‘தீவிரம் அடையும் போராட்டங்கள்`

தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்துறை இலாகாவின் அவசர அழைப்பை ஏற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று(2.4.18) திடீரென்று டெல்லி சென்றார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். “நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட களமாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதில் உச்சக்கட்ட நிகழ்வாக, தஞ்சை மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தேசியக் கொடியை எரித்து, அந்த படத்தை வாட்ஸ் அப்பில் வெளியிட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.” என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

“இந்த பரபரப்பான சூழ் நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளை சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அழைத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து அவர்களுடன் ஆலோசித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை ஒன்றை அனுப்பிவைத்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் காஞ்சீபுரத்தில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றார். அங்கு தியானம் மேற்கொண்ட அவர், விஜயேந்திரரிடம் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து மதியம் 1.30 மணிக்கு அவசர அவசரமாக சென்னை திரும்பினார்.

இந்த சூழ்நிலையில், டெல்லி வருமாறு அவருக்கு உள்துறை இலாகா அவசர அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி சென்றுள்ள கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.

-தினத்தந்தி

TAGS: