காணாமற்போனோர் தொடர்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது; அந்தக் குழுவே விடயங்களைக் கையாளும்: மைத்திரிபால சிறிசேன

“காணாமற்போனோர் தொடர்பில் சட்டத்தினை உருவாக்கி, குழுவொன்றை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் தொடர்பிலான விடயத்தை அந்தக் குழுவே கையாளும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முறுகல் நிலை எல்லோருக்கும் தெரியும். நாட்டுக்கு அன்பு செலுத்துகின்ற அரசியல்வாதிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்பது பிரச்சினையாகவே உள்ளது.

அரசியல் ஆதாயம் பெறுவதற்காக சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலை தயாரித்து வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாட்டின் பிரச்சினையை தீர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அடுத்த ஜனாதிபதி பிரதமர் யார் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாகவுள்ளது. மக்களுக்கு அதுவல்ல பிரச்சினை. சிலர் நீண்டகாலமாக இப்படி செயற்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் ஒரு சிலர் மாத்திரமே நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்பட்டு வருகின்றார்கள்.

எனவே நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களுக்கும் ஒரு தகவலை சொல்லுகிறேன். நாட்டின் மீது அன்பு செலுத்தி செயற்படுவோம். தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல் எங்களுக்குத் தேவையில்லை. நாளைய தினத்தில் நாடு எங்கு போக வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதனைத்தான் நாங்கள் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது பலவிதமான பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இங்குள்ள பாடசாலை மாணவர்களுக்கும், பாடசாலைக்கும் இங்குள்ள வடக்கு மக்களுக்கும் ஒரு கெளரவத்தை வழங்குவதற்காக இங்கு நான் வந்தேன்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தனது உரையின்போது, தேர்தலின் போது வடக்கு மக்கள் எனக்கு ஆதரளிவத்தமை தொடர்பில் குறிப்பிட்டார். அந்த செய்நன்றி மறவாமை காரணமாகத்தான் வடக்கில் இருக்கக்கூடிய எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தவறாது கலந்து கொள்கின்றேன். எங்களுக்கு பலவிதமான அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் போக வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அதுதான் மனிதாபிமானம். மனிதர்கள் மீது அன்பு காட்டுபவர்களும், சேவை செய்வதும் அவர்கள் கடமையும், பொறுப்பும் ஆகும். அந்தக் கொள்கையுடன் நான் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன்.

நான் இங்கு வரும்போது காணாமற்போனனோர் தொடர்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாங்கள் காணாமற் போனோர் சம்பந்தமாக அதற்கான சட்டம் ஒன்றை உருவாக்கி அதற்கு ஒரு குழு ஒன்றை நியமித்துள்ளோம். காணாமற் போனோர் தொடர்பான குடும்பங்களின் நலன் தொடர்பில் அந்தக் குழு செயற்பட்டு வருகின்றது. எங்களுடைய வேலைத்திட்டம் தொடர்பில் சரியாக தெளிவுபடுத்தி உள்ளோம். நீங்களும் நாங்களும் ஒன்றுசேர்ந்து இந்த நாட்டுக்காக எங்களுடைய கடமைகளை செய்வோம். இனங்கள் மத்தியில் ஒற்றுமைய ஏற்படுத்துவோம். எங்களிடம் இருக்கின்ற முறுகல் நிலையை இல்லாது செய்வோம். அதற்காக எல்லோரும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: