சவால்களைச் சமாளித்து தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுத்தர வேண்டும்; மைத்திரியிடம் சம்பந்தன் கோரிக்கை!

“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் ஆர்வம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உள்ளது என்பதை நன்றாக அறிவோம்.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும் சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இரா.சம்பந்தன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எமக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் நாட்டின் அனைத்து தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து சுதந்திரத்தை வரவேற்றோம். எம் அனைவரதும் எதிர்பார்ப்புகளும் ஒன்றாகவே அமைந்தன. சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் தமக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கவில்லை. தங்களது பிரச்சினையை தனிநாட்டுக்குள் பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குளே தீர்க்கவே தமிழ் மக்கள் விரும்புகின்றனர்.

தமிழ் மக்களும் சமூக, பொருளாதார அந்தஸ்துக்களை பெற்று இந்த நாட்டினை ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்லவே விரும்புகின்றனர். ஆனால், இந்த கோரிக்கை தொடர்ந்த வண்ணமே இருந்தது. 1972ஆம் ஆண்டு அரசியல் அமைப்பில் தமிழ் மக்களின் உரிமைகள் மட்டுப்படுத்தப்பட்டன.

அதன் பின்னரே நிலைமைகள் மாற்றம் பெற்றன. அதனை அடிப்படையாக கொண்டே 30 ஆண்டுகால யுத்தம் நிலவியது, இது நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பிரச்சினைகளை தீர்க்க இந்தியா தலையிட்டது, ஏனைய சர்வதேச நாடுகளின் தலையீடுகள் காணப்பட்டன. எனினும் யுத்தத்தின் பின்னரும் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னரும் பல்வேறு மாற்றங்களுக்கு பின்னரும் தமிழ் மக்களின் விடயத்தில் நெருக்கடிகளே நிலவுகின்றன. எனினும் எமது பிரச்சினைகளை பிரிபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் பெற்றுக்கொள்ளவே நாம் முயற்சித்து வருகின்றோம். இந்த ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர். அதனால் தான் தமிழ் மக்களின் பூரண ஆதரவு ஜனாதிபதிக்கு கிடைத்தது. தீர்வுகளை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்பது எமக்குத் தெரியும். ஜனாதிபதி தீர்வு குறித்து செயற்படுகின்றனர் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜனாதிபதி அவருக்கு உள்ளது. இந்த அரசாங்கத்திற்கும் உள்ளது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளில் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் அவருக்கு இருக்கும் சவால்களை சமாளிக்க வேண்டியுள்ளது. எனினும், சவால்களை சமாளித்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உங்களால் முடியும். அதனை நீங்கள் செய்ய வேண்டும். அப்படியாக நீங்கள் அந்த கருமத்தினை நிறைவேற்றுகின்ற போது சர்வதேச அளவில் நீங்கள் போற்றப்படுவீர்கள். சர்வதேச அளவில் உங்களுக்கான மதிப்பும் அங்கீகாரமும் பலமடையும். இந்த நாட்டின் பொருளாதரத்தை மீண்டும் பின்னடைவு நாட்டினை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நகர்வுகளை நாம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

-puthinamnews.com

TAGS: