பிஎஸ்எம் ‘முற்றிலும் ஓரங்கட்டப்படுகிறதே’: சுங்கை சிப்புட் எம்பி வருத்தம்

பிஎஸ்எம்   சுங்கை  சிப்புட்   எம்பி   டி.ஜெயக்குமார்,  தம்  கட்சி   எதிரணிக்  கூட்டணியான  பக்கத்தான்   ஹரப்பானை   ஆதரிப்பதாகக்  கூறினார்.  ஆனால்,  அக்கூட்டணி   தங்கள்  கட்சியைப்  பொருட்படுத்துவதில்லை  என்றார்.

“2011  தொடங்கி   அவர்களோடு  ஒத்துழைக்கத்   தயார்   என்று  கூறி  வருகிறோம்.  அவர்கள்  அதை  மதிக்கவில்லை.  அவர்கள்  பக்கத்தான்   ஹரப்பானை  அமைத்தபோதும்   தொகுதிப்  பங்கீட்டுப்   பேச்சு   நடத்தியபோதும்    எங்களை   அழைக்கவில்லை.

“அவர்களுக்கு  நல்லது   நடக்க  வேண்டும்     என்பதுதான்     எங்கள்   விருப்பம்.  ஆனால்,  அவர்கள்   எங்களைக்  கண்டுக்கொள்வதில்லை.

“முற்றாக  ஓரங்கட்டி  விட்டார்கள்,  அதுதான்  இப்போது  பெரும் பிரச்னை”,  என  ஜெயக்குமார்  கூறியதாக  த   ஸ்டார்    தெரிவித்தது.

பிஎஸ்எம்,  சுங்கை  சிப்புட்   தவிர்த்து  15  இடங்களுக்கு  வேட்பாளர்களைத்   தேர்ந்தெடுத்துள்ளது.  ஆனால்,  அது  கோரும்  ஐந்து   நாடாளுமன்ற   இடங்களையும்   11  சட்டமன்ற   இடங்களையும்   ஒதுக்கித்தர  ஹரப்பான்   தயாராக  இல்லை.

“எட்டு  இடங்களைத்   தந்து  எட்டு  இடங்களை  விட்டுக்கொடுக்குமாறு   சொன்னால்கூட   ஆலோசிக்கலாம்.

“ஆனால்,   அவர்கள்   பிஎஸ்எம்    கேமரன்   மலை,   செமிஞ்சி,  கோட்டா   டமன்சாரா   ஆகிய   இடங்களில்   போட்டியிடாவிட்டால்   சுங்கை  சிப்புட்டைக்     எனக்குக்   கொடுக்கத்    தயாராக   இருக்கிறார்கள்.  அங்கு  நான்   பிகேஆர்  சின்னத்தில்  போட்டியிட வேண்டும்.

“குறிப்பிட்ட   அந்த  இடங்களில்   நாங்கள்  ஓரளவு  வலுவாக  இருக்கிறோம்”,  என்றவர்  த   ஸ்டாரிடம்   கூறினார்.

கடந்த     வாரம்     பிகேஆர்  மற்றும்    டிஏபி-யைச்    சேர்ந்த     மூத்த      எம்பிகள்   இருவர்    தொகுதி  கோரிக்கை  குறித்து   விவாதிக்க  முன்வந்ததாக  ஜெயக்குமார்  கூறினார்.

அப்பேச்சுகளில்  நியாயமான  தீர்வு  கிடைக்காவிட்டால்  பிஎஸ்எம்    16  இடங்களிலும்   தனித்தே   போட்டியிட    முடிவு   செய்திருப்பதாக   அவர்   தெரிவித்தார்.