ஜிஇ14 :’பிரச்சாரத்தின்போது பிகேஆர் கொடி மட்டுமே பறக்க முடியும்’

வரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பான் இடையில் ‘இரு நீலங்களுக்கு இடையேயான மோதலை’ காணலாம்.

தேர்தல் பிரச்சாரக் காலத்தில், போட்டியிடும் கட்சிகளின் கொடிகள் மட்டுமே ஏற்ற அனுமதிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

நேற்று, ஹராப்பான் தனது நான்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களும் வரவிருக்கும் ஜிஇ14-இல் பிகேஆர் சின்னத்தைப் பயன்படுத்தவிருப்பதை உறுதிபடுத்தியது.

“பிகேஆரின் பெயரில் அவர்களின் வேட்பாளர்கள் போட்டியிட்டால், பிகேஆர் கொடியை மட்டுமே பயன்படுத்த முடியும்,” என்று தேர்தல் ஆணையத் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லா ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் இன்று தெரிவித்தார்.

ஆனால், தேர்தலில் தவறான நடத்தை – அதாவது கொடி அல்லது பொருத்தமற்ற பிரச்சாரப் பொருட்கள் உட்பட – மீதான நடவடிக்கைகள், வேட்பாளர் நியமன தினத்திற்குப் பிறகே தொடங்கும் என அவர் கூறினார்.

பிஎன் வேட்பாளர்கள் ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும் தராசு சின்னத்தையேப் பயன்படுத்தி வரும் வேளையில், ஹராப்பான் கூட்டணியின் அதிகாரப்பூர்வப் பதிவு முயற்சி நிராகரிக்கப்பட்டது.

இவற்றோடு, பெர்சத்து கட்சியின் தற்காலிக கலைப்பும் சேர்ந்துகொண்டதால், அக்கூட்டணியின் அனைத்து வேட்பாளர்களும், 14-வது பொதுத் தேர்தலில் பிகேஆர்-இன் இளம் நீல சின்னத்தையேப் பயன்படுத்தவுள்ளதாக டாக்டர் மகாதிர் முகமட் நேற்று ஜொகூரில் அறிவித்தார்.