சின் தோங் ஆயர் ஈத்தாமில் வெற்றி பெற்றால், ஹரப்பான் புத்ரா ஜெயாவைப் பிடிப்பதில் வெற்றிபெறும்

ஜோகூர்  டிஏபி  தலைவர்   லியு   சின்   தொங்,   ஜோகூரில்  உள்ள   ஆயர்  ஈத்தாம்  நாடாளுமன்றத்   தொகுதியில்   வெற்றி   பெற்றாரானால்  பக்கத்தான்  ஹரப்பான்  புத்ரா  ஜெயாவில்  வெற்றிபெறுவது   உறுதி   என்கிறார்   டிஏபி   தலைமைச்   செயலாளர்    லிம்   குவான்   எங்.

“அவர்  வென்றால்   புத்ரா  ஜெயாவில்  பக்கத்தான்   வெல்லும்..  ஆயர்  ஈத்தாம்  போன்ற   இடங்களை   வெல்லாமல்   புத்ரா  ஜெயாவைப்  பிடிப்பது  இயலாது”,  என   லிம்  இன்று  கோலாலும்பூரில்   கட்சித்    தலைமையகத்தில்   செய்தியாளர்களிடம்    தெரிவித்தார்.

லியு,   ஆயர்  ஈத்தாமின்   நடப்பு   எம்பி-ஆன   மசீச   துணைத்   தலைவர்  வீ  கா  சியோங்கை    எதிர்த்துக்   களமிறங்கப்    போவதாகக்  கூறிய   லிம்   அது  இரண்டு   ஆளுமைகளின்   போராட்டமல்ல    என்றார்.

“அது  மலேசியாவின்  எதிர்காலத்துக்கான  போராட்டம். அதனால்தான்  டிஏபியின்  தளபதியை   அங்கு   அனுப்புகிறோம்.

“ஆயர்  ஈத்தாமில்  வெற்றி  பெறாமல்  புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்ற  முடியாது”,  என்றார்  லிம்.

அங்கு  மலாய்க்காரர்களின்  ஆதரவைப்  பெறுவது   முக்கியமாக   இருக்கும்  என்றாரவர்.

“அது  கிடைக்காவிட்டால்  (புத்ரா  ஜெயாவை  வெல்வது)   கடினமாகும். அதனால்தான்  லியு     களமிறங்குவதால்   அங்கு  மலாய்  சுனாமி   நிகழும்   என்று   எதிர்பார்க்கிறோம்.  ஏனென்றால்   அவர்கள்  பொருள்,  சேவை   வரிகள்(ஜிஎஸ்டி)   ஊழல்கள்  போன்றவற்றால்   வெறுப்படைந்துள்ளனர்”,  என்றவர்   சொன்னார்.