தமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி காட்ட தகுதியுண்டா? – தேனீ

தமிழ் நாட்டிலேயே தமிழ்ப்புத்தாண்டு தேதி குறித்த குழப்பம் நீடித்துக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழப்பத்தை இந்த நாட்டில் இறக்குமதி செய்வது எந்த வகையில் நியாயம்?

கட்டுரையாளர் இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தலில் ஆச்சரியமில்லை. ஆனால் அவருடைய் முடிவான ஆலோசனையை சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

தமிழ் நாட்டுத் தமிழர்க்களைக் காணும்போது, அவர்களை இந்தியாவுடனும் அந்நாட்டில் இந்து மதம் என்ற பெயரில் வைதிக மத நெறிகளையும், கொள்கைகளையும் அமுல்படுத்தி தமிழர்களை ஆதிக்கம் செய்து வந்து ஏறக்குறைய 1,100 ஆண்டுகள் ஆகி விட்டன.

மேலும் இன்றைய தமிழ் நாட்டின் மக்கள் தொகையில் திராவிடக் குடும்பம் என்ற பெயரில் தென்னக மாநில மக்கள் அனைவரும் கலந்துள்ளனர்.

இதில் 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தெலுங்கு மொழி பேசுவோர் மட்டுமே 8.65% இருந்துள்ளனர். காலாங்காலமாக ஆந்திராவிலிருந்து பிழைக்க வந்த தெலுங்கு மக்கள் இன்று தமிழ் பேசி பிரித்தறிய முடியாமல் போய்விட்டது. இவர்களையும் சேர்த்தால் தெலுங்கு வமிசாவழி மக்கள் தமிழ் நாட்டில் 20%-க்கு குறையாமல் இருப்பார். சென்னையில் தெலுங்கு வழி வந்த மக்களே 1970ஆம் ஆண்டுகள் வரை 60% வரை வாழ்ந்தனர்.

இன்னும் மலையாள மொழி மற்றும் இதர இந்திய மாநில மொழி பேசுவோரைச் சேர்த்தால் ஏறக்குறைய 30%க்கும் குறையாத தமிழ் நாட்டு மக்களில் மற்ற மாநில தாய்மொழியைப் பேசுவோர் அல்லது பூர்வீகமாகக் கொண்டோர் உள்ளனர் என்று கூறலாம்.

இதன் காரணமாகவே தமிழ் நாட்டில் தமிழர் என்ற பெயரில் எந்த ஒரு
அரசாங்க கொள்கை முடிவுகள் எடுக்கப் பட்டாலும் அதற்கு எதிர்ப்பும் கீழறுப்புச் செயல்களும் நடந்து கொண்டே இருக்கின்றன.

வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாட்டில் வந்தேறிகளில் பெரும்பாலோர் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து சிறப்பாக வாழ்கின்றனர். வறிய நிலையில் வாழ்வோரில் தமிழரே பெரும்பான்மையோர். .

மாநில ஆட்சியில் காலாகாலமாக காங்கிரஸ் ஆட்சி முடிந்து திராவிட கட்சிகளின் ஆட்சி நடந்தது. இதில் திராவிட ஆட்சி என்பது தமிழரும் பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து குடியேறி பார்ப்பனர் ,இந்தி எதிர்ப்பு வெறியை தமிழர் மீது ஏத்தி தமிழரின் அறிவீனத்தைப் பயன்படுத்தி குளிர் காய்ந்து வருவோரே. இன்று அவரும் தமிழராகி விட்டனர்.

இப்படி பார்ப்பனர் இந்தி மொழி எதிர்ப்பு கொள்கையை முன் வைத்து அரசியல் நடத்தி தமிழரிடையே இறை மறுப்புக் கொள்கையை முன் வைத்தவரும் இந்த திராவிட கருத்தியல் அயோக்கியர்தாம்.

தமிழரில் பெரும்பான்மையோர் இறை கொள்கையை ஏற்றுக் கொண்டவரே. அவ்வாறு இறை கொள்கையை ஏற்றுக் கொண்டோர் தங்களின் மதம் ‘இந்து மதம்’ என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவரே.

இவர்களுக்கு இந்து மதம் என்றால் அது புராணக்கதைகளின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு மதம் என்பது மட்டுமே தெரியும். அதற்கு மேல் அறிவார்ந்த சமய நெறிகள் உள்ளதை பெரும்பான்மையோர் அறியார்.

இத்தகைய பின்னணியில்தான் சோதிட நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டு 60 ஆண்டு சுழற்சி முறையை பல்லவர் காலத்திலிருந்தே சக அல்லது சாலிவாகண ஆண்டு கணக்கைப் பயன்படுத்தி வருகின்றனர். இது சாளுக்கிய மன்னர் ஆட்சியில் அமர்ந்த கால கணக்கைக் கூறும். அதற்கும் தமிழருக்கும் என்ன தொடர்பு என்று கட்டுரையாளர் ஆராயாமல் போனது நமது போதாத காலமே.

சோதிடத்தை நம்பி வாழும் தமிழர் பெரும்பாலோர். இதில் மதம் மாறி போன தமிழரில் பலரும் சோதிடம் பார்க்கப் போவது விந்தை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான். தமிழ் நாட்டு அறிஞர் வைதிகப் பிடியிலிருந்து விலகி தமிழருக்குத் தனித்த அடையாளம் வேண்டுமென்று திருவள்ளுவர் ஆண்டு கணக்கை ஏற்படுத்தியது. அது பொங்கல் நாள் முதல் கணக்கிட மேற்கொண்டது.

தமிழ் நாட்டில் எப்பொழுதுமே ஒரு குறிப்பிட்ட ஆண்டு கணக்கு முறை இருந்தது கிடையாது. ஒவ்வொரு அரசரும் பதவியேற்ற காலம் முதல் ஆண்டு கணக்கு தொடங்கி அவர் ஆட்சி முடிவடைய ஆண்டு காலம் முடியும்.

ஆதலால் தமிழர் அவர்தம் அடையாளத்தை நிலை நிறுத்த தமிழர் புத்தாண்டு திருவள்ளுவர் ஆண்டு என்றாகியது.

தமிழ் நாட்டில் இது தோல்வி கண்டதற்குக் காரணம் அதை சட்டமாக முன்மொழிந்த கலைஞர் குடும்பமே பின்பற்றாது போனதுதான். நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பதை அவர்தம் குடும்பமே பறை சாற்றி வருகின்றது.

ஆனால் மலேசியாவின் நிலமை வேறு. நாம் மலேசிய குடிமகன் என்னும் அடிப்படையில் மலேசியராக வாழ்கிறோம். இந்தியன் என்று கூறுவதற்கு நமக்கு அருகதையில்லை காரணம் நாம் இந்திய குடியுரிமைக் கொண்டோர் அல்ல.

அதேபோல் தமிழ் நாட்டில் பெரும்பான்மையான தமிழரின் அறியாமையின் காரணமாக அவர் இந்து என்று கூறி வைதிக நெறிகளையும் பண்பாடுகளையும் அவர் மீது ஏத்தி வைத்துள்ளனர். அந்த குட்டையில் மூழ்கிப் போன தமிழருக்கு அதிலிருந்து மீண்டு வர வழி தெரியவில்லை.

மலேசிய தமிழருக்கு இத்தகைய தடையில்லை.நாம் சுயமாக சிந்தித்து நமது சமயம் எது என்று அறிந்து அதன் வழியில் நிற்கவும் அதன் அடிப்படையில் வாழவும் உரிமை பெற்றுள்ளோம். அதனால் நாம் நமக்கு வேண்டிய புத்தாண்டு முறையை கடைப்பிடிக்க உரிமையும் தகுதியும் பெற்றுள்ளோம் என்பதை கட்டுரையாளர் அறிவாராக.

இவ்விடயத்தில் தமிழ் நாட்டுத் தமிழர் நமக்கு வழி காட்ட தகுதியற்றோராகி விட்டனர் என்பதால் குருடும் குருடும் குருட்டாட்டமாடி குழியில் விழ வேண்டிய அவசியம் மலேசிய தமிழருக்கு இல்லை என்பதை கட்டுரையாளர் அறிவாராக.