பாஸ் சிலாங்கூர் மாநில அரசைவிட்டு வெளியேறிவிடுவதே நல்லது, சேவியர்

 

சிலாங்கூர் மாநில அரசிலிருந்து பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், ஆட்சிக்குழு உறுப்பினர்களும் வெளியேறுவதே மேல் என்றார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், கெஅடிலான் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

கடந்த சனிக்கிழமை 17-3-2018 கெஅடிலான், ஜ.செ.க மற்றும் பாஸ் ஆகியவை சிலாங்கூர் மாநிலத்தில் ஆட்சியமைத்த ஒரு மாபெரும் சாதனையை  நினைவு கொள்ளும் தினமாக மற்றும் 10 வருட ஆட்சியின் சாதனையைக் கொண்டாடும் தினமாக அமைந்திருக்க வேண்டும்.

 

ஆனால், 2015 இல் பாஸ் இந்தப் பக்காத்தான் கூட்டிலிருந்து வெளியேறி விட்டதால், ஷா அலாம் மெலாவத்தி அரங்கில் நடைபெற்ற கொண்டாட்டத்தைக் கெஅடிலான் ஜ.செ.க வுடன் மட்டுமே இணைந்து கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது. அருகிலிருந்த ஜே.கே,ஆர் அரங்கில் பாஸ் தனியாகச் சிலாங்கூர் மக்கள் ஜெயம் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.

 

அவர்கள் மக்கள் கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டப் போதிலும், அஸ்மின் அலியின் தலைமையில் செயல்படும் சிலாங்கூர் மாநில அரசு, மாநிலத் துணைச் சபாநாயகர், மூன்று ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தகுந்த அங்கீகாரத்தையே வழங்கி வந்தது என்கிறார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

மக்கள் கூட்டணியில்  பிணக்கு  இருந்த போதும் சட்டமன்றக் கூட்டங்கள், இதர அரசாங்க விவகாரங்களிலும் முறையாகவே இரண்டு தரப்பும் செயல் பட்டு வந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்துப்  பாஸ் கட்சியின்  உறுப்பினர்கள் நகராட்சி உறுப்பினர் மற்றும் கம்பத்துத் தலைவர் பதவிகள் உட்பட பல்வேறு  அனுகூலங்களையும்  அரசாங்கத்திடமிருந்து பெற்று வந்துள்ளனர்.

 

ஆனால் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் இதர உறுப்பினர்களும் கலந்து கொண்ட மக்கள் ஜெயம்   நிகழ்ச்சியில் அதன் மதப் போதகர்  அமாட் டிசுக்கி அப்துல் ராணி பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அழிவுக்குப் பிராத்தனை நடத்தியுள்ளதும், பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களிப்பவர்களுக்கு மரணம் சம்பவிக்கும்  எனச் சபிப்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலாக  எனக்கும், மற்றச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் படவில்லை.

 

கெஅடிலான், ஜ.செ.க  அமானவை தனது பிரதான எதிரியாக அந்தப் போதகர் பிரகடனப் படுத்தியுள்ளார். இங்குள்ள மக்களின்  உழைப்பில், இந்த மாநிலத்தின்  வளத்தில் செல்வத்தில் பயனடைந்த ஒரு கட்சி அதன்  ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றவகையில் பயன் அடைந்தவர்களும் கலந்து கொண்ட  ஒரு பிராத்தனை கூட்டத்தில் இங்குள்ள மக்களின் வேறுபட்ட அரசியல் கொள்கைக்காக அவர்களைச் சபிப்பதா? அப்படிப்பட்டவர்கள் எப்படி நல்ல தோழர்களாக விளங்க முடியும்?

 

சிலாங்கூர் மாநில ஆட்சியில் நிலைத்திருக்கக் கடந்த தேர்தலில் வாக்களித்த  மக்கள் இட்டுள்ள ஆணையைக் கருத்தில் கொண்டு, வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பை நம்பிக்கையைப் பேணும் வண்ணம் தாங்கள்  சிலாங்கூர் மாநில ஆட்சியில் தொடர்ந்து இருந்து வருவதாகக் கூறிக் கொள்ளும் பாஸின் ஆன்மீகத் தலைவர் அடி அவாங், இது குறித்து என்ன சொல்லப் போகிறார்? பக்காத்தான் கூட்டணியால் பாஸ் கட்சிக்கு மற்ற இன மக்களின் வாக்குகள் கிடைத்துள்ளதையும் கவனத்தில் எடுத்துக் கொள்வாரா  எனக் கேட்டார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

இதில் இன்னொரு வேடிக்கை, இந்தப் பிரார்த்தனையை மேற்கொண்ட டிசுல்கிப்லி என்ற நபர் ஓர் உள்ளூர் வாசி என்பதோடு அல்லாமல், அவர் ஷா அலாம் மாநகரமன்றத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர் இதுவரை பெற்று வந்து சகலவிதச் சௌகரியங்களையும் அளித்த மக்களைச் சபிப்பது, இந்த மாநிலத்தை, இம்மாநில அரசைச் சபிப்பதற்கு ஒப்பாகும்.

 

ஒரு தந்தையாக,  ஒரு மனிதனாக எதிரிகளுக்குக் கூடத் தீங்கு ஏற்பட நாம் பிராத்திப்பதில்லை. நம் பிள்ளைகளுக்கோ, மற்றவர்களுக்கோ அப்படிப்பட்ட போதனைகளை மேற் கொள்ளக் கற்றுத் தருவதுமில்லை. இப்படிப்பட்ட துர்ச்செயல்களை எவரும் மேற்கொண்டதாகக் கேள்வி பட்டதில்லை.

 

இதற்குப் பின்பும் இப்படிப் பட்டவர்களுடன் எப்படி இணைந்து செயலாற்ற முடியும்? அவர்களாகவே மாநில அரசைவிட்டு வெளியேறிவிடுவதே உத்தமம் என்கிறார் கிள்ளான் ஸ்ரீ அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.