காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில் குத்திய மத்திய அரசு

சென்னை: உச்சநீதிமன்ற விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அதுவும் 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் கெடு விதித்திருந்தது உச்சநீதிமன்றம். ஆனால் மத்திய அரசோ இதற்காக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

அழுத்தம் தர வேண்டிய தமிழக அரசோ, 29-ந் தேதி வரை பார்க்கலாம் என இழுத்தடித்து வந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்துவிட்டது. மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதித்துள்ளது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் வஞ்சகத்தால் தமிழக காவிரி டெல்டா பாசனம் கேள்விக்குறியாகிவிட்டது. மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்தி துரோகம் செய்திருக்கிறது மத்திய பாஜக அரசு.

ஒட்டுமொத்த தமிழினத்தையே கொந்தளிக்க வைத்த இத்தகைய பச்சை படுபாதக துரோகத்துக்குப் பின்னராவது தமிழக அரசு விழித்துக் கொண்டு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இந்த வஞ்சக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உடனே தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

-tamil.oneindia.com

TAGS: