தமிழர்களுக்கு ஆண்டுக் கணக்கு – பூனைக்கு மணி கட்டுவது!     

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 24, 2018 –   இன்றைய உலகில் தமிழர்களை எந்தக் கருத்தாலும் ஒன்றுபடுத்த முடியாது. காரணம், தமிழர்களிடையே கலப்பினத்தவரும் தமிழ்ப் பகைவரும் அடையாளம் காண முடியாத அளவிற்கு ஒன்றெனக் கலந்து நிற்கின்றனர். அத்துடன், இன-மொழி உணர்வு குன்றி ‘தான்-தன் சுகம்’ என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

ஆனால், தமிழனை மூன்று அடிகளால் வசப்படுத்தலாம். முதல் அடி சோறு; சோற்றுக்காக கட்சி மாறுவான் தமிழன்; அடுத்து, பணத்தால் அடித்தால் தமிழன் படிவான். நூறு வெள்ளி கடன் கொடுத்தால் கூட, கும்பிட போன தெய்வம் நேரில் வந்ததே என்பான்; மூன்றாவது அடி, தடியடி. கட்டி வைத்து அடித்தால் தமிழன் அணி மாறவும் புறம் பேசவும் தயங்கவே மாட்டான்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நல்ல தமிழர்களும்கூட, மாற்றானுக்கு இடம் கொடுப்பரே அன்றி இன்னொரு தமிழன் வாழ்வதை எந்நாளும் பொறுக்கமாட்டார்.

இப்படிப்பட்ட நிலையில் வலுத்தவன் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ளும் தமிழன், இளைத்தவன் என்னதான் உண்மையை மாய்ந்து மாய்ந்து உரைத்தாலும் மறுத்து உரையாடுவான்; எதிர்த்து வழக்காடுவான்.

தமிழர்களுக்கு தொடர் ஆண்டுக் கணக்கு இல்லை என்பதால், 1921-ஆம் ஆண்டில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் ஒன்றுகூடி, திருவள்ளுவர் தொடர் ஆண்டுக் கணக்கை வகுத்தனர். அதைத்தான், 2006 முதல் 2011 வரை தமிழகத்தை ஆண்ட கலைஞர் மு.கருணாநிதி சட்டப்படி ஆக்கினார்.

மலையகத்திலும் இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவன், ‘நினைவில் வாழும்’ மு.மணிவெள்ளையனார் உள்ளிட்ட தமிழத் தலைவர்களும் திருவள்ளுவர் தொடர் ஆண்டைப் பிரகடனப்படுத்தி அதன்படி தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று முழங்கினர்; பிரகடனம் செய்தனர்.

2011 மேத் திங்கள் பிற்பகுதியில் தமிழக ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த  ஜெயலலிதா, அதையெல்லாம் மாற்றி, மீண்டும் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார். ஜெயலலிதா, மொழியாலும் இனத்தாலும் தமிழர் இல்லை. இருந்தாலும், அவர் துணிந்து இதைச் செய்தார் என்றால், தமிழர்களின் இலட்சணம் என்ன என்பதை அவர் சென்னையில் குடியேறிய இளமைக் காலந்தொட்டே அவதானித்து வந்ததால்தான்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை

நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! – நீஎனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா

என்று விநாயகப் பெருமானிடம் முத்தமிழையும் கேட்கும் தமிழன், தமிழ் இனத்திற்கும் பிள்ளையாருக்கும் உள்ள தொடர்பு எத்தனை ஆண்டுகளாக என்று ஓரளவாவது எண்ணிப் பார்த்தானானால், இப்படி யெல்லாம் கேட்க மாட்டான்.

தொல்காப்பியம் இயற்றப்பட்டு குறைந்தப்பட்சம் 4,500 ஆண்டுகளாவது இருக்கும். அப்படியானால், தமிழ் இன்னும் எத்தனைக் காலத்திற்கு முன்பே தோன்றி இருக்க வேண்டும். அப்பட்டிப்பட்ட தமிழை 450 ஆண்டுகள்கூட தொடர்பில்லாத பிள்ளையாரிடம் அதுவும் பாலையும் தேனையும் பாகையும் பருப்பையும் கொடுத்து அதற்கு ஈடாகத் தமிழைக் கேட்கிறான் என்றால், தமிழர்கள் தமிழை எந்த அளவிற்கு சிறுமைப் படுத்தினாலும் ஏற்றுக் கொண்டு சமயமே பெரிதென வாழத் தலைப்பட்டுவிட்டனர் என்பதாகத்தான் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

தொல்காப்பியர், திருவள்ளுவர் காலம் இருக்கட்டும்; சைவமும் பக்தி இலக்கியமும் செழித்த அண்மைக் காலத்தில்கூட பிள்ளையாருக்கும் தமிழர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பன்னிரு திருமுறைகளிலும் சொல்லப்பட்டுள்ள பல்லாயிரக் கணக்கான சிவனெறிப் பாடல்களில் பிள்ளையாரைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை. இந்து என்ற சொல்லும் இல்லை; ஏன், இராமாயனத்திலும் மகாபாரதத்திலும்கூட இந்து என்ற சொல் இல்லை.

எனவே, தமிழனுக்கு தன் இனத்தைப் பற்றிய கம்பீரமும் இல்லை; மொழியைப் பற்றிய பெருமையும் இல்லை; சமயம் குறித்த தெளிவும் இல்லை; நாளைக்கு நானே முகத்தில் கொஞ்சம் முடியை வளர்த்துக் கொண்டு ‘கீரன் ஜி’ என்று சொல்லிக் கொண்டு ஏதோ ஓர் வண்ண ஆடையை இடுப்பில் சுற்றிக் கொண்டு அரை நிர்வாணத்துடன் எங்காவது வீதியில் உட்கார்ந்தால் என் காலில் விழவும் கூட்டம் வரும். அதுதான் இன்றைய தமிழனின் சமய நெறி என்றாகி விட்டது.

இப்படிப்பட்ட தமிழனுக்கு தமிழ்ப் புத்தாண்டாவது,வெங்காயமாவது? அவனுக்கு திருவள்ளுவரும் வேண்டாம்; தொல்காப்பியனும் வேண்டாம்; நல்ல தமிழனையும் தெரியவில்லை; கள்ளத் தமிழனையும் அடையாளம் காண முடியவில்லை.

அதனால், கிருஷ்ணனுடன் குலாவி நாரதப் பெருமான் பெற்ற 60 பிள்ளைகளின் பெயர்களைக் கொண்ட சித்திரைப் புத்தாண்டே போதும் அவனுக்கு! வேண்டாம் என்றால், யார் பூனைக்கு மணி கட்டுவது? என்ற எலிகளின் வாதம்தான் மிஞ்சும்.