தேனி நியூட்ரினோ திட்டம்: வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி

தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்தியவனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த திட்டம் செயற்படுத்தப்படும் இடத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவரும் விடயங்கள் முழுவதும் நடைபெற்று வரும் இயற்பியல் துறை சார்ந்த ஆய்வுகளுக்கு பயன்படும் என்பதாலும் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கலாம் என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்திற்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தினமும் 340 கிலோ லிட்டர் தண்ணீரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இத்திட்டத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு, அப்பகுதியில் செயற்படுத்தப்பட வேண்டிய மழை நீர் சேகரிப்பு திட்டங்கள், நிலத்தடி நீர் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, எரிசக்தி பயன்பாடு மற்றும் காற்றுத் தரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை கையாளவேண்டிய வழிமுறைகள் குறித்தும் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தை செயற்படுத்தும் முன் மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

நியூட்ரினோ திட்ட அனுமதிக்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

-BBC_Tamil

TAGS: