50 நாள் கூடி கலைபவர்களுக்கு 400 மடங்கு சம்பள உயர்வா?

மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான வருண் காந்தி, குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் உள்ள நவ்ரச்னா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று ’புதிய இந்தியாவுக்கான யோசனைகள்’ என்னும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1952-1972-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 130 நாட்கள் பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வந்தது. ஆனால், சமீபகாலமாக பாராளுமன்றம் ஆண்டில் 50 நாட்கள்கூட இயங்குவதில்லை.

இந்த நிலையில் கடந்த ஆறாண்டுகளில் எம்.பி.க்களின் சம்பளம் 400 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான வருமான உயர்வுக்கு நாம் அனைவரும் தகுதியானவர்கள் தானா? என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.இதே காலகட்டத்தில் பிரிட்டன் நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் 13 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

அங்கு உயரதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனை வழங்க தனிப்பட்ட சீராய்வு குழு நடைமுறையில் உள்ளது. ஆனால், இங்கு ஒருவரின்  சம்பளம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் ஜனநாயக நெறிகளுக்கு உட்பட்டதாக இல்லை.

நமது நாட்டில் சமநிலையின்மை அதிகரித்துவரும் நிலையில் மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் சமூகப் பொருளாதாரம் சார்ந்த யதார்த்தங்களில் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் 25 கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக பாராளுமன்றத்தின் மக்களவை எம்.பி.க்கள் 180 பேரும், மாநிலங்களவை எம்.பி.க்கள் 75 பேரும் கணக்கு காட்டியுள்ளனர். எம்.பி.யாக பணியாற்றுவதற்காக சம்பளம் வாங்க மாட்டோம் என இவர்கள் முன்வந்தால் நாட்டுக்கு பலகோடி ரூபாய் மிச்சமாகும்.

இனி மிச்சமுள்ள பதவிக்காலம் வரையிலாவது இவர்கள் இனி சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு இயக்கம் ஆரம்பிக்குமாறு பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

-athirvu.com

TAGS: