சாலையை மறுசீரமைப்பதாக அளித்த வாக்குறுதியை நஜிப் நிறைவேற்ற வேண்டும், பூர்வக்குடியினர் வலியுறுத்து

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அங்குள்ள சாலைகளை மறுசீரமைப்பு செய்வதாக கொடுத்த வாக்குறுதியை, பிரதமர் நஜிப் ரசாக் நிறைவேற்ற வேண்டுமெனக்கோரி, கேமரன் மலை, போஸ் லெஞ்சாங் பூர்வக்குடி சமூகம், இன்று மனு ஒன்றைக் கையளித்தனர்.

கடந்த 2016, ஆகஸ்ட் 27-ல், பஹாங், சுங்கை கோயான், போஸ் பெத்தாவ் தொடங்கி போஸ் லெஞ்சாங் வரையில், சாலை மறுசீரமைப்பு திட்டத்திற்கு RM15 மில்லியனை ஒதுக்குவதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார்.

இருப்பினும், 35கிமீ தூரமுள்ள அச்சாலையை மறுசீரமைப்பு செய்ய, போதிய ஒதுக்கீடு இல்லை என்றும், குத்தகையாளர் கூடுதல் பணம் கேட்பதாகவும், மலேசியப் பூர்வக்குடி மேம்பாட்டு இலாகாவிடம் இருந்து (ஜகோவா) தனக்கு ஒரு கடிதம் வந்துள்ளதாக, பூர்வக்குடிகள் பிரதிநிதி பா லாய் பொங்சு கூறினார்.

போஸ் லெஞ்சாங்கில் இருக்கும் 14 கம்பங்களுக்கும் இருக்கும் இரண்டு பிரதான சாலைகள் தற்போது மிக மோசமாக பழுதடைந்துள்ளன.

மலேசிய சோசலிசக் கட்சி, கேமரன் மலை கிளை செயலாளர் சுரேஸ்குமார், அச்சாலை மிக மோசமாக பழுதடைந்துள்ளதால், வாகனங்கள் பயணிக்க முடியவில்லை, குடியிருப்பாளர்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது, அல்லது வெட்டுமர சாலைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது என்றார்.

“அந்த வெட்டுமர சாலைக்குச் செல்ல, பூர்வக்குடியினர் ஓர் ஆற்றைக் கடந்தாக வேண்டும். அங்கிருந்து பிரதான சாலைக்கு 2 மணி நேரம் நடந்துசெல்ல வேண்டும்,” என்றும் அவர் கூறினார்.

இன்று, பூர்வக்குடிகளுடன், கோலாலம்பூர் ஜாகோவா பணிமனையில் கோரிக்கை மனுவைக் கையளித்த சுரேஸ், அடுத்ததாக, பொதுத்துறை அமைச்சு, நிதி அமைச்சு, கூட்டரசுப் பிரதேசம் மற்றும் புறநகர் மேம்பாட்டு அமைச்சு போன்றவற்றுக்கும், போஸ் பெத்தாவ் – போஸ் லெஞ்சாங் சாலையை விரைந்து சீரமைக்குமாறு வலியுறுத்தி, மனு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.

கிராமவாசிகள் மருத்துவ உதவிகள் பெற கடினமாக இருப்பதாகவும், எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண்கள் போஸ் பெத்தாவ் பிரதான வீதிக்கு அருகே, ஒரு டிரான்ஸிட் இல்லத்தில் தங்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சுரேஸ் தெரிவித்தார்.

போஸ் லெஞ்சாங் தேசியப் பள்ளி மாணவர்கள், மாணவர் தங்கும் விடுதியில் தங்கியிருப்பதாகவும், வீட்டிற்குச் சென்றுவர மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.