மிக சக்திவாய்ந்த ராணுவம் ரஷ்யாவா, அமெரிக்காவா?

உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

“இத்தகைய தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் செயல்” என அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக வெளியுறவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளை ஆஸ்திரேலியா ஆதரிக்கிறது.

பனிப்போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான பகைமைக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் அணி திரண்டிருக்கும் சந்தர்ப்பம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யாவும் சவால் விடுத்துள்ளது.

ரஷ்ய தூதர்களை உலகின் பல நாடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.

அமெரிக்கா தங்களை மிரட்டி, அச்சுறுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுவரை சுமார் 20 நாடுகள், 100 ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளன.

இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையாக கருதப்படுகிறது.

சிரியாவில் ரஷ்யாவின் பங்கு குறித்து நேட்டோ நாடுகளுக்கு கவலை இருப்பதும், ரஷ்யாவின் பொருட்டே அமெரிக்கா, சிரிய அதிபர்-பஷர் அல் அசாதை அகற்ற விரும்பவில்லை என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

இதுபோன்ற பல்வேறு சர்வதேச கணிப்புகளுக்கு இடையே, தற்போது ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ராணுவ பலம் பற்றி பேசப்படுகிறது.

இன்றைய தினத்தில் அமெரிக்காவுடன் மோதுவதற்கான பலம் பெற்றிருக்கிறதா ரஷ்யா? பலப்பரிட்சை செய்ய அதற்கு திறனுள்ளதா பார்ப்போமா?

யாருடைய ராணுவம் வலிமையானது?

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி அமைப்பின் அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ராணுவ செலவுகள் ஒவ்வொரு ஆண்டும் 1.2% அதிகரித்து வருகிறது.

இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் செலவிடப்படும் ராணுவத்திற்கான செலவில், 43 சதவீத பங்களிப்புடன் அமெரிக்கா முன்னணியில் உள்ளது.

அமெரிக்காவைத் தவிர ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையிலுள்ள 4 நிரந்தர உறுப்பு நாடுகளில் எதுவும் அமெரிக்காவின் அருகில்கூட வரமுடியாது.

சீனா 7 சதவீதத்துடன் 2வது இடத்திலும், அதை அடுத்து பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை சுமார் 4 சதவீதத்துடன் அடுத்த இடத்தையும் பிடிக்கின்றன.

அதோடு வேறெந்த நாட்டிற்கும் அமெரிக்காவைப் போன்று உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான ராணுவத் தளங்கள் இல்லை.

தங்கள் நாடு மற்றும் பிராந்திய அளவிலேயே பிற நாடுகள் ராணுவ நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக் கொள்கின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சியின் அறிக்கையின்படி, ராணுவ செலவினங்களின் அடிப்படையில் பார்த்தால், அமெரிக்கா, சீனா மற்றும் செளதி அரேபியாவிற்கு அடுத்து நான்காவது இடத்தில் ரஷ்யா உள்ளது.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டிமிட்ரி கோரன்பெர்க்கின் கருத்துப்படி, ரஷ்யா 2009ம் ஆண்டிலேயே தனது ராணுவத்தை நவீனப்படுத்தத் தொடங்கிவிட்டது. சோவியத் சகாப்தத்தை சேர்ந்த ஆயுதங்களை விரைவாக அகற்ற விரும்பிய ரஷ்யா அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது என்கிறார் அவர்.

அமெரிக்காவுக்கு ரஷ்யாதான் முக்கியமான அச்சுறுத்தல் என்று கடந்த ஆண்டு கூறிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேத்ஸ், சண்டைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க ராணுவ வீரர்களும் அதன் ராணுவத் தளங்களும் உலகின் பல நாடுகளில் உள்ளன. இந்த விஷயத்தில், ரஷ்யா அமெரிக்காவுக்கு சமமான பலத்தை பெறவில்லை.

இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், “உலக வரைபடத்தை எடுத்து அதில் அமெரிக்க ராணுவத் தளங்கள் இருக்கும் இடத்தை குறியுங்கள். ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை அது தெளிவாக்கிவிடும்” என்று கூறினார்.

ராணுவத்திற்காக ரஷ்யா செலவழிக்கும் தொகையை குறைத்துகாட்டுவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், இரு நாடுகளின் ராணுவ செலவில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக உள்ள நாட்டின் ராணுவ வலிமையுடன் பிற நாடுகளை ஒப்பிடமுடியாது. பொருளாதார வளமையிலும் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் ஒப்பிடமுடியாது.

ரஷ்யாவிடம் உலகின் மிக சக்திவாய்ந்த அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், அவை அமெரிக்காவை அழிக்கும் திறனுள்ளவை என்றும் கூறப்படுகிறது.

பாதுகாப்பு நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்காவை தாக்கும் நடவடிக்கையை புதின் ஒருபோதும் எடுக்க மாட்டார், ஏனெனில் அது தற்கொலை நடவடிக்கையாக முடியும் என்பதை அவர் அறிவார்.

இரு நாடுகளும் எல்லைகளை பகிர்ந்துக் கொள்ளவில்லை, அதனால், தாக்குதல் நடந்தால் பெர்ரிங் நீரிணை மற்றும் அலாஸ்கா வழியாக நடைபெறும். இதன் பொருள், இந்த இரு நாடுகளில் ஒன்றால் மற்றொன்றுக்கு நேரடியான அச்சுறுத்தல் இல்லை.

விமானப்படை பலத்துடன் ஒப்பிட்டால், அமெரிக்காவைவிட ரஷ்யா மிகவும் பின்தங்கியிருக்கிறது.

ஆனால் செர்பியா, இராக், ஆஃப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் அமெரிக்க விமானப்படையின் செயல்பாட்டில் கடுமையான பாதிப்புகளை ரஷ்யா ஏற்படுத்தும்.

இருந்தாலும் பனிப்போர் முடிந்துவிட்டதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். புதினின் தீவிரமான தேசியவாதம் போரை விரும்பாது என்று சர்வதேச ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ரஷ்யா தயாரித்திருக்கும் ஓர் அணுசக்தி ஏவுகணை உலகம் முழுவதிலும் எங்கு வேண்டுமென்றாலும் தாக்கும் திறன் கொண்டது என்றும், அதன் இலக்கை மாற்றியமைக்க முடியும். ஆனால் அதை நிறுத்திவிட முடியாது என்று இந்த மாதம்தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

ரஷ்யாவின் தேசிய தொலைக்காட்சியில், புதின் மக்களுக்கு ஒரு விளக்கக்காட்சியைக் காட்டினார். நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய ஒரு டிரோனை ரஷ்யா தயாரிக்கிறது என்றும், அவற்றை அணு ஆயுதத் தாக்குதலுக்கும் பயன்படுத்தலாம் என்றும் புதின் கூறினார்.

அது மட்டுமா? இந்த புதிய ஏவுகணையை, ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு முறைகளாலும் தடுத்து நிறுத்தமுடியாது என்றும் புதின் கூறினார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரண்டு மணி நேரம் இதுபற்றி புதின் உரையாற்றினார்.

மறுபுறம், அமெரிக்க அணு ஆயுதங்களை நவீனமயமாக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார். -BBC_Tamil