பொய்ச் செய்தி தடை மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டது, 11 பாஸ் எம்பிகள் ஆதரவு

 

நாடாளுமன்றம் இன்று பொய்ச் செய்தி தடை மசோதா 2018 ஐ ஏற்றுக்கொண்டது. அதற்கு ஆதரவாக 123 வாக்களும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

எதிர்க்கட்சி தரப்பிலும் அதற்கு ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்றத்திலிருந்த 11 பாஸ் உறுப்பினர்களும் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் நசருடின் ஹசான் ஆகியோர் வாக்கெடுக்கப்படும் போது அவையில் இல்லை.

அங்கிருந்த இரு சுயேட்சை உறுப்பினர்களில் சிம் தோங் ஹின் (மலாக்கா) மசோதாவுக்கு எதிராக வாக்களித்தார். சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் அப்துல் காலிட் இப்ராகிம் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்ற குழுவினர், பிஎஸ்எம் மற்றும் வாரிசான் எம்பிக்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இச்செய்தி பதிவு செய்யப்படும் நேரத்தில், பக்கத்தான் ஹரப்பானின் எம்பிகளில் யார் யார் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதை மலேசியாகினியால் உறுதி செய்ய முடியவில்லை. இருந்த போதிலும், டிஎபியின் அரிப் அப்துல் சாப்ரி அப்துல் அசிஸ் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். இன்னும் நான்கு டிஎபி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவரால் அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.