செரண்டா தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டும்

 

செரண்டாவில் நிர்மாணிக்கப்படவுள்ள தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே கட்டித்தர வேண்டுமென இவ்வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று, சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்றுவோம் என்ற குழுவின் தலைவர் தலைவர் ஜீவா இக்கோரிக்கையை விடுத்தார்.

கடந்த 2012 இல் முதலாவது அடிக்கல் நாட்டு விழாவும் 2015 இக் இரண்டாவது அடிக்கல் நாட்டு விழாவும் புதிய பள்ளியைக் கட்டுவதற்கான இடத்தில் நடைபெற்றன.

செரண்டா தமிழ்ப்பள்ளிக்கு அரசாங்கம் ரிம64 இலட்சம் ஒதுக்கியிருந்த வேளையில், ஐந்து ஆண்டுகளில் வெறும் சிமிந்தி தூண்கள் மட்டுமே போடப்பட்டு கட்டுமானப் பணி அத்துடன் நிற்கின்றது.

கடந்த 26.3. 2017 இல், குறிப்பிட்ட ஒரு தரப்பினரிடமிருந்து வக்கீல் நோட்டீசை முன்வைத்து உலுசிலாங்கூர் மாவட்ட மன்றம் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கல்வி துணை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

தனியார் தரப்பிடமிருந்து வந்த வக்கீல் நோட்டீசுக்கு மாவட்ட மன்றம் ஏன் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ஜீவா வினவினார்.

யுஎம்டபுள்யு நிறுவனம் 2 ஏக்கர் நிலத்தை தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கு இலவசமாக வழங்கியுள்ள வேளையில், கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட இந்திய குத்தகையாளரும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் தனியார் தரப்பு வக்கீல் அனுப்பிய நோட்டீசுக்கு மாவட்ட மன்றம் ஏன் மதிப்பளிக்க வேண்டும் என ஜீவா வினவினார்.

பல ஆண்டுகளாக கட்டப்படாமலிருக்கும் செரண்டா தமிழ்ப்பள்ளியை விரைவில் கட்ட வேண்டும் என கடந்த 24.4. 2016 மற்றும் 2.8. 2016 களில் பிரதமருக்கு கடிதங்கள் அனுப்பியிருந்ததாகவும் 14.2. 2017 மற்றும் 23. 9. 2017 களில் நேரிடையாக புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பொதுமக்களின் சார்பாக மனு வழங்கியுள்ளதாகவும் ஜீவா தெரிவித்தர்.

1,000 பேர் கையொப்பமிட்ட மனுவும் தற்போது தன்னிடமுள்ளதாக அவர் கூறினார். எந்த ஒரு பயனும் இன்றுவரை நிறைவேறாததால், செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமே நேரிடையாக மேற்கொள்ள வேண்டும் என ஜீவாவுடன் மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களும் தெரிவித்தனர்.

இப்பொழுதாவது இந்தத் தமிழ்ப்பள்ளிக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும் என தாங்கள் பெரிதும் நம்புவதாக அவர்கள் கூறினர்.

 

-மலேசிய நண்பன் 2.4. 2018