தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா, அல்லது சித்திரையா? – ‘வெடுக்’ வீராசாமி

தமிழ்ப் புத்தாண்டு துவங்குவது தை மாதமா அல்லது சித்திரை மாதமா என்பது தமிழ் நாட்டிலேயே பிசுபிசுத்துப் போன ஒரு விவாதமாகக் கருதப்படுகிறது. அந்த பிசுபிசுப்பை இந்த நாட்டிலும் சிலர் பிடித்துக் கொண்டு தொங்க நினைப்பது ஏன் என்று தான் புரியவில்லை.
பொதுவாக சித்திரை மாதத்தில் அனுசரிக்கப்படும் தமிழ்ப் புத்தாண்டை தை மாதத்துக்கு கொண்டு சென்றால் உலகத்தமிழன் எந்த வகையில் முன்னேற்றம் அடைந்து விடப்போகிறான்? அல்லது சித்திரையிலேயே அனுசரிக்கப்பட்டால் இன்னும் எந்த வகையில் தாழ்ந்து விடப்போகிறான்?
தமிழ் மொழியினுள் அந்நிய மொழி புகுந்து தமிழின் சிறப்பை சிதைத்து விடக்கூடாது என்று கொடி பிடிக்கும் கூட்டம் நம்மில் ஒரு புறம். இவர்கள் அந்நியன் கண்டு பிடிக்கும் பொருள்களுக்கும் தமிழில் பெயர் (அது கரடு முரடானதாக இருந்தாலும்) வைக்கத் துடிக்கிறது. அடுத்தவன் பெற்ற பிள்ளைக்கு (நம்மால் பெற முடியாவிட்டாலும்) பெயர் வைக்கத் துடிப்பது…? ம்…..
இதே வாரம் நம் நாட்டு ஊடகம் ஒன்றில் செம்மொழி பெருமை பேசும் ஒருவர் (Facial Mask) என்பதை முக முடி, முக முடி என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினார். முக முடி என்றால் மீசையா? தாடியா? இதற்கும் இந்த (Facial Mask) க்கும் என்ன சம்மதம்? முக மூடி என்பதை முக மூடி என்று நெடிலாக உச்சரிக்க இயலாமல் முகமுடி என்று குறிலாக உச்சரித்து விட்டு நான் செம்மொழி பேசுகிறேன் என்பதில் என்ன பெருமை?
இதே போலவே, பல தொழில்நுட்ப சொற்களை ஆங்கிலத்திருந்து தமிழுக்கு கொண்டுவ்ருகிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு கரடு முரடாக மொழி பெயர்க்கிறார்கள்.
ஒரு தடவை இரண்டு தடவை என்று சொல்வதில் வரும் தடவை என்ற சொல்லுக்கு மாற்றாக ‘வாட்டி’, அல்லது ‘தாட்டி’ என்றும் மாதிரி என்பதை ‘மாறி’ என்றும் இவர்கள் (ஊடகத்தார்) மாற்றி உச்சரிப்பதும் ஏன்?
நம் தமிழ் இனத்தில் தமிழர்கள் பலர் தமிழை விட்டே ஒதுங்கி ஓடுகிறார்கள். அவர்களை தடுத்தி நிறுத்தி இழுத்துப் பிடித்து தம்ழைக் கற்க வைக்க தமிழ் மொழியை மேலும் எளிமைப் படுத்தினால் ஆகுமா? கரடு முரடு படுத்தினால் ஆகுமா?
மேலே நான் சொன்னதெல்லாம் உதாரணங்களே… (உண்மையில் சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கிறது)
முந்தா நாள் பெய்த மழையில் நேற்று பூத்த காளான் போல இருக்கும் ஓர் இனத்திலிருந்து தோன்றியது தான் தமிழ் இனம். எங்கள் கலாச்சாரத்தில் இருந்துதான் தமிழ் கலாச்சாரம் உருவானது. நாங்கள் அணிந்து தூக்கிப் போட்டது தான் உங்கள் புடவையும் வேட்டியும் என்கிறான் அவன். அதையும் நாம் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டு தானே இருக்கிறோம்?
இந்த லட்சணத்தில் சித்திரையில் இருந்து ‘தை’க்கு தமிழ்ப் புத்தாண்டை இறக்குமதி செய்வதால் உலகத் தமிழன் அடையப் போகும் நன்மைகள் தான் என்ன?
சரி. சரி. வழக்கம் போல இங்கே சிலர் என் மீது எகிறிப்பாய்வார்கள், பிறாண்டுவார்கள் என்றும் தெரியும்.
தமிழர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்வோர் சித்திரை மாதத்திலும், நாங்கள் தமிழர்கள் அல்ல ‘டம்மி’ழர்கள்’ என்று தங்களை சொல்லிக் கொள்வோர் தை மாதத்திலும் தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடுங்கள். தீர்ப்பு சரியா?
அடேய்…அங்கே என்ன சத்தம். என்னது…நாட்டாமை தீர்ப்பை மாத்தணுமா?