கர்நாடகத்தில் ரஜினி – கமல் படங்களை அனுமதிக்க மாட்டோம்..

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சினை வெடித்தபோது கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். அப்போது அதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை தாக்கி கலவரம் செய்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்று கூறினார்.

இதனால் அந்த நேரத்தில் ரஜினிகாந்த் நடித்த “குசேலன்” படம் கர்நாடக மாநிலத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அந்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் உள்பட கன்னட தலைவர்கள் அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து கர்நாடகம் சென்ற ரஜினி காந்த் “தான் அப்படி பேசியது தவறு” என்றும், கர்நாடக மக்கள் வீரத்தை காட்ட வேண்டும் என்றும், அதற்கு தான் துணையாக இருப்பதாகவும் கூறி கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இதைத் தொடர்ந்து அப்போது ‘குசேலன்’ படம் கர்நாடக மாநிலத்தில் திரையிட அனுமதிக்கப்பட்டது.

தற்போது அதே போன்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார். இதனால் அவர் நடித்த ‘காலா’ மற்றும் ‘2.0’ படங்கள் கர்நாடகத்தில் வெளியாகுமா? என்ற கேள்விக்குறி எழுந்து உள்ளது.

இது குறித்து பெங்களூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திய கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது.

வருகிற 5-ந்தேதி கர்நாடகம்-தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம். அன்றைய தினம் தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம்.

காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரஜினியின் ‘காலா’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘2.0’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள் கர்நாடகத்தில் வெளியாகுமா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது.

கமல் நடித்த ‘விஸ்வ ரூபம்-2’, ‘சபாஷ்நாயுடு’ திரைப்படங்கள் தற்போது திரைக்கு வருவதாக தெரிய வில்லை.