“ரகசிய மெட்ரோ, கடுங்குளிர், அணுகதிர்” – ரஷ்யா குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள்

அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது ரஷ்யா. சிரியா போரில் அதன் பங்கு முதல் உளவாளி கொலை வரை செய்திகள் ரஷ்யாவை சுற்றியே சுழல்கின்றன. இதற்கு மத்தியில் அங்கு நேற்று தேர்தலும் நடந்துள்ளது.

சரி. நமக்கு ரஷ்யாவை பற்றி வேறு என்னவெல்லாம் தெரியும்? செஞ்சதுக்கம் முதல் அந்நாட்டின் வெப்பநிலை வரை அந்நாடு குறித்து தெரிந்துகொள்ள பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.

சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.

இரவும் பகலும் உறவாடும் நாடு

நீங்கள் ரஷ்யாவில் இப்போது நேரம் என்ன என்று வெறும் தட்டையாக கேட்க கூடாது. ரஷ்ய நேரத்தை மிக குறிப்பாக கேட்க வேண்டும். இதற்கு காரணம், அந்நாட்டில் 11 நேர மண்டலங்கள் உள்ளன.

ரஷ்யாவின் தலைநகர் மதிய வேளையாக இருக்கும்போது, அநாட்டின் மேற்கு பகுதி இரவாக இருக்கும்.

குளிர் பிரதேசம்

மனிதர்கள் வசிக்கும் பகுதியிலேயே அதிக குளிரான பிரதேசம் ரஷ்யா. அந்நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் -45 டிகிரி செல்சியஸ் குளிரில்தான் குழந்தைகள் பள்ளி சென்று வருகிறார்கள். அந்த பகுதியில் 2013 ஆம் ஆண்டு -73 டிகிரி வரை குளிர் நிலவியது.

செர்னோபில்லைவிட மோசம்

உலகிலேயே அதிக கதிரியக்கம் உள்ள பகுதி செர்னோபில்தான் என்று கருதுகிறோம். ஆனால் அது பாதி உண்மைதான். உலகிலேயே கதிரியக்கம் உள்ள பகுதி ரஷ்யாவின் தென் மேற்கில் உள்ள லேக் கராசே பகுதிதான். 2015 ஆம் ஆண்டு இந்த பகுதி மூடப்பட்ட, ரஷ்ய அணுசக்தி நிறுவனத்தின் கண்காணிப்பில் உள்ளது.

ரகசிய மெட்ரோ

மாஸ்கோவில் ரகசிய சுரங்க மெட்ரோ இயங்குகிறது என்ற வதந்தி பல நாட்களாக உள்ளது. மெட்ரோ 2 என்று அழைக்கப்படும் அந்த ரகசிய மெட்ரோ, ஸ்டாலின் காலத்தில் ராணுவ தேவைகளுக்காக அமைக்கப்படது என்ற பேச்சு முணுமுணுக்கப்படுகிறது. இணையத்தில் அது குறித்து பல தகவல்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால், ரஷ்ய அரசாங்கம் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

இது வதந்திதானா அல்லது உண்மையில் ரகசிய சுரங்க மெட்ரோ இருக்கிறதா என்பது விடை தெரியா கேள்வி!

பெண்களின் ஆயுள் அதிகம்

உலகெங்கும் பெண்களின் ஆயுள் ஆதிகம் என்றாலும், ரஷ்யாவில் இந்த விகிதம் மிகவும் அதிகம். 2017 ஆம் ஆண்டு ரஷ்ய புள்ளிவிபரங்களின் படி, ரஷ்யாவில் பெண்களின் சராசரி வயது 77.06; ஆண்களின் வயது 66.5 வயது. அதாவது, ஒரு தசாப்தத்திற்கு மேல் அதிகம்.

செஞ்சதுக்கம்

செஞ்சதுக்கம் இவான் மன்னரால் உருவாக்கப்பட்டது. இந்த இடம் முதலில் சந்தையாகவும் பின்னாளில் அரசு பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள் நடைபெறும் இடமாகவும் பயன்பட்டுள்ளது. செஞ்சதுக்கத்தின் சிகப்பு நிறத்திற்கும் அந்நாட்டின் அரசியல் பொருளாதாரத்திற்கும் தொடர்புள்ளது என்றாலும், கம்யூனிஸத்திற்கும் சிவப்பு நிறத்திற்கும் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. கம்யூனிஸத்தின் எழுச்சிக்கு முன்பு, ரஷ்ய மொழியில் கிராஸ்னாயா என்று அந்த செஞ்சதுக்கம் அழைக்கப்பட்டது. -BBC_Tamil