மகாதிர்: பெர்சத்துவில் எல்லாம் வழக்கம்போல் நடந்து கொண்டிருக்கிறது, ஆர்ஓஎஸ்ஸுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்

பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா(பெர்சத்து)  தற்காலிகமாகக்  கலைக்கப்படுவதாக   சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்)   அறிவித்திருந்தாலும்   அந்த   அறிவிப்புக்கு  எதிராக   மேல்முறையீடு   செய்வதால்  அக்கட்சி   எப்போதும்போல்   தொடர்ந்து  செயல்படும்    என்கிறார்   அதன்   அவைத்   தலைவர்   மகாதிர்   முகம்மட். .

“ஆர்ஓஎஸ்  அறிவிக்கை  கலைக்கப்படுவதாகத்தான்  குறிப்பிடுகிறது,  அது  கட்சியை  ரத்து  செய்தல்   ஆகாது. தற்காலிகக்   கலைப்பு     குறித்து   அறிவிக்கை  கொடுத்த    30  நாள்களுக்குப்  பிறகுதான்  பதிவு   ரத்தாகும்.

“எங்களுக்கு   அது  கலைப்பா,  ரத்தா   என்பது    தெரியவில்லை.  மேல்முறையீடு   செய்வதால்  தொடர்ந்து   ஒரு   கட்சியாக     செயல்பட   முடியும்   என்றே   அனுமானம்  செய்து  கொள்கிறோம்.  முறையீட்டு  விண்ணப்பம்   சம்பந்தப்பட்ட   அமைச்சருக்கு  (உள்துறை  அமைச்சர்)  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடிக்கு அனுப்பப்படும்.

“எங்களைப்  பொருத்தவரை   நாங்கள்  இன்னமும்  செயல்பட்டுக்  கொண்டிருக்கும்   ஒரு   கட்சிதான்.  அதனால்  ஆர்ஓஎஸ்   விளம்பரப்  பலகைகளில்  உள்ள  என்  உருவப்  படத்தை   அகற்ற  முடியாது.

“எங்கள்  பெயரையும்   அடையாளச்   சின்னத்தையும்   மற்றவற்றையும்   பயன்படுத்திக்கொள்ளும்  உரிமை   எங்களுக்கு  உண்டு  என்றுதான்  நினைக்கிறோம்”,  என  மகாதிர்  நேற்று   பெட்டாலிங்  ஜெயாவில்   பெர்சத்து   தலைமையகத்தில்   செய்தியாளர்களிடம்    கூறினார்.

ஆர்ஓஎஸ்  கடிதம்   தற்காலிகக்  கலைப்பு    என்று  குறிப்பிட்டிருப்பது   பெர்சத்து    ‘கலைக்கப்படுகிறதா’  அல்லது   ‘ரத்துச்  செய்யப்படுகிறதா’   என்று  குழப்பம்   அளிக்கிறது    என்றாரவர்.

தவிர,  அறிவிக்கை   அனுப்பப்பட்டதில்  வேறு  சில  முறைகேடுகளும்  உண்டு  என்றார்.

“சட்டப்படி   அறிவிக்கை    யாருக்கு   அனுப்பப்படுகிறதோ   அவர்  கையில்தான்  அதை    ஒப்படைக்க   வேண்டும்   வேறு   யாரிடமும்  கொடுக்கக்  கூடாது.  இங்கு   அது   சம்பந்தப்பட்டவரிடம்    கொடுக்கப்படவில்லை”,  என  மகாதிர்  கூறினார்.

கடிதத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கும்   விவகாரங்களுக்கு  ஏற்கனவே  பதிலளித்து  விட்டதாகவும்    அதற்கான   சான்றுகள்   தங்களிடம்   இருப்பதாகவும்    அவர்  சொன்னார்.

“அமைச்சருக்கு  அனுப்பப்படும்   மேல்முறையீட்டு  விண்ணப்பம்   தோல்வியுற்றால்    பெர்சத்து   நீதிமன்றம்  செல்லும்.

பெர்சத்து  நாளை    பாசிர்  கூடாங்கில்    மாபெரும்  நிகழ்வு  ஒன்றை  நடத்துவதாகக்  கூறிய   மகாதிர்,   அதில்   கட்சியின்   அடுத்த  கட்ட    நடவடிக்கைகள்  குறித்து   மேலும்  பல   தகவல்கள்    அறிவிக்கப்படும்  என்றார்.