சிரியா: கிளர்ச்சியாளர்களின் நகருக்குள் நுழைந்தது அரசுப்படை

கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்ட பின்னர், கிழக்கு கூட்டாவிற்குள் வெகுதூரம் சிரியா அரசுப்படை நுழைந்துள்ளது.

ஜெஷ் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற டௌமா நகரில் மிக பெரியதொரு போர் நடவடிக்கை மேற்கொள்ள சிரியா அரசுப்படை தன்னை தயார் செய்து வருவதாக செய்தித்தாள் வெளியிட்டுள்ளது.

பிற கிளர்ச்சிப்படை பிரிவுகளை போல இட்லிக் மாகாணத்திற்கு வெளியேறுகின்ற முடிவை இன்னும் 48 மணிநேரத்திற்குள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், தங்களுடைய படையினர் ஆயுதங்களை துறந்துவிட்டு அங்கேயே தங்கியிருக்க விரும்புவதாக ஜெஷ் அல்-இஸ்லாம் கிளர்ச்சிப்படை பிரிவு தெரிவித்திருக்கிறது.

ரஷ்யாவோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற டௌமா நகரில் சிக்கியுள்ள சுமார் 70 ஆயிரம் குடிமக்களை பற்றி கவலையடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்திருக்கிறது.

தலைநகர் டமாஸ்கஸூக்கு அருகில் கிளர்ச்சியாளர்களின் கடைசி வலுவிடமாக விளங்குகின்ற கிழக்கு கூட்டாவை கைப்பற்றுவதற்கு கடந்த பிப்ரவரி மாத நடுவில் சிரியா அரசுப்படைப்பிரிவுகளும், அதன் நட்பு நாடுகளின் படைகளும் தொடங்கிய தாக்குதலில், குறைந்தது ஆயிரத்து 700 பேருக்கு அதிகமாக கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. -BBC_Tamil