தமிழ் இடைநிலைப்பள்ளியும் தேசிய முன்னணியும்!

ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 30, 2018.

நாட்டில் நூற்றுக் கணக்கான தமிழ் தொடக்கப்பள்ளிகள் இருக்கும் நிலையில், ஒரேவோர் இடைநிலைப்பள்ளிகூட தமிழ் மொழிக்காக அமைவதில் தேசிய முன்னணி அரசு ஏன் இப்படி தடை போடுகிறது என்று தெரியவில்லை!

வெகு அண்மைக் காலம்வரை, இந்தச் சிக்கல் நாட்டின் வடபுலத்தில் மையம் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது இந்தப் பிரச்சனை நாட்டின் மையப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

ஹிண்ட்ராஃப் எழுச்சியைத் தொடந்து, இந்திய சமுதாயத்தினருக்கு துணை முதல்வர் பதவி, சட்டமன்ற அவைத் தலைவர் பதவிகள் எல்லாம்  கைகூடினானும், தமிழ் இடைநிலைப்பள்ளி மட்டும் இன்றைய நாள்வரை எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது.

இதற்காக மாநில அரசுகள் என்னதான் பாடாற்றினாலும், அது குறித்து இறுதி முடிவெடுப்பதும் கிடப்பில் போடுவதும் மறுப்பதும் மத்திய அரசிடம் இருப்பதால்தான், தமிழ் இடைநிலைப் பள்ளிக்கான கட்டமைப்பு குறித்து மாநில அரசால் ஒரு கட்டத்திற்கு மேல் நகரமுடியவில்லை.

இடமும் கொடுத்து, கட்டடமும் கட்டித் தருகிறோம். எங்களுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளிக்கான உரிமமும் அங்கீகாரமும்தான் வேண்டும் என்று பினாங்கு மாநில அரசின் சார்பில் பல முறை சொல்லிப் பார்த்தனர். கண்டுகொள்ளாத, மத்திய கூட்டரசின் கல்வி அமைச்சர் ஒரு கட்டத்தில் நாட்டில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைப்பதற்கு மலேசிய அரசியல் சாசனம் இடம் தராது என்று சொல்லிவிட்டார்.

அரசியல் சாசனம் என்னவோ சுயம்புவாகத் தோன்றியதைப் போலவும் அதில் மாற்றமோ திருத்தமோ செய்ய முடியவே முடியாது என்பதைப் போலவும் டத்தோஸ்ரீ மாட்சிர் காலிட் சொன்னதில் இருந்து, தேசிய முன்னணி அரசுக்கு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைவதில் கடுகளவும் விருப்பம் இல்லை என்பது தெளிவாகிறது.

தற்பொழுது, பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சிலாங்கூர் மாநில அரசு சார்பில் தமிழ் இடைநிலைப்பள்ளிக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த பத்து ஆண்டுகளாக சிலாங்கூர் மாநிலத்தை ஆளும், எதிர்க்கட்சி அரசு இப்போழுது தேர்தல் நெருங்கி வரும் தருவாயில் இதைப் பற்றி பேச முற்படுவது, அரசியல் காரணமாகவும் இருக்கலாம்.

இருந்தாலும், தேசிய முன்னணி அரசு இதைப் பற்றி கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் மலேசியாவாழ் தமிழ்ச் சமுதாயத்திர்கு வேதனையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ம.இ.கா.வினரும் தமிழ் இடைநிலைப்பள்ளியைப் பற்றி எந்நாளும் வாய்த் திறப்பதில்லை என்பதும் அது ஏன் என்பதுமே கேள்விக் குறியாக உள்ளது.

காலமும்   நாளைய அரசியலும் இதற்கெல்லாம் விடை சொல்லக்கூடும். பொறுத்திருப்போம்.