பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

சென்னை,

பழனி முருகன் கோவில் நவபாஷாண மூலவர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர் உருவாக்கினார் என்பது வரலாறு.

அந்த சிலை சேதமடைந்துவிட்டதால் அதே போல் புதிதாக ஐம்பொன் சிலை ஒன்று கடந்த 2003-2004-ம் ஆண்டு செய்யப்பட்டது. அந்த சிலையை பிரபல சிற்பி முத்தையா ஸ்தபதி செய்துள்ளார். அந்த சிலையை செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணையில், சிலை செய்ததில் ரூ.1.31 கோடி முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணைக்கு பிறகு முத்தையா ஸ்தபதி, அறநிலையத்துறை முன்னாள் இணை கமிஷனர் கே.கே.ராஜா ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். கும்பகோணத்தில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு விசேஷ கோர்ட்டில் அவர்கள் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கோர்ட்டு உத்தரவின் பேரில் அவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பழனி முருகன் கோவிலில் நவபாஷாண மூலவர் சிலையை அகற்றுவது போன்று அகற்றிவிட்டு, அதை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சதித்திட்டம் தீட்டப்பட்டது எப்படி? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த வழக்கை பொறுத்தமட்டில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சரியான கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறது. பழனி முருகன் கோவில் மூலவர் சிலையான நவபாஷாண சிலையை அகற்றுவதற்கு திட்டமிட்டது சரியான நடவடிக்கை அல்ல.

அதை அகற்றிவிட்டு அதேபோல இன்னொரு ஐம்பொன் சிலையை செய்து மூல ஸ்தானத்தில் வைத்துள்ளனர். அந்த சிலை நவபாஷாணத்தால் செய்யப்பட்ட சிலைக்கு முன்னால் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது. நவபாஷாண சிலையின் முகத்தை புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை மறைத்துள்ளது. மேலும் சிலை நிறுவப்பட்டு 4 மாத காலத்துக்குள் ஐம்பொன் சிலையின் நிறம் மாற தொடங்கியது.

20 கிலோ தங்கம் கலந்து செய்யப்பட்ட ஐம்பொன் சிலை 4 மாதத்துக்குள் எப்படி நிறம் மாறும்?. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, புதிதாக வைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை அகற்றிவிட்டார்கள். மீண் டும் நவபாஷாண சிலையை மூலவராக வைத்து வழிபாடு செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை அறையில் வைத்து பூட்டப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன் சிலை நிறம் மாறாமல் இருந்திருந்தால் அதையே நிரந்தரமாக மூலவர் சிலையாக வைத்து வழிபாடு செய்திருப்பார்கள். காலப்போக்கில் நவபாஷாண சிலையை அங்கிருந்து அகற்றி இருட்டறையில் பூட்டி வைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பல ஆண்டு காலம் கழித்த பிறகு அந்த நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி சென்று விற்பனை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதில் அறநிலையத்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படுவார்கள். இந்த முறைகேடு தொடர்பாக போலீசில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை. அப்படியே மூடி மறைத்துவிட்டார்கள்.

முத்தையா ஸ்தபதி ஐம்பொன் சிலையை செய்வதற்கு தகுதி படைத்தவர் அல்ல. அவர் கற்சிலைகளை தான் செய்து வந்தார். அதுவும் ஐம்பொன் சிலையை தனது சொந்தப்பட்டறையில் வைத்து செய்துள்ளார். இது தவறான செயல் ஆகும்.

அவர் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் அருங்காட்சியகம் நடத்தி வருகிறார். அதன் மூலம் ஆயிரம் சிலைகளை வெளிநாடுகளுக்கு கொண்டுசென்று விற்பனை செய்துள்ளார். அதுதொடர்பாக விரிவான விசாரணை நடக்க உள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதியையும், கே.கே.ராஜாவையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.

இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் விசாரணையை தோண்ட, தோண்ட மேலும் அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள முத்தையா ஸ்தபதி போலீஸ் விசாரணையின்போது கண்ணீர்விட்டு கதறி அழுததாக தெரிகிறது.

நான் தெய்வ குற்றத்துக்கு ஆளாகி விட்டேன். நான் மட்டும் இந்த தவறை செய்யவில்லை. எனக்கு மேல் நிறைய பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று முத்தையா ஸ்தபதி கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

முத்தையா ஸ்தபதிக்கு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

-dailythanthi.com

TAGS: