ரணிலைக் காப்பாற்றுவதா கூட்டமைப்பின் வேலை?!

கடந்த சில நாட்களாக தென்னிலங்கையில் சஜித் பிரேமதாசவின் படங்களைத் தாங்கிய விளம்பரத் தட்டிகள் அங்கொன்றும்…

…இங்கொன்றுமாக முளைப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றன. சுமார் 72 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி கால்நூற்றாண்டுக்குப் பிறகு, புதிய தலைமைத்துவமொன்றை நோக்கி செல்லும் கட்சிகளின் பிரதிபலிப்பாகவே இதனைக் கொள்ள முடியும்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் நாடு பூராவுமே பல்வேறு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. அதுவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டினை தேசிய அரசாங்கத்துக்குள்ளும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் எதிர்பார்த்த அளவினையும் தாண்டி அதிகரிக்க வைத்தது. அரசியல் என்பது அடிப்படையில் மக்களின் அதிகாரங்களை முன்னிறுத்துவது. ஆனாலும், நடைமுறை உலகில் (தேர்தல்) அரசியல் என்பது கட்சிகள் மற்றும் ஒரு சில தனிநபர்களின் அதிகார போதை சார்ந்ததாக மாறிவிட்டது.

மைத்திரி- ரணில் இணைவும், தேசிய அரசாங்கத்தின் உருவாக்கமும் நாட்டின் முன்னேற்றம் சார்ந்தது என்று சொல்லப்பட்டாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் அதற்கான சாட்சிகளாக எதுவும் பெரிதாகப் பதிவாகியிருக்கவில்லை. மாறாக, தங்களது அதிகார வரம்புகள் சார்ந்த இரகசிய இழுபறியும் குழிபறிப்புக்களுமே அரங்கேறி வந்தன. தேசிய அரசாங்கத்தின் தேன்நிலவு காலமென்பது, எந்தவொரு புதிய அரசாங்கமும் பதவியேற்றதும் நிகழ்த்தும் காட்சி மாற்றங்களை ஒத்ததாகவே இருந்தது. ஆனாலும், புதிய அரசியலமைப்பு பற்றிய உரையாடலும், தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினை கண்டடைதல் எனும் விடயமும் பெரிய கவர்ச்சியினை உண்டு பண்ணியிருந்தது. குறிப்பாக, கொழும்பு லிபரல்கள் மற்றும் மேற்கு நாடுகளின் பார்வையில் அது நம்பிக்கையான மாற்றம் என்ற சொல்லப்பட்டது. ஆனால், தீர்மானங்களை எடுப்பதற்கான திராணியின்மை மற்றும் காலந்தாழ்த்துதல் எனும் நிலைப்பாடுகள் தேசிய அரசாங்கத்தினை மக்கள் மத்தியில் நம்பிக்கையிழக்கச் செய்திருக்கின்றது. மஹிந்த தரப்பின் மீதான தென்னிலங்கையின் நம்பிக்கை என்பது, தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தியில் உருவான ஒன்றுதான்.

தேசிய அரசாங்கத்தின் மீதான அதிருப்தி தொடர்பில் மைத்திரி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒதுங்கிக் கொள்ள ரணில் பதில் சொல்ல வேண்டி வந்திருக்கின்றது. அதுதான், பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவரும் நிலையை உருவாக்கியது. அதுதான், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணிலை அகற்றுவதற்கான பெரும் அழுத்தத்தினையும் கொடுக்க வைத்திருக்கின்றது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ள பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், ரணிலுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி+ பங்காளிக் கட்சிகள்) மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என்று தெரிகின்றது. இதனால், நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்படும் வாய்ப்புக்களே அதிகமுண்டு. ஏதாவது மாயங்கள் நிகழ்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு தொகுதியினர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் விட்டாலோ, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பைப் புறக்கணித்தாலோ நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறலாம்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவ மாற்றத்தை செய்ய எத்தணிக்கின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ புதிய அரசாங்கத்தினை அமைத்தல் அல்லது, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியாக அமருதல் எனும் நிலையை எடுக்க எத்தணிக்கின்றது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, எதிர்காலத் திட்டமிடல்கள் என்பன என்னவாக இருக்கப் போகின்றது என்பதுதான் தெளிவின்றி நீள்கிறது.

அடுத்த இரண்டு வருடங்களும் தேர்தல்களை முன்னிறுத்தியதாகவே இருக்கப் போகின்றது. மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் பின்னராக பொதுத் தேர்தல் என்கிற நிகழ்ச்சி நிரலே அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னாலுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான எந்த வாய்ப்பும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இல்லை. அதனை, மங்கள சமரவீரவே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கின்றார். அப்படியான நிலையில், தென்னிலங்கைக் கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்கி அல்லாடாமல், புதிய பாதையொன்றை கட்டமைப்பது சார்ந்து இரா.சம்பந்தன் சிந்திக்க வேண்டும். ஏனெனில், தங்களுக்குத் தேவையைானவற்றை முன்வைத்து ஒவ்வொரு தரப்பும் தங்களது அரசியல் பாதையைத் தெரிவு செய்யும் போது, ஒருங்கிணைவு- நல்லிணக்கம் பற்றிய உரையாடலுக்கே வாய்ப்பில்லை. அவ்வாறான புள்ளியிலும் தனித்து நின்று ஆளுமை செலுத்தும் வல்லமையை கூட்டமைப்பு வளர்த்துக் கொள்ள வேண்டும். அது, தென்னிலங்கையின் அரசாங்கங்களிலிடமிருந்து, ஒவ்வொன்றாகவேனும் எமது அதிகாரங்களை பறித்தெடுக்கும் அளவுக்கானதாக இருக்க வேண்டும்.

தேசிய அரசாங்கமொன்றினூடாக நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று அதிகமாக நம்பியவர்களில் சம்பந்தன் முதன்மையானவர். அடுத்தவர் எம்.ஏ.சுமந்திரன். அதற்காக அவர்கள் காட்டிய ஈடுபாடும் அளப்பரியது. அதனாலேயே, அவர்கள் இருவரும் அரசியல்- ஊடக வெளியில் அதிகமாக விமர்சிக்கப்பட்டார்கள். தற்போதுள்ள நிலையில், ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலைக்கு சம்பந்தனோ, சுமந்திரனோ கூட்டமைப்பினைக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது வெளிப்படையானது. குறிப்பாக, மேற்கு நாடுகளின் ஆசிபெற்ற ரணிலின் பிரதமர் பதவிக்கு சிக்கல் ஏற்படுத்தி மஹிந்த ஆளுமை செலுத்தும் அரசாங்கமொன்று உருவாவதை அவர்கள் செய்ய மாட்டார்கள். ஆனால், கிடைத்த சந்தர்ப்பத்தை சில விடயங்களையாவது பெறுவதற்கான கட்டமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே அநேகரின் எதிர்பார்ப்பு.

தன்னுடைய பதவியைக் காப்பாற்றுவதற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப்.போடு நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே ரணில் தயாராக இருக்கின்றார். அவ்வாறான நிலையில், 15 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டமைப்பு ரணிலிடம் எவ்வாறான வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளப் போகின்றது என்பதுவும், அதனை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்லப் போகின்றது என்கிற விடயமும் முக்கியமானது. ஏனெனில், சந்தர்ப்பங்களைக் கையாள்வது சார்ந்து தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் முதிர்ச்சியற்றதன்மை காணப்படுகின்றது என்கிற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக உண்டு. அவ்வாறான நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் தங்களது அரசியல் முதிர்ச்சியையும், தீர்க்கதரிசனத்தையும் வெளிப்படுத்த வேண்டிய தருணமாக இது இருக்கின்றது.

ஜனாதிபதியோடும் பிரதமரோடும் சம்பிரதாயத்துக்காக பேச்சுவார்த்தையொன்றை நடத்திவிட்டு கடந்த மூண்டு ஆண்டுகளாக வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்து வந்தது போல, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையாள்வதை கூட்டமைப்பு தவிர்க்க வேண்டும். ஏனெனில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டமைப்பு மீது மக்கள் வெளிப்படுத்திய அதிருப்தி என்பது இவ்வாறான அசண்டையீன அரசியலின் போக்கினாலும் எழுந்தது. அதாவது, புதிய அரசியலமைப்பினூடாக தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியும் என்கிற ஒரே குறிக்கோளினால், தென்னிலங்கையின் அனைத்து இழுவைக்கும் இசைந்து கொடுத்த நிலை என்பது, தமிழ் மக்களை குறிப்பிட்டளவு எரிச்சற்படுத்தியது. புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புக்கள் தற்போதைக்கு இல்லை என்கிற நிலையில், சில கடிவாளங்களையாவது கூட்டமைப்பு போட வேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியிலிருந்தாலும் நன்மைகளைப் பெறக்கூடியதாக இருக்க வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை சஜித் பிரேமதாசவிடம் செல்லும் பட்சத்தில், ஆட்சித் தலைமைக்குள் மைத்திரியுடன் ரணில் குழப்பகரமான கட்டத்துக்குள் இன்னும் மோசமாகச் சிக்கிக்கொள்வார். அவ்வாறான நிலையில், எதிர்காலத்திலும் ரணிலை காப்பாற்றுவதற்கான கட்டங்கள் கூட்டமைப்புக்கு ஏற்படலாம். அவ்வாறான நிலையில், இனி வரப்போகும் இரண்டு வருடங்கள் என்பது தேர்தல் அரசியல் ரீதியில் மாத்திரமல்ல, அதிகார அரசியல் சார்ந்தும் ஓய்வெடுக்காமலும், சளைக்காமலும் ஆட வேண்டிய அரங்கொன்று கூட்டமைப்பின் முன்னால் திறந்துவிட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் கண்ட பின்னடைவை, ஆட்சியமைக்கும் கட்டங்களில் கூட்டமைப்பு கடந்து விட்டதாகக் கொள்ள முடியும். ஆனால், சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை என்பன ஓரணியில் இணையும் பட்சத்தில் பெரும் குடைச்சல் காத்திருக்கின்றது. அந்தக் குடைச்சலில் இருந்து தப்பி, தமிழ்த் தேசிய அரசியலில் தனக்கான முதன்மையிடத்தை தக்க வைத்தல் என்பது இப்போது திறந்துள்ள அரங்கில் ஆடப்போகும் ஆட்டத்தினைப் பொறுத்தே அமையும்.

பூமாதேவியை மீறிய பொறுமையோடு சம்பந்தனும், சுமந்திரனும் காத்திருந்த போதும் அரசியல் தீர்வுக்கான கட்டங்களை தென்னிலங்கை அனுமதிக்கவில்லை. அவ்வாறான நிலையில், பொறுமையைத் துறந்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்து நின்று ஆக்ரோசமான அரசியலை தென்னிலங்கையோடு ஒவ்வொரு கட்டத்திலும் செய்ய வேண்டும். அதுதான், வீழ்ந்துபோன கூட்டமைப்பின் மீதான நம்பிக்கையை தமிழ் மக்களிடம் வளர்க்கவும் உதவும்.

(புருஜோத்தமன் தங்கமயில்)

-தமிழ்மிரர்

TAGS: