து 250 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றினார்கள். அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்போது உழுது கொண்டு இருக்கிறார்கள்.

தேசிய கொடி

இந்த விவசாயிகள் எல்லோரும் தேசிய கொடியோடு அந்த பகுதிக்கு வந்துள்ளார்கள். மேலும் நீரவ் மோடி ஒழிக என்றும் கோஷமிட்டுள்ளார்கள். இனி இங்குதான் விவசாயம் செய்ய போகிறோம் என்றும் கூறியுள்ளனர்.

சிபிஐ வசம் இருக்கிறது

ஆனால் இந்த நிலம் உட்பட எல்லா சொத்தும் தற்போது சிபிஐ வசம் இருக்கிறது. இதை விவசாயிகள் முறைப்படி கைப்பற்ற முடியாது. அதேபோல் ஏற்கனவே இவர்கள் விற்றுவிட்டதாக கையெழுத்திட்டுள்ளதால் கண்டிப்பாக விவசாயிகள் அந்த நிலத்தை உரிமை கொண்டாட முடியாது என்றுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: