தூத்துக்குடி இன்னொரு போபாலாகிவிடக்கூடாது… ஏப்ரல் 1ல் ஸ்டெர்லைட் போராட்டக் களத்தில் கமல்!

சென்னை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 1ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கப் போவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது : தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மக்களாக சென்று அவர்களின் போராட்டத்தில் அமர இருக்கிறேன். வருகிற ஞாயிற்றுக் கிழமை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்கிறேன்.

போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல வேண்டும் என்று நானே நினைத்திருந்தேன். ஆனால் சில காரணங்களுக்காக சில பேர் வரவேண்டாம் என்று சொன்னார்கள். அந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே அழைக்கட்டும் என்று காத்திருந்தேன்.

அதே போல நேற்று அந்த அழைப்பு வந்தது, விரைவில் தூத்துக்குடி சென்று போராட்டக் களத்தில் இணைகிறேன். 47 நாட்களாக மக்களின் போராட்டம் நடக்கிறது, அதில் பங்கேற்பது மக்களின் பிரதிநிதியாக என்னுடைய கடமை என்பதால் நான் அங்கு செல்கிறேன்.

ஸ்டெர்லைட் ஆலை மூட வேண்டும் என்று தான் நானும் வலியுறுத்துகிறேன். ஸ்டெர்லைட் ஆலை சில விதிகளை மீறியுள்ளது, இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு அபாயகரமான பகுதியாக மாறி வருகிறது என்பது கண்முன்னே தெரிகிறது, போபாலில் நடந்தது போல தூத்துக்குடியிலும் நடக்காமல் தடுக்க வேண்டியது அவசியம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

tamil.oneindia.com