நச்சுத் தேனான ஹரப்பானிடமிருந்து விலகியிருங்கள், அரசு ஊழியர்களுக்கு நஜிப் எச்சரிக்கை


 

பக்கத்தான் ஹரப்பானின் “வெற்று வாக்குறுதிகளை” நம்ப வேண்டாம் என்று அரசு ஊழியர்களை பிரதமர் நஜிப் இன்று எச்சரித்தார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டணி அதிகாரத்தைப் பிடிப்பதற்காக நம்பத்தகாத மற்றும் மக்களைக் கவரும் வாக்குறுதிகளை அளிப்பதாக அவர் கூறினார்.

அரசு ஊழியர்களுக்கு வீடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர் வீட்டு வசதிகள் அளிக்கும் பாரிசானின் சாதனையையும் அது பற்றி ஹரப்பானின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் வேறுபடுத்திக் காட்டினார்.

நாம் எப்போதும் மக்களுக்கு முன்நிலை அளிக்கிறோம். ஆனால், அது சாதாரண மக்களுக்கான, பொறுப்பற்ற கொள்கைகளை உருவாக்குவது என்றாகாது. அது நாட்டின் பொருளாதாரத்தையும் எதிர்காலத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றாரவர்.

எதிரணியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவதற்கான அவர்களின் தகுதி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

“அவர்களின் வெற்று வாக்குறுதிகளால் கவரப்படக்கூடாது. அவை விஷம் கலந்த தேன் போன்றவை.

“வாக்குறுதிகள் நல்லவையாக இருக்கின்றன. ஆனால் அவை பெருந்துன்பத்தைக் கொணரும்”, என்று கெப்போங்கில் இன்று பிபிஎ1எம் நிகழ்ச்சியில் பேசுகையில் நஜிப் கூறினார்.

ஆட்சியைப் பிடித்த நூறு நாள்களில் பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அகற்றி விடுவோம் என்று ஹரப்பான் தேர்தல் அறிக்கை வாக்குறுதி அளித்துள்ளது.

அவ்வாறு செய்வது அரசாங்க வருமானத்தில் ரிம20 பில்லியன் பற்றாக்குறையை ஏற்படுத்தும். அப்பற்றாக்குறை அரசாங்கத் திட்டங்களை இரத்து செய்ய இட்டுச் செல்லும்.

“அது உங்களது இலட்சியமாகி விட்டால், நீங்கள் எடுக்கும் வழிமுறைகள் முக்கியமல்ல”, என்று நஜிப் மேலும் கூறினார்.