பிஎம் ஆக முடியாத அளவுக்கு மகாதிருக்கு வயதாகி விட்டதா? நாளேடு கருத்தரங்கம் நடத்துகிறது

வரும்  பொதுத்   தேர்தலில்  பக்கத்தான்  ஹரப்பான்   வெற்றிபெற்றால் 93-வயதை  நெருங்கும்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்   உலகின்  முதிய   தலைவராகி  விடுவார்.

இப்போது  உலகின்  மிக  மூத்த   தலைவராக   இருப்பவர்  கியூபாவின்  ரவுல்   கேஸ்ட்ரோ. ஜூன்  மாதத்தில்   அவருக்கு  87 வயதாகும்.

மகாதிர்  நாட்டின்  பிரதமரானால்     வயதான  காலத்தில்   அவரால்  அரசாங்கத்தை     நிர்வாகம்   செய்ய    முடியுமா  என்று  கேள்வி  எழுப்பப்பட்டுள்ளது.

இதற்கு  விடைகாண  மலாய்மொழி   நாளேடான   சினார்  ஹரியான்  ஒரு  கருத்தரங்குக்கு   ஏற்பாடு   செய்துள்ளது. ”பிரதமர்   ஆக  முடியாத    அளவுக்கு  மகாதிருக்கு    வயதாகி  விட்டதா?”     என்ற   தலைப்பில்    இன்று  மாலை     கருத்தரங்கு   நடைபெறுகிறது.

உடல்நலப்  பயிற்றுனர்  கெவின்  ஸஹ்ரி  அப்துல்   கப்பார்,  உளவியலாளர்  டாக்டர்  மாட்   சாஆட்  முகம்மட்  பாகி,   அரசியல்    ஆய்வாளர்    கமருல்   ஜமான்  யூசுப்   ஆகியோர்   அதில்   கலந்துகொள்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை   மகாதிர்   முகநூலில்   முதுமை    அடைந்து விட்டாலும்கூட   தமக்குக்   குதிரை  ஓட்டத்   தெரியும்,  காரோட்டத்   தெரியும்,  ஏன்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்கைத்   தோற்கடிக்கவும்   தெரியும்   என்று   கூறியிருந்தார்.

உலகில்   எந்த   நாடும்   93-வயது   முதியவரைப்  பிரதமராக   தேர்ந்தெடுக்காது    என்று  நஜிப்     கூறியிருந்ததற்கு   மகாதிர்   அவ்வாறு   பதிலடி  கொடுத்திருந்தார்.

“நான்  நினைக்கிறேன்,  இந்த  வயதானவனைக்  கண்டு   நஜிப்பு  மிகவும்   பயப்படுகிறார்  என்று.  அதனால்தான்  என்  கட்சியைப்  பதிவுரத்து    செய்து   நான்   தேர்தலில்   போட்டியிடுவதைத்    தடுக்கப்    பார்க்கிறார்.

“ஆமாம்,   எனக்கு   வயதாகி  விட்டதுதான்,  ஆனால்,  நீங்கள்   என்னவாகப்  போகிறீர்கள்   என்பதைப்   பார்ப்போம்”,  என    ஜூலை   10-இல்  93வயதாகும்  மகாதிர்  குறிப்பிட்டிருந்தார்.