சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளராக, பிரதமரின் சிறப்பு அதிகாரி

பாரிசான் சார்பாக சிலாங்கூர் மந்திரி பெசார் வேட்பாளர் யார் என்பது இன்னும் கேள்விக்குரியாக இருக்கும் நேரத்தில், பல்வேறு ஊகங்களும் எழும்பியுள்ளன.

ஆக அண்மையில், பிஎன்னின் மந்திரி பெசாராக நியமிக்கப்படவுள்ளவர், பிரதமரின் சிறப்பு அதிகாரி இஷாம் ஜாலில் என்று பெயர் அடிப்படுகிறது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பட்டதாரியான இஷாம், பாஸ் கட்சியின் தொகுதியான பாயா ஜெராஸ் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது.

மலேசியாகினி இந்த விஷயத்தைப் பற்றி விசாரிப்பதற்கு இஷாமைத் தொடர்பு கொண்டது, ஆனால் இன்னும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை.

1986 முதல் பி.என்.னின் வசமிருந்த பாயா ஜெராஸ் தொகுதியை, 13-வது பொதுத் தேர்தலில்,  முதன் முறையாக, 5,522 வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கைப்பற்றியது.

கடந்த பொதுத் தேர்தலில், சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இருக்கும் பாயா ஜெராஸ் சட்டமன்றத்தில் 57 விழுக்காட்டினர் மலாய்க்கார வாக்காளர்கள், சீனர்கள் 30 %, இந்தியர்கள் 11 விழுக்காட்டினர்.

அடுத்த புதன்கிழமை, தேர்தல் எல்லைகள் மறுபரிசீலனை செய்யப்படுமானால், சுபாங் மற்றும் பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்றத் தொகுதிகளோடு, புதிதாக P106 டாமான்சாரா மற்றும் P107 சுங்கை பூலோ ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதனால், வாக்காளர் எண்ணிக்கையிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும், தேர்தல் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றால், பாயா ஜெராஸ் சட்டமன்றத்தில் போட்டியிட சுபாங் அம்னோ தொகுதி தலைவர் ஷேய்ன் இஸ்மா இஸ்மாயிலும் விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால், தேர்தல் எல்லை மறுசீரமைப்புச் செய்யப்பட்டால், பாயா ஜெராஸ் சட்டமன்றத்தை விட்டுக்கொடுத்து, சுபாங் நாடாளுமன்றம் அல்லது அதன் புதிய பெயரான சுங்கை பூலோவில் போட்டியிட ஷேய்ன் விரும்புகிறார்.

இருப்பினும், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியை எதிர்த்து போட்டியிட தகுதியான வேட்பாளர் அம்னோவில் இதுவரை இல்லை என்று நம்பத்தகுந்த அம்னோ வட்டாரம் தெரிவித்துள்ளது.