சேவியர்:  கெஅடிலானின் “கண்” சின்னம்  ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் சின்னம், வரவேற்கிறோம்  

 

ஹராப்பானின் பொதுச் சின்னமாகக் கெஅடிலானின் கண் சின்னத்தை ஹராப்பான் கூட்டணி தேர்ந்தெடுத்துள்ளதை வரவேற்கிறோம். நஜிப்பின் பாரிசான் அரசாங்கம் நீதிக்குப்  புறம்பாக  ஜனநாயகத்துக்கு எதிரான ரீதியில் கட்சிகளின் பதிவை நீக்கி, அவைகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தில் செயல் பட்டது.

 

பக்காத்தான் ஆனால் பிரதமர் நஜிப் சற்றும் எதிர்பாராதது இன்று நடந்துள்ளது. எல்லா எதிர்க் கட்சிகளும் முக்கியமாக ஜ.செ.க, அமான மற்றும் பார்டி பிரிபூமி ஆகியவை கெஅடிலானுடன் ஒரே சின்னத்தின் கீழ் ஒன்றுபட்ட ஒரு பலமிக்க எதிர் கட்சியினைத் தோற்று வித்துள்ளது என்கிறார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

மலேசியாவுக்கு 14 வது பொதுத் தேர்தல் பற்பல வழிகளில் மிக முக்கியமானதாகும். நஜிப்பின் தலைமையில் இந்நாடு சுமார் 1 டிரிலியன் கடன் என்ற மிக அபாயகரமான தொகையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, அதாவது நூறாயிரம் கோடி வெள்ளி கடன் என்பது எதிர்காலச் சமுதாயத்தை மொத்தமாக அடகு வைப்பதாகும். மக்களால் இன்றைய விலைவாசிகளைச் சமாளிக்க முடியவில்லை.  நாட்டின் கடன் பெருக, நாட்டில் விலைவாசிகள் இன்னும் அதிகரிக்கும். அதே நேரத்தில் நம் பணம் மதிப்பு இழக்கும். அதனைச் சமாளிக்க நாட்டுக்குப் பொறுப்பான அரசு தேவை.

 

நாட்டின் வளம் பல வழிகளில் சூறையாடப்பட்டு வருகிறது, அதனைப் பற்றி விவாதிக்க முடியாமல், சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிக்க  முடியாமல் நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்துறை முடக்கப்பட்டுக் காட்சி பொம்மையாக இயங்குகின்றன என்று கவலைப்பட்டு கொண்டிருப்பதை விட மக்களை அத்தகைய ஆபத்திலிருந்து காக்கச் செய்துள்ள தியாகங்களில் ஒன்றுதான் தங்கள்  சொந்தச் சின்னத்தை விட்டுக் கொடுத்துக் கெஅடிலான் சின்னத்தில் எல்லாக் கட்சிகளும் போட்டியிட முன்வந்துள்ளது என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

குறிப்பாக, நாடாளுமன்றச் சபாநாயகரே அதன் உறுப்பினர்கள் 1 எம்டிபி மகா ஊழல் குறித்த கேள்விகளுக்குத் தடைவிதித்து வருகிறார். அந்த ஊழலை விசாரித்த பேங் நெகாரா, சட்டத்துறை தலைமையகப் பொறுப்பாளர்கள் அவர்களின் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர் அல்லது நீக்கப்பட்டுள்ளனர்.

 

மலேசியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பல ஆயிரம் கோடி பணத்திலிருந்து  வாங்கப்பட்ட சொத்துகள் பல உலக நாடுகளில், கேட்பாரின்றி கைவிடப்பட்டுக் கிடக்கின்றன..   2018 ம் ஆண்டு பொய்ச் செய்தி தடுப்பு சட்டம் வழி மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்த வேண்டிய எல்லா மார்க்கங்களும் அடைக்கப்பட்டு , மக்களை, இன்றைய ஊழல் மிக்க அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக்கப் பெரும்  முயற்சியை நஜிப்  அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

 

அரசியல் கட்சிகள், அவற்றின்  இயக்கம் மற்றும் தேர்தலில் அவற்றின் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் அவற்றின்  உரிமைகளுக்கும் நஜிப்பின் இன்றைய பாரிசான் அரசாங்கம் பற்பல வகைகளில்  தடைகளை ஏற்படுத்தி வருவதை மலேசியர்கள் கண்டு வருகின்றனர்.

 

பத்திரிக்கைகளின் கரங்கள் கட்டப்பட்டுள்ளன, டி.வி 3, அரசாங்கச் சார்பு ஆர். டி,எம் போன்ற ஊடகங்களின் கிளிப்பிள்ளைகளாக மலேசியர்களை மாற்ற நஜிப் கொண்டுள்ள திட்டத்தை இந்த ஒற்றுமைச் சின்னமான  “கண் சின்னம் தகர்த் தெரியும் என்கிறார் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.