விபத்தில் ஒருவர் பலி: ஊபரின் ஓட்டுநரில்லா கார்களின் பரிசோதனை நிறுத்தம்

ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா வாகனத்தால் ஏற்பட்ட பலியை தொடர்ந்து அனைத்து வட அமெரிக்க நகரங்களிலும் தனது ஓட்டுநரில்லா கார்களை பரிசோதிப்பதை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டெம்பே பகுதியில் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊபரின் ஓட்டுநரில்லா கார் ஒன்று, சாலையை கடக்க முயன்ற 49 வயதான பெண் மீது இடித்ததில் அவர் உயிரிழந்தார்.

ஊபர் உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்களின் ஓட்டுநரில்லா கார்கள் பல்வேறு விபத்துகளில் இதற்கு முன்னர் சிக்கியிருந்தாலும், மரணம் விளைவிக்க கூடிய வகையில் விபத்தொன்று ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த இறப்பு “மிகவும் வருத்தமான செய்தி” என்று ஊபர் நிறுவனத்தின் தலைவரான தாரா கொஸ்ரோஷாஹி தெரிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தானியங்கி முறையில் இயங்கிக்கொண்டிருந்த ஊபருக்கு சொந்தமான கார், விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த காரின் பின்பகுதியில் மனிதர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் அமைப்புமுறை பொருத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எலைன் ஹர்ஸ்பெர்க் என்ற அந்த பெண் பாதசாரிகள் கடக்குமிடத்தை பயன்படுத்தவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு கழகம் ஆகியவை டெம்பேவுக்கு தங்களது குழுக்களை அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளன.

“எச்சரிக்கை மணி”

கார் தயாரிப்பு துறையின் எதிர்காலமாகவும், சாலைவிபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் என்றும் அடிக்கடி கூறப்படும் தானியங்கி அல்லது ஓட்டுநரில்லா கார் தயாரிப்பு சார்ந்த ஆராய்ச்சியில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், டெஸ்லா மற்றும் வேமோ போன்ற நிறுவனங்கள் அதிகளவில் முதலீட்டை செய்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தில் முன்னணியில் விளங்க வேண்டும் என்று எண்ணிய அமெரிக்கா இதுசார்ந்த பரிசோதனைகளுக்கு தனது நாட்டில் வரவேற்பளித்தது.

இருந்தபோதிலும், தானியங்கி கார் தொழில்நுட்பமானது முழுமையாக தயாராவதற்கு முன்னரே பரிசோதிக்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் போக்குவரத்து துறையின் செயலாளராக செயல்பட்ட அந்தோணி பாக்ஸ், இந்த விபத்தானது “பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் ஒட்டுமொத்த தானியங்கி கார் துறை மற்றும் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” என்று தெரிவித்துள்ளார். -BBC_Tamil