தொகுதி மறுசீரமைப்பு அறிக்கை: குவான் எங் அதிர்ச்சி என்கிறார், அஸ்மின் துரோகம் என்கிறார்

 

நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாவால் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள (மார்ச் 28 வரையில்) தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்று பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் கூறுகிறார். அதே அறிக்கையை “நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு துரோகம்” என்று வர்ணிக்கிறார் சிலாங்கூர் மந்திரி பெசார் அச்மின் அலி.

மாநிலம் முன்மொழிந்த பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றத் தவறிவிட்டது என்று குவான் எங் கூறினார்.

அந்த அறிக்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தாம் எதையும் இப்போதைக்கு வெளியிட முடியாது. சில மாநிலங்களின் பரிந்துரைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றவே இல்லை என்று குவான் எங் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அறிக்கை தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கை மற்றும் அதன் சுதந்திரம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது என்று கூறிய குவான் எங், மாநிலங்கள் செய்திருந்த பரிந்துரைகளை ஏன் பின்பற்றவில்லை என்பதற்கு அது விளக்கம் அளித்தாக வேண்டும் என்றார்.

25 மில்லியன் மலேசியர்களுக்குத் துரோகம்

தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை வெளியிடுவதற்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா விதித்துள்ள தடை மக்கள் தங்களுடைய வாக்களிப்புத் தொகுதிகள் பற்றிய தகவலைத் தெரிந்துகொள்ளும் உரிமையை நிராகரித்துள்ளது என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி கூறினார்.

மேற்கு மலேசியாவின் தேர்தல் தொகுதிகள் மறுசீரமைப்பு அறிக்கை வெளியிடப்படுவதற்கு எதிராக பண்டிகார் விதித்துள்ள தடை 25 மில்லியன் மலேசியர்களுக்கும் நமது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த துரோகம் என்று அஸ்மின் மேலும் கூறினார்.

இது ஒரு மிக நியாயமற்ற செயல். தங்களுடைய தேர்தல் தொகுதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை அனைத்து மலேசியர்களுக்கும் உண்டு. அதை மறுப்பது அவர்களின் அரசமைப்புச் சட்ட உரிமைகளை மீறுவதாகும் என்று அஸ்மின் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.