“அவரது (சாமிவேலுவின்) கட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும்”, மகாதிர் கூறுகிறார்

 

மகாதிர் பிரதமராக இருந்த 22 ஆண்டு காலத்தில் அவர் நம்பிய மிக முக்கியமான ஒருவரை நேற்று மாலை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற இந்தியர்களுக்கான பக்கத்தான் ஹரப்பானின் தேர்தல் அறிக்கையை வெளியீடு நிகழ்ச்சியில் அவர் சாடினார்.

மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலுவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய மகாதிர், “தாம் கவனக்குறைவாக இருந்ததற்காக குற்றவாளியாக்கப்படலாம். ஆனால், உங்களை, இந்தியச் சமூகத்தை, குறிப்பிடத்தக்க ஒருவர் பிரதிநிதித்தார் என்று நான் நினைக்கிறேன். ஆனால், அவர் அவ்வளவு பெரியவர், அவருக்கு அப்பால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை”, என்றார்.

“இந்தியர்களின் பிரதிநிதி என்ற முறையில் அவர் வாக்குறுதி அளித்திருந்தவற்றை செய்து கொண்டிருந்தார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரது கடைமைகளை அவர் ஆற்றவில்லை என்று நான் இப்போது தெரிந்து கொண்டுள்ளேன்.

“ஆகவே, அவரது கட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியானதாகும்” என்று பக்கத்தான் ஹரப்பானின் இந்தியர்களுக்கான தேர்தல் அறிக்கையை நேற்று மாலை பெட்டாலிங் ஜெயாவில் வெளியிட்ட போது மகாதிர் கூறினார்.

ச. சாமிவேலு மஇகாவின் தலைவராக 1979 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆண்டு வரையில் இருந்துள்ளார். 2008 ஆம் பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரையில் அவர் மகாதிர் மற்றும் அப்துல்லா படாவில் ஆகியோரின் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.