ஹரப்பான் வேட்பாளர்கள் பிகேஆர் சின்னத்தின் கீழ் போட்டியிடக்கூடும்!

 

மகாதிர் முகமட் 1998 ஆம் ஆண்டில் அன்வார் இப்ராகிம்மை பதிவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து பிகேஆர் தோற்றுவிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான பக்கத்தான் ஹரப்பானின் தலைவராக இருக்கும் மகாதிர், பிகேஆரின் வேட்பாளராக போட்டியிட வேண்டியிருக்கும்.

பல்வேறு கட்சிகளிடமிருந்து கிடைத்தத் தகவல்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹரப்பானின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் அக்கூட்டணியின் வேட்பாளர்கள் எதிர்வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் பிகேஆரின் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அந்நான்கு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்படும்.

இதனை மகாதிர் உறுதிப்படுத்தினார். ஆனால், எந்த சின்னம் பயன்படுத்தப்படும் என்பதைக் கூற அவர் மறுத்து விட்டார்.

பிகேஆர் சின்னத்தைத் தவிர்த்து, அமனாவின் சின்னம் பயன்படுத்துவதுகூட ஆலோசனையில் இருக்கிறது.

டிஎபியின் சின்னத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

டிஎபி சின்னத்தைப் பயன்படுத்தினால், அது ஏகப்பட்ட அவதூறுகளை ஈர்க்கும். பெர்சத்து சின்னத்தைப் பயன்படுத்தினால் நாங்கள் அனைவரும் பின்னர் தடை செய்யப்படலாம் என்று அஞ்சுகிறோம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம் கூறிற்று.

மேலும், இந்த முன்மொழிதலுக்கு அடிமட்ட உறுப்பினர்களிடமிருந்து எதிர்ப்பு ஏற்படக்கூடும்.

இதன் காரணமாக, இந்த விவகாரத்தை தங்களுடைய கட்சிகளின் உறுப்பினர்களோடு விவாதித்து அவர்கள் இதற்கு இணங்குவதற்கு வகைசெய்ய நான்கு கட்சிகளுக்கும் ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொண்ட போது, பல டிஎபி தலைவர்கள் கருத்து கூற மறுத்து விட்டனர். மேலும், இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

ஊழல் வழக்கு சம்பந்தமாக பினாங்கில் இருந்ததால் தாம் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

“இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. டிஎபி அதன் சொந்த சின்னத்தைப் பயன்படுத்தும்”, என்று அவர் வலியுறுத்தினார்.