ஜொகூர் டிஏபியின் இந்திய வேட்பாளர்கள் யார், ஆதரவாளர்கள் கேள்வி

நாட்டின் 14-வது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படவிருக்கும் சூழலில், ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் வேட்கையில் எதிர்க்கட்சி கூட்டணியினர் பம்பரமாய் சுழன்று வருகின்றனர்.

இவ்வேளையில், ஜொகூர் டிஏபியைச் சேர்ந்த சில இந்திய ஆதரவாளர்கள், இதுவரை ஜொகூரில் களமிறங்கவிருக்கும் இந்திய வேட்பாளர்களைத் தெரிவிக்காத நிலையில், கட்சியின் மீது அதிருப்தி தெரிவிக்க, இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

ஹராப்பான் கூட்டணியில் முக்கியக் கட்சியாக விளங்கும் டிஏபி இன்றுவரை இந்திய வேட்பாளரை அறிவிக்காதது இந்திய ஆதரவாளர்கள் மத்தியில் பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என இன்றைய சந்திப்புக் கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருந்த சுமதி வடிவேலு தெரிவித்தார்.

“ஹராப்பானின் உறுப்புக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வரும் சூழ்நிலையில், டிஏபி அதில் இன்னும் மௌனம் காப்பது, குறிப்பாக இந்திய வேட்பாளர்கள் விஷயத்தில், வருத்தம் அளிக்கிறது,” என்றார் அவர்.

“நாட்டின் மூத்த எதிர்க்கட்சியான டிஏபி-க்கு, இந்திய சமுதாயம் எப்போதும் தனது ஆதரவை வழங்கி வந்துள்ளது என்பது வரலாற்று உண்மை.

“எனவே, ஜொகூர் டிஏபி, காலம் தாழ்த்தாமல் குறைந்தது 1 நாடாளுமன்றம் மற்றும் 2 சட்டமன்றங்களை இந்தியர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பது ஜொகூர் இந்தியர்களின் நியாயமான எதிர்பார்ப்பு,” என்றும் சுமதி தெரிவித்தார்.