அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாக இருக்க வேண்டாம், மக்களுக்கு ரஃபீடா வேண்டுகோள்

14-வது பொதுத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அரசியல் கட்சிகளுக்கு கடன்பட்டிருப்பதாக ஒருபோதும் உணரவேண்டாம் என்று முன்னாள் அம்னோ மகளிர் தலைவர், ரஃபீடா அஜிஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

தனி மனிதர் மற்றும் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், நாட்டின் எதிர்காலம் முக்கியமானது என்று, இன்று தனது முகநூல் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

“நமக்குச் ‘செண்டிமெண்ட்’ தேவை இல்லை, தனி நபருக்கோ அல்லது கட்சிக்கோ விசுவாசமாக இருக்க வேண்டியதில்லை. கடன்பட்டுவிட்டதாக எண்ணி, நாட்டைத் தாக்கிவரும் தவறான காரியங்களுக்கு குரல் எழுப்பாமல் கண்களையும் காதுகளையும் மூடி கொண்டிருக்க வேண்டாம்.

“நமது குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தைச் சிந்தித்துப் பாருங்கள், தற்போதய பெரிய பிரச்சினைகள் நாட்டைத் தாக்க விட்டுவிட்டால் என்ன நடக்கும்,” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

21 ஆண்டுகளாக சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த ரஃபீடா, தற்போது பல பிரச்சனைகளுக்கு, குறிப்பாக 1எம்டிபி பிரச்சினைக்குக் குரல் கொடுத்து வருவதைக் காண முடிகிறது.

பிரிம் போன்ற அரசாங்க மானியங்கள், எலவன்ஸ், சம்பள அதிகரிப்பு ஆகியவற்றைக் கடந்து, நாட்டின் எதிர்காலத்தை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இந்த மானியங்கள், உதவிகள் குறுகிய காலத்திற்கே நன்மையளிக்கும், ஆனால் 1எம்டிபி கடன்கள், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் பல ஆண்டுகளுக்கு விளைவை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.