பிஎன்னின் சிற்றேடாக மாற, செய்தித்தாள்கள் ‘முடக்கப்பட்டுள்ளன’?

உத்துசான் மலேசியாவின், முன்னாள் எழுத்தாளரான கு செம்மான் கு ஹுசைன் நாட்டின் பிரதான செய்தித்தாள்கள், வெகுஜன ஊடக இயல்பிலிருந்து மாறிவிட்டதாக கூறியுள்ளார்.

இன்று தொடக்கம் பொதுத் தேர்தல் வரை, செய்தித்தாள்கள் தங்கள் இயல்பு பணியிலிருந்து விலகி, பி.என்.-இன் ‘துண்டுப்பிரசுரம்’ ஆக செயல்படும் என்று கு செம்மான் தெரிவித்தார்.

அந்தத் ‘துண்டுப்பிரசுரங்கள்’ பத்திரிகைகள் விற்பனை செய்யும் கடைகளில் வைக்கப்பட்டு, பொதுமக்கள் வாசிக்க விற்பனை செய்யப்படும் என்றார் அவர்.

“இதழியல்? இதழியலாளர்கள்? அது எங்கே உள்ளது?” என்று அவர் கூறினார்.

நேற்றிரவு, புக்கிட் ஜாலில்லில், பாரிசான் தலைவர் நஜிப் ரசாக் வெளியிட்ட ‘என் நாட்டை சிறந்ததாக்குதல்’ எனும் தேர்தல் அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாட்டின் அனைத்து பிரதான செய்தித்தாள்களும் செய்தி வெளியிட்டது பற்றி அவர் இவ்வாறு அறிக்கை விட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

நீண்ட காலமாக, பிஎன்-இன் ஆதிக்கத்தில் இருக்கும் சமூக ஊடகங்கள், பாரிசானின் தேர்தல் அறிக்கைக்குப் பெரிய அளவில் செய்தி வெளியிடுவது வழக்கமாகிவிட்டது.

அதுமட்டுமின்றி, நேற்று இரவு, அரசாங்க மற்றும் தனியார் தொலைக்காட்சிகளும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்தன.

அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மெலாயு (எம்) பெர்ஹாட் நிறுவனத்தில் கு செம்மான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

ஒரு சிற்றேட்டைத் தயாரிக்க, பத்திரிக்கை நடைமுறைகளும் நிருபர்களும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கு செம்மான் கிண்டலடித்தார்.

“எனவே, வாசகர்கள் பத்திரிகைகளை மறந்துவிட்டால், அதன்மீது சந்தேகம் கொண்டால், அவர்களைக் குற்றம்சாட்ட வேண்டாம்,” என்று அவர் கூறினார்.

ஏனென்றால், பத்திரிகைகளுக்கும் கட்சியின் துண்டு பிரசுரங்களுக்கும் இடையேயான வேறுபாட்டை வாசகர்களால் பார்க்க முடியும் என்றார் அவர்.